2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

மன்னார் நீதிமன்ற தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.ஜெனி)

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த 5 சந்தேக நபர்களும்  நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மேல் நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களிலும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போதே இந்த  நீதிமன்றங்களின் நீதிபதிகள் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 18ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்களினால் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுச்சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த தாக்;குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள், 43 சந்தேக நபர்களை  கைதுசெய்தனர் அவர்களில்; 38 சந்தேக நபர்கள் கட்டம் கட்டமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஏனைய 5 சந்தேக  நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த 5 சந்தேக நபர்களும்; நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி; பிணை மனுவை தாக்கல் செய்தார். அதனை நிராகரித்த  நீதிபதிகள் அந்த ஐந்து சந்தேக நபர்களுக்கான விளக்கமறியலை நீடித்தனர்.

இதேவேளை,  மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் சந்தேக நபர்களில் ஒருவர் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் தலைமறைவாகி உள்ளார். அந்த சந்தேக நபரை உடனடியாக கைதுசெய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு பகிரங்க பிடியாணை ஒன்றை நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க பிறப்பித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .