2026 மார்ச் 04, புதன்கிழமை

மன்னார் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு எதிராக, மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், புதன்கிழமை (20) காலை முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கடலுணவு பொருட்களைக் கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வரும்  வர்த்தகரான வெற்றிவேல் தயானந்தன் (வயது-40) என்பவரே, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில், கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து நான் வசித்து வருகின்றேன்.

கடல் உணவு பொருட்களைக் கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வருகின்றேன்.

எனது சுய கௌரவத்தை உதாசீனம் செய்யும் வகையில் பாதுகாப்பு தரப்பினர், தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இரவு 10 மணியளவில், மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள எனது வீட்டுக்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பொலிஸார், மோப்ப நாய் ஒன்றைக் கொண்டு வந்து,  எனது வீட்டை முழுமையாக சேதனையிட்டனர்.

எனது வீட்டில், சட்ட விரோதமான பொருட்கள் உள்ளதாகக் கூறியே சோதனைகளை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

அருட்தந்தை ஒருவர் வீட்டுக்கு வந்து, சோதனை முடியும் மட்டும், எனது குடும்பத்துக்கு ஆதரவு தந்தார்.

மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார், எவ்விதமான சந்தேக பொருட்களையும் கைப்பற்றவில்லை.

இறுதியாக தவறான தகவல் என கூறி, நடந்தவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துவிட்டுச் சென்றனர். குறித்தச் சம்பவத்தால் எனது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

கிராமத்தில் மக்கள் மத்தியில் கௌரவமாக வாழ்ந்து வரும் எனது குடும்பத்தின் கௌரவத்தை சீர்குழைக்கும் வகையில், பொலிஸாரின் செயற்பாடு அமைந்துள்ளது.

இதேபோன்று, கடந்த 27-03-2012 அன்று காலை 7.35 மணியளவில் எனது வீட்டுக்கு வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர், எனது வீட்டை சுற்றிவளைத்து தேடுதல்களை மேற்கொண்டதுடன், பின்னர் தவறான தகவல் என கூறிச் சென்றனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இத்தகைய சம்பவங்கள், எனது நற்பெயருக்கும் சுய கௌரவத்துக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதோடு, எனது கிராம மக்கள் மத்தியில் சந்தேக பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில், எனது வீட்டுக்கு வந்து சோதனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விளக்கத்தை வழங்க வேண்டும்.

அத்துடன், தவறான தகவலை வழங்கிய குறித்த நபருக்கு எதிராக, விசாரணைகளை மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .