2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்களின் தேவைகள் குறித்து பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் கிளிநொச்சியிலுள்ள பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுருவுக்கும் இடையில் உயர்மட்ட பேச்சுவார்த்தையொன்று நேற்று நடைபெற்றது.


இதன்போது, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோரின் வாகனங்கள், கிளிநொச்சி மத்திய கல்லூரியி;லுள்ள குறைபாடுகள், துணுக்காய் பிரதேசம் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.  
கிளிநொச்சியிலுள்ள பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகத்தில் நேற்று வியாக்ழக்கிழமை நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டது.  
இந்த பேச்சுவார்த்தையின்போது, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோரின் வாகனங்களை மக்களிடம் கையளிப்பதற்கு ஆவன செய்வதுடன், கிளிநொச்சி மத்திய கல்லுரியில் தங்கவைக்கப்பட்டுள்ள 51 குடும்பங்களையும் வேறிடத்துக்கு மாற்றி பாடசாலைக் கட்டடத்தினை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சரிடம், கட்டளை அதிகாரி உறுதியளித்தார்.


வாகனங்கள் கையளிப்பு தொடர்பில் பொதுமக்கள் வாகனங்களுக்கான சரியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவற்றினை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.


துணுக்காய் இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள 28 குடும்பங்களை வெளியேறும்படி இராணுவத்தினர் கேட்டுள்ளமை குறித்து மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பேசியதுடன், இக்குடும்பங்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கட்டளை அதிகாரி, அக்குடும்பங்களை வெளியேற்றுவதில்லை எனவும் கூறினார்.


இதேவேளை, துணுக்காய் பிரதேச இராணுவம் பயன்படுத்தி வரும் பொதுமண்டபத்தினை மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டதுடன், கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு முன்பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் அவர்களைக் குடியமர்த்துவதற்கு இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆவன செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது.


இச்சந்திப்பின்போது,  அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், ரெலோ அமைப்பின் தலைவர் பி.உதயராசா, அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜஸ்ரின் ஆகியோரரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .