2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பாடுகள் முன்னறிவித்தல் இன்றி அகற்றப்பட்டமை அரசியல் பழிவாங்கல்

George   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி பள்ளிக்குடா கடற்பரப்பில் போடப்பட்ட சிறகுவலை பாடுகள் முன்னறிவித்தல் இன்றி அகற்றப்பட்டதால் தாம் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாசையூர் மீனவ சங்க முன்னாள் செயலாளர் கிறேசியன் டெமியன், செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார்.

25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 சிறகு வலை பாடுகள் பள்ளிக்குடா கடற்பரப்பில் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளால், முன்னறிவித்தல் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை (18) அகற்றப்பட்டு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே இப் பாடுகள் அகற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட நீரியல்வள திணைக்கள பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.

தமது சங்கத்துக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படாமல் அகற்றியது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாசையூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாவற்கட்டு மீனவச்சங்கம், பாசையூர் மீனவர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்களின் பாடுகளே இவ்வாறு இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன.
வலைகளில் இருந்த கடல் உணவுகள் அகற்றப்பட்டுள்ளன. பைப்புகள் வெட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை பாசையூர் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லாத தினம் பார்த்து இவை கடற்படையினரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் பாடுகளுக்கு போடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இரும்புக்குழாய்களை நீரியல்வள திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் கடற்படையினர் எடுத்து சென்றுள்ளனர். கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்து இப் பகுதி மீனவர்கள் சிலர் பாடுகளை கொள்வனவு செய்து கடலில் அமைத்திருந்தார்கள்.

இவை அகற்றப்பட்டதனால் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் தொழில் இன்றி வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் பேசி முடிவெடுக்க உயர் அதிகாரிகள் முன்வரவேண்டும் என பாசையூர் மீனவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .