2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்களில் கணிசமானளவு கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 18 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்திருந்த பொதுமக்கள் கைவிட்டுச் சென்ற வாகனங்களில் கணிசமானளவு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார்.

மேற்படி வாகனங்களுக்கு உரிமை கோரி வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் ஏனெனில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தின்போது உயிரிழந்திருக்கலாம் அல்லது இடம்பெயர்ந்து வேறிடங்களில் தங்கியிருக்கலாமெனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச செயலாளரூடாக தொடர்புகொண்டு கிராம சேவகர்கள் மூலமாக கைவிடப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், லொறிகள், பிக்கப் வாகனங்கள், ட்ராக்டர் பெட்டிகள், குளிரூட்டி வாகனங்கள், வான்கள், கன்டர் ரக ட்ரக்கள் மற்றும் தெளிகருவி, நீர் இறைக்கும் இயந்திரங்கள் ஆகியன பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு எமக்கு கிடைக்கப் பெற்றன.

எவரும் உரிமை கோராத நிலையில் சைக்கிள்களும் நீர் இறைக்கும் இயந்திரங்களும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  மொத்தமாக 14,557 சைக்கிள்களில் 14,037 சைக்கிள்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

8,254 மோட்டார் சைக்கிள்களில் 1,432  மோட்டார் சைக்கிள்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ் மோட்டார் சைக்கிள்கள் கொழும்பிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஊடாக வாகன பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

29 முச்சக்கரவண்டிகளில் 9 முச்சக்கரவண்டிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 24 லொறிகளில் 15 லொறிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 110 பிக்கப் போவீலர் வாகனங்களில் 32 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 61 ட்ராக்டர் பெட்டிகளில் 17 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 9 குளிரூட்டி வாகனங்களில் 4 குளிரூட்டி வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  54 கன்டர் ரக வாகனங்களில் 26 ஒப்படைக்கப்பட்டுள்ளன. 38 வான்களில் 21 ஒப்படைக்கப்பட்டுள்ளளன. 620 நீர் இறைக்கும் இயந்திரங்களில் பழுது பார்க்கப்பட்டு 600 நீர் இறைக்கும் இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 54 தெளிகருவிகளில் 53 தெளிகருவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடையாள அட்டை, வாகனப் பதிவு புத்தகம், வாகன உரிமைப் பத்திரம் மற்றும் வாகனங்களுக்கான வரி, காப்புறுதி செலுத்திய ரசீதுகளை காட்டி மேற்படி வாகனங்களை உரிமையாளர்கள் பெற்றுச்செல்லலாம் என்றார் அவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X