2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் கழுதைகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் தற்போது 1,000 இற்கும் அதிகமான கழுதைகள் காணப்படுவதுடன், மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 400 கழுதைகள் காணப்படுவதாக டயஸ்போரா லங்கா அமைப்பின் திட்ட இணைப்பாளர் கெல்வின் பர்னாந்து தெரிவித்தார்.

இதேசமயம்,  மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் பிராணியாக கழுதைகள்  உள்ளனவெனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இலங்கையிலுள்ள  ஏனைய மாவட்டங்களை  விட, மன்னார் மாவட்டத்தில் அதிகளவாக கழுதைகளின்  நடமாட்டம் உள்ளது. இதனால்,  மன்னார் நகரானது 'கழுதை நகரம்' எனச் செல்லமாக அழைக்கப்படுகிறது.

கழுதைகள் எழுப்பும் ஒலி தென்னந்தோப்புகளிலுள்ள வண்டுகளை துரத்துவதால், இலங்கையின் பல இடங்களிலுமுள்ள தென்னந்தோட்ட உரிமையாளர்கள் மன்னாரிலுள்ள  கழுதைகளை கொண்டுசெல்வதற்காக வருகின்றனர்.

இதேவேளை, மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் இக்கழுதைகள் சுற்றுலாப் பயணிகளையும்  இலகுவாக கவர்ந்துவிடுகின்றன.

இந்நிலையில், இக்கழுதைகள் சரியான  பராமரிப்பின்றி இருப்பதைக்  கண்டு சுற்றுலாப் பயணிகள் பரிதாபப்படுகின்றனர். வீதிகளில் அலைந்து திரியும் இக்கழுதைகளுக்கு பாதுகாப்பான தங்குமிடம் தேவையெனவும் சுற்றுலாப் பயணிகள் கருதுகின்றனர்.

இக்கழுதைகளை சரியான முறையில் பயன்படுத்தினால்  மன்னாரின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமெனவும் கருதப்படுகிறது.
இது இவ்விதமிருக்க, சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டு இயற்கை நலன் விரும்பிகளும் மன்னாரிலுள்ள கழுதைகளை பராமரிப்பதன் மூலம், மன்னாரில்; சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பில் மன்னார் நகரசபையுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளனர். ஆனால், இதற்கு தகுந்த ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
'
மன்னாரின் மறுமலர்ச்சி 2022' திட்டத்தின் கீழ், கடந்த வருடம் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு வருகைதந்த மிருக வைத்திய நிபுணர்குழுவானது மன்னாரிலுள்ள கழுதைகளுக்கு  மருத்துவ சிகிச்சை அளித்ததுடன்,  விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையும் மன்னார் நகரசபை மற்றும் மிருக வைத்திய அதிகாரியுடன் இணைந்து  நடத்தியமை வரவேற்கத்தக்கது.

மன்னாரிலுள்ள சில பாடசாலைகளிலும் குறிப்பாக சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி, சாந்திபுரம் ஆரம்ப பாடசாலையிலும் மற்றும் சில பொது இடங்களிலும் கழுதைகளை பராமரிப்பது தொடர்பிலும் இவற்றின் நன்மைகள் தொடர்பிலும்; விழிப்புணர்வுக் கருத்தரங்குகள்   மாதர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து   மாணவர்கள் பலர் கழுதைகள் தொடர்பில்; ஒரு வகையான நேர் நிலையான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். 

இங்கிலாந்தில் மிகுந்த வெற்றியளித்த மாற்றாற்றல் உள்ளோருக்கான கழுதைகள் மையப்படுத்தப்பட்ட உளநல சிகிச்சையை, மன்னாரில்; ஆரம்பிப்பது தொடர்பில் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆங்காங்கே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால்,  தற்போது மன்னாரிலுள்ள ஒரு சில குடும்பங்கள் மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக கழுதைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களால் வளர்க்கப்படும் கழுதைகள் மன்னாரிலுள்ள மாற்றாற்றல் நிறுவனத்திலுள்ள பிள்ளைகளின் சிகிச்சைக்காக கையளிக்கப்படும்.

ஆரம்ப காலங்களில் இலங்கைக்கு வியாபார நோக்கத்திற்காக வருகை தந்த இஸ்லாமிய வணிகர்களே கழுதைகளை தங்களது தேவைக்காக கொண்டுவந்தனர். மன்னாரிலுள்ள கழுதைகள் கி.பி. 8ஆம் நூற்றாண்டுகளில் சோமாலியாவிலிருந்து வருகை தந்த இஸ்லாமிய வணிகர்களால் கொண்டுவரப்பட்டதென்று ஆய்வுகள் சான்று பகர்கின்றன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .