2021 மார்ச் 06, சனிக்கிழமை

தொழிற்சங்க ஊழியர் போராட்டங்கள் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது: சத்தியலிங்கம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தொழிற்சங்கங்கள் தங்களது ஊழியர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்துகின்றபோது, அப்போராட்டங்களினால்  பொதுமக்களுக்கான சேவைகளில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு  கூறினார்.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றமொன்றில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகருக்கும்; பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்குமிடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; முறுகல் நிலையாக மாறியதால் யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு சுகாதார அமைச்சில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இதனை ஆட்சேபித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே வடமாகாண சுகாதார அமைச்சருடன் முக்கிய சந்திப்பு வட மாகாண சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

'சுகாதாரத்துறையென்பது பொதுமக்களுக்கான அத்தியாவசிமான சேவையாகும். எனவே நாம் அனைவரும் பொதுமக்களுக்கான சேவையை திறம்படச் செய்தல் வேண்டும். அடுத்துவரும் மாதங்கள் மழைக்காலமாகும். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் மழை பெய்யும்போது அதிகளவிலான டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.  இந்தநிலையில், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பென்பது பொதுமக்களுக்கான சுகாதார சேவையை பெரிதும் பாதிக்கும். எனவே உங்கள் உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பொதுமக்களின் சுகாதார சேவைகள் பாதிக்கப்படாது பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .