2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தென் கடல் பகுதியில் 'கட்டுவலைத் தொழிலை' மேற்கொண்டு வரும் மன்னார் பனங்கட்டிக்கொட்டு  மற்றும் அயல் கிராம மீனவர்களின் கட்டு வலைகளை கடலில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மன்னார் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் மேற்கொண்டமைக்கு   எதிர்ப்புத் தெரிவித்து, பனங்கட்டிக்கொட்டு கிராம மக்கள், புதன்கிழமை காலை 6.15 மணி முதல் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் பிரதான பால வீதியில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள், வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மன்னாரில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

மன்னார்  பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மக்களுடன் கலந்துரையாடியபோது, “உரிய அதிகாரிகள் வந்து தென் கடல் பகுதியில் உள்ள  'கட்டுவலைகளை' அகற்ற மாட்டோம் என உறுதிமொழி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

தொடரந்து, மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர்.

“பனங்கட்டிக்கொட்டு கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கட்டுவலைத்தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.ஆராம்ப காலத்தில் மன்னார் சௌத்பார் தென்கடல் பகுதியில் இரும்புக் குழாய் மூலம் இவ் வலைகள் பாயப்பட்டிருந்தது.

இதனால் அயல் கிராம மீனவர்களின் படகுகளுக்கு சேதம் விளைவிக்கின்றது என்ற கேள்விக்கு அமைவாக இரும்புக்குழாய்கள் மூலம் பாயப்பட்ட வலைகள் இரும்பு பைப் இன்றி மிதவை மூலம் பாயப்பட்டு எந்த விதமான பாதீப்புக்களும் இன்றி நாங்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தோம்.

இந்த நிலையில், தென் கடல் பகுதியில் பாய்ச்சப்பட்டுள்ள கட்டு வலைகள் அனைத்தையும் அகற்றுமாறு கடந்த மாதம் 9 ஆம் திகதி மன்னார் கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்றைய தினம் (நேற்ற)(21)  தென் கடல் பகுதியில் உள்ள கட்டு வலைகளை அகற்ற மன்னார் கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலே, நாங்கள் நீதி கோரி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்” என  மக்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து, கடலில் உள்ள கட்டு வலைகள் அகற்றப்படாது என கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததுடன், கொழும்பில் இருந்து வரும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

அதனையடுத்து, போராட்டத்தை கைவிட்ட மக்கள்,  மன்னார் மாவட்டச் செயலகத்துக்குச் சென்று, கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்குமாறு கூறி மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் மகஜரை  கொடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .