2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; பழி தீர்க்குமா இந்தியா?

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ளது. விறுவிறுப்பாக மிக அதிகமாக இந்த தொடர் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வைத்து நீண்ட நாட்களுக்கு பின் பலமான அணி ஒன்று இந்தியாவை எதிர்கொள்கின்றது. இதுதான் அதற்கு காரணம். டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறது இந்திய அணி. இதன் காரணமாக இந்திய அணி மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வைத்து அண்மையில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றாலும் கூட மிக அதிகமான திருப்தி அதிகளவில் இருக்கவில்லை. இந்த வருட ஆரம்பப் பகுதியில் அவுஸ்திரேலியாவில் வைத்து 4 - 0 என்ற ரீதியில் மிக மோசமாக இந்திய அணி தோல்விகளை சந்தித்த பினனர் இப்போதுதான் பலமான அணியை சந்திக்கின்றது. இந்த தொடருக்கு முன்னர் இங்கிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை இங்கிலாந்தில் வைத்து பெற்றுக் கொண்டது (இடையில் மேற்க்கிந்திய தீவுகள் அணியை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது). இவை இந்திய அணிக்கு பாரிய பின்னடைவுகளை தந்தன. அந்த அடியில் இருந்து இந்திய அணி மீளவில்லை. மீள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

அணியில் மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன. அது மட்டுமல்லாமல் இந்த தொடரும் மாற்றங்களை தரப்போகின்றது என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக மூவர் செய்து காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். இல்லாவிட்டால் இவர்களின் இடம் காலி என்ற நிலை. முதலாமவர் விரேந்தர் சேவாக். டோணிக்கும் இவர் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் இவரின் துடுப்பாட்டம் மிக மோசமாகவே இருந்து வருகிறது. அடுத்தவர் கெளதம் கம்பீர். இந்திய அணியின் நிச்சயமான வீரர் என்ற நிலையில் இருந்து வந்தவர். அவரின் நிலை இப்போது கேள்வியாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் செய்து காட்டினால் அணியில் இடம் உண்டு. இல்லாவிட்டால் இந்த தொடர் நடைபெறும் வேளையில் இவர்கள் இடம் பறிபோக வாய்ப்புக்கள் உள்ளன. மூன்றாமவர் சச்சின் டெண்டுல்கார். மிக பெரிய அழுத்தம் அவர் மீது இப்போது உள்ளது. இந்த தொடரில் ஒரு சதமாது இவர் அடிக்காவிட்டால் அடுத்த கட்டம் கேள்வியே. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் நேரம் வரும் என்றே சொல்லலாம். மற்றவர்கள் மீது பெரியளவில் அழுத்தம் இல்லை. டோணி செய்து காட்ட வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் ஒன்று அவர் மீது இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய ஊடங்கள் இதில் அதிகம் அக்கறையாக இருக்கின்றனர். இந்த நிலையில் தொடரில் வெற்றி பெற வேண்டும்.


துடுப்பாட்டம் சரியாக செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. யுவராஜ் சிங் இன் டெஸ்ட் மீள்வருகை இது. நிச்சயம் செய்து காட்டுவார் என்று நம்ப தோன்றுகிறது. உள்ளூர் போட்டிகளில் அடித்த இரட்டைச் சதம் அணிக்குள் வாய்ப்பை தந்தது. பொதுவாக இவரின் மீள்வருகை எப்போதும் அபாரமாக இருக்கும். இம்முறையும் அப்படி இருக்குமா? பார்க்கலாம். விராத் கோலி இந்திய அணியின் நம்பிக்கை நட்ச்சத்திரம். செட்டேஸ்வர் புஜாரா மூன்றாமிலக்கத்தில் சிறப்பாக செய்தாலும் இன்னும் நிரூபித்து காட்ட வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றார். இவர்கள்தான் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள். பந்துவீச்சில் நால்வரும் சிறப்பாக உள்ளார்கள். ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு வருகிறார். வேகமாக 50 விக்கெட்களைக்  கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனை அவர் வசம் வர காத்திருக்கின்றது. அவருக்கு ஈடாக பிரக்ஜன் ஓஜா சிறப்பாக பந்து வீசி வருகின்றார். வேகப் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் இந்த வருடத்தில் கூடுதலான விக்கெட்களை இந்திய அணி சார்பாக கைப்பற்றியவர். மற்றவர் சகீர் கான். இந்திய அணி இப்படித்தான் அமையும். 


இங்கிலாந்து அணி சிறந்த டெஸ்ட் அணியாக இருந்து வருகின்றது. இந்தியாவில் வைத்து இவர்கள் பெரியளவில் செய்து காட்ட மாட்டார்கள் என்று நினைத்தால் பயிற்சிப் போட்டிகளில் அவர்கள் துடுப்பாடிய விதம், போர்ம் என்பவற்றை பார்க்கும் போது இந்திய அணிக்கு பெரிய சவால் காத்திருக்கின்றது என்றே சொல்லலாம். கெவின் பீற்றர்சன் தன் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். இவர் பெரிய பலம். குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் ஓட்டங்களை குவிக்கக் கூடிய ஒருவர். அன்று ஸ்ட்ரோச்சிடம் இருந்து அணித் தலைமை பொறுப்பை அலிஸ்டயர் குக் எடுத்து தலைமை தாங்கும் முதல் தொடர். நிச்சயம் அவர் மீது ஓர் அழுத்தம் இருக்கப் போகின்றது. ஆனால் இவரும் பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக துடுப்பாடி தன் போர்மை வைத்துள்ளார். தன் டெஸ்ட் அறிமுகத்தை இந்தியாவில் மேற்கொண்ட இவர் அறிமுக தொடரில் சதமடித்தவர். இந்தியாவில் வைத்து மிக அபாரமாக துடுப்பெடுதாடியுள்ளார். அன்று ஸ்ட்ரோஸ் இன் இடம் யாருக்கு என்பது நிச்சயமாக சொல்ல முடியாவிட்டாலும், பயிற்சிப் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய 29 வயதான நிக் கொம்ப்டன் களமிறங்குவார் என எதிர் பார்க்கலாம். மூன்றாமிடம் ஜொனதன் ரொட். நல்ல துடுப்பாட்ட வீரர். இந்தியாவில் வைத்து முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போகின்றார். இவருக்கு நிச்சயம் தன்னை நிரூபித்து காட்ட நல்லதொரு தருணம் இது. அடுத்தவர் கெவின் பீற்றர்சன். 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவில் வைத்து விளையாடியுள்ளார். துடுப்பாட்டம் நல்ல முறையில் அமைந்துள்ளது. அடுத்தது இயன் பெல். அணிமைக்காலமாக இங்கிலாந்து அணிக்கு ஓட்டங்களை குவிக்கும் ஓட்ட இயந்திரமாக மாறியுள்ளார். அது இந்திய ஆடுகளங்களில் சாத்தியமா என்பதை அவரே செய்து காட்ட வேண்டும். ஒய்ன் மோர்கன் விளையாடுவார் என்று எதிர் பார்த்தாலும், சமிட் பட்டேல் அவருக்கு பெரிய போட்டியாக இருக்கிறார். சமிட் பட்டேல் சுழல்ப் பந்து வீசும் சகல துறை வீரர். பயிற்சிப் போட்டிகளில் சதம் அடித்தும் உள்ளார். அவருக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விக்கெட் காப்பாளர் மத் பிரையர். அவரின் இடமும் உறுதி. பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட் நிச்சயம் விளையாடுவார். துடுப்பாட்டம் மேலதிக பலம். இவருடன் ஜேம்ஸ் அன்டர்சன் விளையாடுவார். ஸ்டீவன் பின், டிம் பிரஸ்னன் ஆகியோர் மாறி மாறி விளையாட வாய்ப்புக்கள் உள்ளன. சுழல்ப் பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசை மிகப் பலமானது. நீண்டது. அதை தகர்க்க இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் மிகப் பெரியளவில் போராட வேண்டி இருக்கும். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சும் பலமே. குறிப்பாக வேகப் பந்து இந்தியாவின் துடுப்பாட்ட வீரகளுக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை.  


ஆக இந்த இரண்டு அணிகளுக்குமான இந்த தொடர் மிகுந்த போட்டியாக இருக்கும் என்று நம்பலாம். இந்திய அணி தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆனால் இங்கிலாந்து அணி இங்கிலாந்தில் வைத்து வெள்ளையடிப்பு செய்ததற்கு பழி தீர்ப்பது கஷ்டமே. இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெல்லும் என்று நம்பலாம். இங்கிலாந்து வெற்றிகளை பெறுவது கடினமாகவே  இருக்கும். ஆனால் ஒரு போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பையும் வழங்க முடியும். 

அணி விபரம்

இந்திய அணி (முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி)
MS.டோணி, விராத் கோலி, விரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், செட்டேஸ்வர் புஜாரா, யுவராஜ் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின், பிரக்ஜன் ஓஜா, சகீர் கான், உமேஷ் யாதவ், ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், அஜிங்கயா  ரெஹானே.

இங்கிலாந்து அணி
அலிஸ்டயர் குக், கெவின் பீட்டர்சன், நிக் கொம்ப்டன், ஜொனதன் ரொட், இயன் பெல். சமிட் பட்டேல், மத் பிரையர், ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் ஸ்வான், ஸ்டீவன் பின், ஒய்ன் மோர்கன், டிம் பிரஸ்னன், கிரகாம் ஒனியன்ஸ், ஜொனி பெயர்ஸ்டோவ். ஸ்டுவோர்ட் மீகர், மொன்டி பனசர், ஜோ ரூட் 

கூடுதலான ஓட்டங்களை இந்தியாவில் வைத்து பெற்றுக் கொண்டவர்கள்


கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்


இரண்டு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் 1932ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆரம்பமானது. 29 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 16 தொடர் வெற்றிகளையும், இந்திய அணி 09 தொடர் வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை 04 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இதில் 16 தொடர்கள் இங்கிலாந்திலும் 13 தொடர்கள் இந்தியாவிலும் நடை பெற்றுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற தொடர்களில் 04 இல் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 03 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 06 தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற 16 தொடர்களில் இங்கிலாந்து அணி 12 தொடர்களிலும் இந்திய அணி 03 தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 01 தொடர் மாத்திரமே சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இரு அணிகளும் இதுவரை 103 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 38 போட்டிகளிலும், இந்திய அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இந்தியாவில் வைத்து 51 போட்டிகளில் 14 இல் இந்தியா வெற்றி. 11 இல் இங்கிலாந்து வெற்றி. 26 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

போட்டி அட்டவணை

முதற்ப் போட்டி        -  நவம்பர்   15 – 19,  அஹமதாபாத் - இலங்கை நேரம் காலை 9.30 
இரண்டாம் போட்டி - நவம்பர்    23 - 27,   மும்பை - இலங்கை நேரம் காலை 9.30 
மூன்றாம் போட்டி   - டிசெம்பர்  05 - 09,   கொல்கொத்தா - இலங்கை நேரம் காலை 9.00 
நான்காம் போட்டி    - டிசெம்பர் 13-17,       நாக்பூர் - இலங்கை நேரம் காலை 9.30

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .