2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

உண்ணாவிரதமிருந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 17 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் வவுனியா போதனா வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையிலுள்ள நான்கு தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஏழு நாட்களாக நீராகாரமோ அல்லது உணவாகரமோ எதுவுமின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒருவரின்  உடல்நிலை மிக மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்டையன் லோகேஸ்வரன்  (வயது 40) என்பரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நான்கு தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆதரவு தெரிவித்து வவுனியா சிறைச்சாலையிலுள்ள ஏனைய தமிழ் அரசியல்க் கைதிகளும் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மேற்படி கைதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை வந்து பார்வையிட்ட புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் தசநாயக்க, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கைதிகளைக் கேட்டுக்கொண்டார்.  

இருப்பினும் தங்களுக்கு முடிவு கிடைக்கும் வரை தமது உண்ணாவிரதம் தொடருமென தசநாயக்கவிடம் கைதிகள் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். 

இதேவேளை, மேற்படி கைதிகளின் உண்ணாவிரதம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டு  பக்ஸ் மூலம் இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1.வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஒருவார காலமாக நான்கு தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சட்டத்தின்முன் நிறுத்த வேண்டுமெனக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2.அத்துடன் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களை மீண்டும் கைதுசெய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3.உண்ணாவிரதிகளின் உடல்நிலையை அவதானித்து வரும் மருத்துவர்கள் கட்டையன் லோகேஸ்வரன் என்பவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கிட்டத்தட்ட சுயநினைவிழக்கும் நிலையை அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

4. நான்கு அரசியல் கைதிகளும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலிருந்து தங்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.

5.நேற்று சனிக்கிழமை    முதல் நான்கு உண்ணாவிரதிகளுக்கு ஆதரவாக மேலும் உள்ள 42 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

6.எனவே தாங்கள் தங்களது பிரதிநிதியை உடனடியாக அனுப்பி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு உண்ணாவிரதிகளின் மீது கொண்டுள்ள அக்கறையினாலும் மக்களின் நலன்சார்ந்தும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

7.உங்களது சரியான மற்றும் துரிதமான நடவடிக்கையானது ஏனைய இடங்களில் முறையான சட்ட நடவடிக்கைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளிடையே ஏற்படக்கூடிய பதற்றத்தைத் தணிக்க உதவும் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோ ம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--