2021 மே 08, சனிக்கிழமை

இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் தோல்வி; எதிர்காலம்..??

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இந்தியா அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றது என்றாலே அதிகம் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பதை இந்த தொடரும் நிரூபித்துள்ளது. இந்திய அணிக்கு ஆதரவு தருபவர்கள் ஒரு பக்கம். இந்திய அணி எப்போது சரியும் என பார்த்து சந்தோசப்படும் இந்திய அணியின் எதிர் ரசிகர்கள் ஒரு பக்கம் என இந்திய அணி பக்கம் ஒரு பார்வை அதிகம் இருக்கத்தான் செய்கின்றது. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்க தொடர் நடைபெற்ற போதும் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரே அதிகம் பேசப்பட்டது. ஏன் இலங்கை, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி மிக விறுவிறுப்பான கட்டத்தில் இருந்தும் கூட சமநிலையில் முடியப்போகின்றது என எதிர்பார்க்கப்பட்ட இறுதி டெஸ்ட் போட்டி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.  


இந்த தொடர் ஆரம்பித்த வேளையில் இந்திய அணி மிக இலகுவாக வெற்றி கொள்ளும். இங்கிலாந்தில் வைத்து வெள்ளையடிப்பு செய்ததற்கு பழி தீர்க்கும் இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றால்போல முதல் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. ஆனாலும் இங்கிலாந்தின் மிக அபாரமான மீள் வருகை இந்திய அணியை சுருட்டிப் போட்டது. இங்கிலாந்து அணி ஒரு போட்டியை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்து இருந்தாலும் அவர்கள் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது, அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக உள்ளார்கள் என்பதை மிக சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளது. இதிலும் முக்கியமாக 28 வருடங்களின் பினனர் இந்தியாவில் வைத்து இங்கிலாந்து அணி தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. அலிஸ்டயர் குக் - டெஸ்ட் பொறுப்பை ஏற்ற முதல் தொடர். இந்தியாவில் வைத்து மிகப் பெரிய அழுத்தம் இருக்கும், எப்படி செய்யப் போகின்றார் என பார்க்க சத்தமில்லாமல் ஓட்டங்களை குவித்து தலைமை பொறுப்பையும் மிக சிறப்பாக செய்து இந்திய அணியின் வில்லனாகி விட்டார். அழுத்தங்களை நல்ல முறையில் எதிர்கொள்ளும் சிறந்த தலைவர் என இவரை நிச்சயம் கூற முடியும். ஒரு நாள்ப் போட்டிகளில் அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது அணித் தலைமை பொறுப்பை ஏற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அவரும் ஓட்டங்களை குவித்துக் கொண்டார். இப்போது டெஸ்ட் போட்டிகளிலும் அதே நிலை. நல்ல சமநிலை அணியும் அவருக்கு கிடைத்துவிட்டது. ஆனால் இந்திய அணிக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய பெருந்தன்மையான விடயம் யார் புதிதாக அணிக்குள் வருகிறார்களோ, புதிய பொறுப்புக்களை எடுக்கிறார்களோ அவர்கள பெரியவர்கள் ஆக்குவது. மொன்டி பனீசர் விளையாடுவாரா என்ற கேள்வியே இருந்தது. மிகப் பெரிய பந்து வீச்சாளர் ஆக்கிவிட்டார்கள். அதேபோலதான் குக் இன் தலைமை பொறுப்பையும் போற்ற வைத்து விட்டார்கள்.


இந்த தொடர் நடைபெறும்போதே இந்திய அணி மீது விமர்சனங்கள், அதிருப்திகள் எழும்ப தொடக்கிவிட்டன. டோனி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. சச்சின் ஓய்வு பற்றி அறிவிக்காமலே அவர் ஓய்வு பெறுகிறார் என்று சொல்லுமளவிற்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. டோனி எதிர்பார்த்த அணி இப்போது அவருக்கு கிடைத்துவிட்டது. டிராவிட், லக்ஸ்மன் ஆகியோர் வேண்டாம் என்று இருந்தவர் அவரே. அவர்கள் அணியில் இல்லை. இள வயது வீரர்கள் அணியில் இப்போது உள்ளனர். இனி அணியில் அவருக்கு பிரச்சினை இருக்காது. கப்டன் கூல் (Captain cool) என்று அழைக்கப்பட்டாலும் அண்மைக்காலமாக அவர் நடந்துகொள்ளும் விதம் அப்படி தெரியவில்லை. செவாக் மோதல். அதன் பின்னர் லக்ஸ்மனின் வெளியேற்றம், அண்மையில் ஆடுகள நிபுணருடன் மோதல், பின்னர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரின் உதவியுடன் அணித்தலைவர் பொறுப்பை தக்க வைத்துள்ளார் இப்படி அடுக்கப்படும் சர்ச்சையான விடயங்கள் இந்திய ரசிகர்களுக்கும் டோனி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை.

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் ஓர் அணித் தலைவரை தேட வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் அப்படி ஒருவர் இந்திய அணியில் தயாராக இல்லை. செவாக், கம்பீரின் இடம் உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தலைமை பொறுப்பை ஏற்கும் அளவிற்கு விராத் கோலி இன்னும் தயராக இல்லை. இப்படி இந்திய அணியின் எதிர்காலம் கேள்வியாக உள்ளது. யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங்க் ஆகியோர் போட்டிகளுக்கு சேர்க்கப்பட்டு பின்னர் அதிரடியாக அணியால் நீக்கப்பட்டனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் முதல்ப் போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக துடுப்பாடி 74 ஓட்டங்களை குவித்தவர். அவ்வளவு விரைவாக ஏன் அணியால் அனுப்பப்பட்டார் என்பது கேள்வியே. இந்திய அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளராக இருந்த சகீர் கான் இறுதிப் போட்டிக்கான அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.

இந்த தொடருக்கான அணியை தெரிவு செய்து இருந்தது புதிய தெரிவுக் குழு. இந்திய அணி புதிய பாதையை டெஸ்ட் போட்டிகளிற்கு தேடவேண்டிய நிலை உள்ளது. சச்சினின் அடுத்த கட்டம் என்ன? அழுத்தம் அதிகாமகிக் கொண்டே செல்கிறது. போர்மில் இருக்கின்றார். ஆனால் ஓட்டங்களைப் பெற முடியவில்லை. ஓய்வு பெற்றால் அவர் தன் நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வார் என அவரின் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். இனி சச்சின் போதும் என்று அணி முகாமைத்துவம் முடிவு செய்யும் காலமும் வெகு தூரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.

செவாக்கின் எதிர்காலம் நோக்கியும் இந்திய கிரிக்கெட் முகாமைத்துவம் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு தொடரில் சதம் அடித்து விட்டு தொடர்ச்சியாக அணியில் இடம் பிடித்து கொள்ளும் ஒருவராகவே இருந்து வருகின்றார். அடித்த சதம் அழுத்தத்தை குறைத்த பின் ஓட்டங்களைப் பெற முடியவில்லை. கெளதம் கம்பீரின் நிலையும் இப்படியே இருக்கிறது. இந்த ஜோடி நல்ல ஆரம்பங்களை வழங்கிய வேளைகளில் லாபகரமாக வெற்றிகளை இந்திய அணி பெற்றுக் கொண்டது. இவர்கள் வீழ்ந்தால் வெற்றிகளை பெற்றுக்கொள்ள கஷ்டமாக உள்ளது. இப்படி பல விடயங்களை கதைக்க முக்கியமான காரணமாக உள்ளது, இந்தியா அதிகளவிலான மட்டுப்படுதப்பட்ட ஓவர்கள் போட்டிகளிற்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது வெளிப்படை உண்மை.

இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் இதுதான் வித்தியாசம். IPL போட்டி தொடர், சம்பியன் லீக் போட்டி தொடர் என பணம் உழைக்கும் போட்டிகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடவும், ஏற்பாடு செய்யவும் இந்திய முகாமைத்துவம் அதிகம் ஈடுபாடு காட்டுகிறது. இங்கிலாந்து, அவுஸ்திரேலிய போன்ற நாடுகளில் நிலைமை வேறு. முதற் தர போட்டிகளிற்கு முகாமைத்துவமும், வீரர்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுதான் அவர்களின் வளர்ச்சிக்கும் வெற்றிகளிற்கும் முக்கிய காரணம். இந்தியாவில் இந்த நிலை மாறப் போவதில்லை. ரஞ்சிக் கிண்ண போட்டிகளில் வீரர்கள் பிரகாசிக்கின்றனர். அணிக்குள் வருகின்றனர். சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மிகக் குறைவு. அவர்கள் எப்படி தொடர்ச்சியாக தம்மை வளர்த்துக்கொள்ள முடியும்? இந்த தொடரில் இந்தியா சார்பாக எந்த புதிய வீரையும் குறை கூற முடியாது. மூத்த வீரர்கள் நிறையவே சொதப்பும் போது அவர்கள் என்ன செய்ய முடியும்? இவற்றை இந்தியா எப்போது நிவர்த்தி செய்கிறதோ அப்போதுதான் டெஸ்ட் வெற்றிகளை முக்கிய அணிகளுக்கு எதிராக பெற்றுக்கொள்ள முடியும். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியில் இந்திய பற்றி அதிகம் யோசிக்கத் தேவையில்லை. இவர்கள் அனைவரையும் தாண்டி அணியின் பயிற்றுவிப்பாளர் என்ன செய்கிறார்? இங்கிலாந்து அணியின் மோசமான பயிற்றுவிப்பாளராக இருந்த டங்கன் ப்ளச்சர். இவரின் ராசி இந்திய அணியை துரத்துகிறதா? அல்லது அவரின் பயிற்றுவிப்பு அவ்வளவு மோசமாக உள்ளதா? இந்த தோல்விகளுக்கெல்லாம் பலிக்கடா அவரா? இங்கிலாந்து அணியின் விளையாடப் போகும் ஒரு நாள்ப் போட்டி தொடரில் இந்திய அணி வெல்லும் என்று நம்பலாம். அப்படி வென்றால் இந்த டெஸ்ட் தோல்வி எல்லாம் மறந்து இந்திய அணி நல்ல அணியாக மாறிவிடும். இந்தியாவின் கிரிக்கெட் இப்படியே ஓடும். டெஸ்ட் போட்டிகளின் மிக பலமான சிறந்த அணியாக மாற கஷ்டப் பட வேண்டி இருக்கும். 

இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளிற்கும், முதற்தர போட்டிகளிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். வீரர்களை கணிப்பிடவும், தொடர்ந்து தங்களை வளர்த்துக் கொள்ளவும் அது வாய்ப்பாக அமைகின்றது. இங்கிலாந்து அணி விளையாடிய போட்டிகள் முக்கியமான பலமான அணிகளுடனும் கூட. எனவே சமநிலையான அணியாக தென்படுகிறது. அன்று ஸ்ட்ரோஸ் அவர்களின் முக்கிய டெஸ்ட் வீரர் விலகியும் கூட அந்த இடைவெளி தெரியாமல் அணியை தயார் செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்தியா வைத்த பொறியை மாற்றி அவர்களுக்கே வைத்து வெற்றி பெற்றுக் கொண்டது. சுழல்ப் பந்து என்னும் பொறியே அது. அதுவும் மொன்டி பனீசரிடம் மாட்டிக் கொண்டது இந்திய அணி. இன்னும் ஒரு பக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதும் அவர்கள் ஆடுகளங்கள் பற்றியும், காலநிலை பற்றியும் தெரிந்து பழகி வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் வீர்கள், அவர்களின் பலம், பலவீனம் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்புக்கள் உள்ளன. இவற்றை எல்லாம் விட அலிஸ்டயர் குக்கை வளர்த்து விட்டதும் இந்தியாவே. அவரின் ஆரம்ப கால பயிற்சிகள், இந்தியாவில் உள்ள பயிற்சி நிறுவனங்களில் வைத்தே நடந்தன. உண்மையில் கிரிக்கெட் என்று பார்க்கும்போது நல்ல விடயம் என்றாலும் இந்தியாவிற்கு அது பதிப்பையே தந்துள்ளது. இப்படி இந்தியா அறிந்தோ அறியாமலோ விட்ட தவறுகள் கூட தோல்விகளுக்கு காரணமாகவும், இங்கிலாந்து அணியின் வெற்றிகளுக்கு காரணமாகவும் இருந்து இருக்கலாம்.


இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
அலிஸ்டயர் குக்                    4    8    562    190      80.28    43.73    3    0
செற்றேஸ்வர் பூஜார           4    7    438    206*    87.60     46.74    2    0
கெவின் பீற்றர்சன்                4    7    338    186      48.28     57.67    1    2
ஜோனதன் ற்ரொட்               4    7    294    143      42.00     40.55    1    1
மத் ப்ரையர்                             4    5    258       91      51.60     46.90    0    2
விரேந்தர் செவாக்                 4    7    253    117      36.14     90.35    1    0
கெளதம் கம்பீர்                        4    6    251      65      41.83     43.57    0    2
ரவிச்சந்திரன் அஸ்வின்     4    6    243      91*    60.75     55.10    0    2
நிக் கொம்ப்டன்                       4    8    208       57      34.66    33.93    0    1

இந்த தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
கிரேம் சுவான்                         4    7    185.5    495    20    144/5    24.75    2.66       55.7   
பிரக்ஜன் ஓஜா                        4    8     254.2    617    20      45/5    30.85    2.42       76.3
மொன்டி பனீசர்                      3    5    183.0     456    17      81/6    26.82    2.49       64.5
ரவிச்சந்திரன் அஸ்வின்    4    8     236.5    737    14      80/3    52.64    3.11    101.5
ஜேம்ஸ் அன்டர்சன்             4    7    126.4     363    12      81/4    30.25    2.86       63.3

மற்றைய கூடுதாலான விக்கெட் வரிசையிலுள்ள விக்கெட்கள் 4 .

முக்கியமான வீரர்கள் அல்லது அதிகம் கவனிக்கப்பட்ட வீரகளில் இந்த தொடரில் இங்கிலாந்து அணி சார்பாக அலிஸ்டயர் குக். அவரின் பெறுதிகள் நிச்சயம் காரணத்தை சொல்கின்றன. போட்டி தொடர் நாயகனும் அவரே. அடுத்தவர் கெவின் பீற்றர்சன். மீள் வருகை போட்டி தொடர். பிரச்சினைகளை முடித்துக் கொண்டு அணிக்குள் வந்தார். வெற்றிகள் இங்கிலாந்து பக்கமாக திரும்பியுள்ளன. அதை சரியாக கணித்தே இங்கிலாந்து முகாமைத்துவம் அவரை சமரசம் செய்து அணிக்குள் எடுத்தது. மத் ப்ரையர் சத்தமில்லாமல் ஓட்டங்களை குவித்து பின் வரிசையில் இந்திய அணிக்கு தலையிடி கொடுத்த ஒருவராக இருந்துள்ளார். நிக் கொம்ப்டன் அன்று ஸ்ட்ரோஸ் விட்டு சென்ற இடத்தை நிரப்பியுள்ளவர். முதல் தொடர். போதுமானதாக இருந்தாலும் அணியில் இடத்தை தக்க வைத்துக்கொள்ள இன்னும் போராட வேண்டியுள்ளது. ஜொனதன் ற்ரொட், இயன் பெல் ஆகியோர் இறுதிப் போட்டியில் சதமடித்து போராடியது அவர்களின் திறமைகளையும் காட்டியுள்ளது. ஆக இங்கிலாந்து துடுப்பாட வரிசை அபாரமாக செயல்ப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக செற்றேஸ்வர் பூஜாரவை தவிர்த்து பெரிய அளவில் சொல்வதற்கு யாரும் இல்லை. அஸ்வின் சிறப்பாக துடுப்பாடினார். அவர் அளவிற்கு மற்றவர்கள் செயற்பட்டு இருந்தாலே இன்னும் ஓட்டங்களை குவித்து இருக்க முடியும். இந்திய அணியின் தற்போதைய நம்பிகை நட்சத்திரம் விராத் கோலி ஏமாற்றினாலும் இறுதிப் போட்டியில் போராடிப் பெற்ற சதம் ஆறுதலை கொடுத்துள்ளது. இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த தொடர் மூலம் விளங்கி இருக்கும். சச்சின் மிகப் பெரிய ஏமாற்றத்தை இந்த தொடரிலும் தந்துள்ளார். டோனியின் 99 ஓட்டங்கள் அவர் மீது மீண்டும் நம்பிக்கையை தந்தாலும் ஒருநாள் போட்டிகள் அளவிற்கு டெஸ்ட் போட்டிகளில் அவரால் செயற்பட முடியவில்லை. லக்ஸ்மன் விட்டுச் சென்ற இடத்திற்கு இன்னமும் யாரும் கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. யுவராஜ் சிங்க் வந்தார். அணியால் தூக்கி விட்டார்கள். ரவீந்தர் ஜடேஜா அணிக்குள் வந்தார் துடுப்பாட்ட வீரராக. ஓர் இன்னிங்ஸ் வாய்ப்பு. சரியாக பாவிக்கவில்லை. பந்து வீச்சு நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது. முதற்தர போட்டிகளில் மூன்று முச் சதங்களை குவித்து அதிலும் இந்த பருவ காலத்தில் இரண்டை அடித்து அணிக்குள் இடம் பிடித்தவர். இன்னும் வாய்ப்புக்கள் அவருக்கு வழங்கிப் பார்க்க வேண்டும். அது நடக்குமா இல்லையா என்பது சந்தேகமே.

பந்துவீச்சாளர்களில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தவர் மொன்டி பனீசர். முதல் போட்டியில் சகலதுறை வீரராக சமிட் பட்டேல் விளையாடிய போதும் அவரின் பந்து வீச்சு கை கொடுக்காமல் போக அணிக்குள் வந்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணியை தடுமாற வைத்தார். தொடர்ச்சியாகவும் ஆட்டம் காண வைத்து வெற்றியை பெற்றுக் கொடுத்து மிகப் பெரிய மீள்வருகையை காட்டினார். ஆனாலும் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியவர் கிரேம் சுவான். இந்த இருவரும் தான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமானவர்கள். சரியாக இந்திய ஆடுகளங்களை கணித்து பந்து வீசி விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள். அஸ்வின் இந்தியா பக்கமாக மிக பெரியளவில் ஏமாற்றிவிட்டார். 9 போட்டிகளில் 50 விக்கெட்களை அள்ளிக் குவித்த அவரால் இந்த தொடரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இது அவருக்கு நல்ல பாடம். இதை சரியாக கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். பிரக்ஜன் ஓஜா தன் பங்கை சரியாக செய்துள்ளார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி முக்கிய காரணம் அவரின் பந்து வீச்சு. வேகப் பந்துவீச்சாளர்கள் பற்றி இந்திய அணி இன்னும் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும் முழுக்க முழுக்க சுழலப் பந்து வீச்சாளர்களிற்கான ஆடுகளங்களில் அவர்கள் என்னத்தை செய்ய முடியும்? சகீர் கானின் நிலை என்ன? உமேஷ் யாதவ் உபாதையடைய அடுத்த போட்டியில் மூன்று சுழல்ப் பந்து வீச்சாளர்கள். அதிர்ச்சியாகவே எல்லோராலும் பார்க்கப்பட்டது. இஷாந்த் ஷர்மாவை இணைத்து இருந்தால் இறுதிப் போட்டி போன்று கொஞ்சம் செய்திருப்பார். ஹர்பஜன் சிங்க் இனி அணிக்குள் வருவது உறுதி பட இல்லை எனக் கூறலாம். பியுஷ் சவ்லா இறுதிப் போட்டியில் இணைக்கப்பட்டு நான்கு சுழல்ப் பந்து வீச்சாளர்கள் விளையாடினர். நான்கு விக்கெட்களைக் கைபற்றினார் முதல் இன்னிங்சில். ஆனால் இது தேவைதானா என்றே கேட்கத் தோன்றியது. சச்சினின் விலகலின் பின் விராத் கோலி அந்த இடத்திற்கு முன்னேறுவர். அடுத்த இரண்டு இடங்கள் இன்னும் திறந்தே உள்ளன. யார் அந்த இடங்களை நிரப்பப் போகிறவர்கள்? ஆனால் இங்கிலாந்து அணி மாற்றமில்லாமல் நல்லா அணியாக தன்னை முழுமை பெற வைத்துள்ளது. 

இந்த தொடர் வெற்றி மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் இரண்டாமிடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியாவும் அதே ஐந்தாமிடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியா அணி விழித்துக்கொள்ள நல்ல தருணமாக இது அமைந்துள்ளது. மறு புறமாக இங்கிலாந்து அணிக்கு புத்துணர்ச்சியை தருவதுடன் ஆசிய ஆடுகளங்களிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிகையும் தந்து இருக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X