2021 மே 17, திங்கட்கிழமை

ஆசிய கால்பந்து: மகுடம் சூடிக்கொண்ட அவுஸ்திரேலியா

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய நாடுகளின் கால்பந்தாட்ட மன்னர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஆசியக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நேற்று அவுஸ்திரேலியாவில் முடிவுக்கு வந்தன.

1956இல் ஆசியக் கால்பந்து சம்மேளனம் ஆரம்பித்த ஆசியக்கிண்ணக் கால்பந்துத் தொடர், இம்முறை தான் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது.

ஜனவரி 9 முதல் நடைபெற்று வந்த 16ஆவது ஆசியக்கிண்ணம், முதல் தடவையாக அவுஸ்திரேலியாவின் கைகளில் போய்ச் சேர்ந்துள்ளது. ஆசியக் கிண்ணத்தை வெல்கின்ற 8ஆவது நாடு என்னும் பெருமையும் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது.

இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், ஓஷியானிய வலயத்திலிருந்து அவுஸ்திரேலியா 2006-2007ஆம் ஆண்டுகளில் தான் ஆசிய நாடுகளோடு ஆசிய கால்பந்து சம்மேளனத்தில் இணைந்து கொண்டது.

தங்கள் கால்பந்து போட்டித்தன்மை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக போட்டித்தன்மை இல்லாத ஓஷியானிய வலயத்திலிருந்து, அதிக போட்டித்திறனும் அதிக அங்கத்துவர்களும் கொண்ட ஆசியக் கால்பந்து சம்மேளனத்துக்குள் இணைந்த அவுஸ்திரேலியா விளையாடியுள்ள மூன்றாவது ஆசியக் கிண்ணத்தொடர் இதுவாகும்.

2011இல் ஜப்பானிடம் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா, இம்முறை மற்றொரு ஆசியக் கால்பந்து வல்லரசான தென் கொரியாவை இறுதிப் போட்டியில் வெற்றிகொண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதிலே இன்னொரு சுவாரஸ்யம், முதல் சுற்றுப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் பிரிவு Aயில் விளையாடிய நேரம், அவுஸ்திரேலியாவை கொரியா வென்றிருந்தது.

பல்வேறு தெரிவுப்போட்டிகள் மூலம் தகுதிபெற்ற 16 நாடுகள் விளையாடிய இந்த ஆசியக் கிண்ணக் கால்பந்து தொடரில் அவுஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தது.

சொந்த மைதானங்களும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், அனுபவம் வாய்ந்த கஹில், ஜடிநெக், ரயன் போன்ற வீரர்களின் பலத்துடன் சேர்ந்துகொள்ள Socceroos என்று செல்லமாக அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் நீண்டகாலக் கனவு நனவானது.

கிரிக்கெட், ரக்பி, அவுஸ்திரேலிய விதிமுறைகள் படி விளையாடப்படும் AFL என்ற ரக்பி/கால்பந்து ஆட்டம் போன்ற விளையாட்டுக்களுக்கு இடையில் இந்த 10, 15 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் பிரபலமான கால்பந்து இப்படியான படிப்படியான வெற்றிகள் மூலமாக மேலும் ஆதரவு பெற்று எழுந்துவருகிறது.

முதற்சுற்றின் பின்னர் எதிர்பார்த்த 8 அணிகளும் காலிறுதிக்குத் தெரிவாகியிருக்க, காலிறுதிகளுக்குப் பின்னர் தான் போட்டித்தொடர் விறுவிறுப்பு அடைந்தது.

எனினும் 2022இல் உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிகளை (பல்வேறு சர்ச்சைகளின் மத்தியில்) நடத்தவுள்ள கட்டார் முதற்சுற்றின் 3 போட்டிகளிலுமே தோற்று வெளியேறியிருப்பது, மீண்டும் கட்டார் குறுக்கு வழியில் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது பற்றிய விமர்சனங்களை எழுப்பும்.

காலிறுதிப் போட்டிகளில் சீனாவை அவுஸ்திரேலியா வென்றதைத் தவிர, ஏனைய 3 போட்டிகளுமே மேலதிக நேரம், பெனால்டி உதைகள் மூலமாகவே தீர்மானிக்கப்பட்டன.

அத்துணை தூரம் மிக இறுக்கமான, நெருக்கமான போட்டிகளாக இருந்தன.

இவற்றுள் அதிக தடவை ஆசியக்கிண்ணம் வென்ற சாதனை (4 தடவைகள்) அணியான நடப்பு சம்பியனாக விளங்கிய ஜப்பான், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திடம் காலிறுதியில் தோற்று வெளியேறியது. இது ஆசியக் கிண்ணப் போட்டியில் ஜப்பானின் மோசமான பெறுபேறு என்பது முக்கியமானது.

அரசியல் ரீதியான பரம வைரிகளான ஈரான் - ஈராக் அணிகளுக்கிடையிலான போட்டி இன்னொரு மிக விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது.

அரையிறுதிகளில் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தை அவுஸ்திரேலியா வீழ்த்த, ஈராக்கை தென் கொரியா வெற்றிகொண்டது. இரண்டு போட்டிகளுமே 2-0 என்ற ஒரே மாதிரியான முடிவையே தந்திருந்தன.

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வெற்றிகொண்டது. ரசிகர்களுக்கு பெருவிருந்து தந்த போட்டியாக இதுவும் அமைந்தது.

சராசரியாக ஒவ்வொரு போட்டியுமே, அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் நிறைந்த இம்முறை ஆசியக் கிண்ணத்தொடர் சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இது அவுஸ்திரேலியாவுக்கு வெகுவிரைவிலேயே உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பையும் பெற்றுத் தரப்போகிறது.

இறுதிப் போட்டியில் சந்தித்த இரு அணிகளில், அவுஸ்திரேலியாவுக்கு 2011இல் கிடைத்த ஏமாற்றத்தை இல்லாமல் செய்யக் கூடிய வாய்ப்பை வழங்கியது. தென் கொரியாவுக்கு 27 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த இறுதிப்போட்டியாக அமைந்தது.

அதேபோல 1960ஆம் ஆண்டில் ஆசியக்கிண்ணம் வென்ற பிறகு மீண்டும் தென் கொரியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது.

இறுதிப்போட்டிக்கு முன்பதாக, இந்த ஆசியக்கிண்ணத் தொடரில்,
அதிக கோல்கள் (12) பெற்றிருந்த அணி - அவுஸ்திரேலியா.
எதிரணிக்கு எந்த ஒரு கோலையும் கொடுத்திராத அணி தென் கொரியா.

மைதானம் நிறைந்த ரசிகர்கள், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த போட்டியில் இடைவேளைக்கு முன்னதாக அவுஸ்திரேலியா ஒரு கோலைப் பெற, 90 நிமிடங்களில் போட்டி முடிவடையும் நேரத்தில் கடுமையாகப் போராடி, தென் கொரியா ஒரு கோலைப் பெற்று சமநிலை செய்து, மேலதிக நேரம் 30 நிமிடங்களுக்கு போட்டியைக் கொண்டு சென்றது.

மேலதிக நேரத்தில் அவுஸ்திரேலியா ட்ரோய்சி மூலம் பெற்ற அபார கோலின் மூலம் வெற்றிக்கிண்ணம் பெற்றுக்கொண்டது.

சர்வதேசக் கால்பந்து தரப்படுத்தலில் 100ஆம் இடத்தில் இருந்து வேகமாக முன்னேறி வரும் அவுஸ்திரேலியாவுக்கு இந்த வெற்றி மேலும் உற்சாகம் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பயிற்றுவிப்பாளர் அங்கே போஸ்டேகோக்லு (Ange Postecoglou).

இதிலே இன்னொரு சிறப்பம்சம், இவர் கிரேக்கத்திலே பிறந்து அவுஸ்திரேலியாவிலேயே வளர்ந்து, விளையாடியவர் என்பதும், இந்த அவுஸ்திரேலிய அணியின் எல்லா வீரர்களுமே அவுஸ்திரேலியாவிலே பிறந்தவர்கள் என்பதுமே.

இனி வரும் காலத்தில் அவுஸ்திரேலியா கால்பந்தாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஓர் அணியாக மாறப்போகிறது என்பதற்கு கட்டியம் கூறியிருக்கிறது இந்த ஆசியக்கிண்ணம்.

இந்த ஆசியக்கிண்ண போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவர் ஐக்கிய அரபு ராஜ்ஜிய வீரர் அலி மக்பூத் (5 கோல்கள்).

மிகச் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றவர், இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவுக்கு கோல் ஒன்றை அடித்த மசிமோ லுவோங்கோ.

மிகச் சிறந்த கோல் காப்பாளர் அவுஸ்திரேலியாவின் மத்தியூ ரயன்.

வெற்றிக் கிண்ணத்தோடு, கண்ணியமாக விளையாடியதற்கான FAIR PLAY விருதும் பொருத்தமாக அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்தது.

இந்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் கிரிக்கெட் உலகக்கிண்ணத்துக்கு குறிவைத்துள்ள அவுஸ்திரேலியாவுக்கு அச்சாரமாக இந்த ஆசியக் கால்பந்து கிண்ணமோ?

இந்த வெற்றி அவுஸ்திரேலியாவை ஆசியா சார்பாக 2017இல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள கண்டங்களுக்கு இடையிலான 2017 FIFA Confederations Cup இலும் விளையாடத் தகுதி பெற வைத்துள்ளது.

2019இல் ஆசியக்கிண்ண கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் இடம் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை எனினும் 16இலிருந்து 24ஆக விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .