2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தாஜுதீன் வழக்கு: அநுரவின் மறியல் நீடிப்பு

Thipaan   / 2017 ஜூன் 02 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவை விடுவிக்குமாறு அவருடைய சட்டத்தரணியால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி, விளக்கமறியலை, எதிர்வரும் 15ஆம் திகதிவரை நீடித்து, நேற்று (01) உத்தரவிட்டார்.

கொலைக் குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதால், அவருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் இல்லை என்றும் அறிவித்தார்.

அநுர சேனநாயக்க, பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு, எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தம்முடைய சேவை பெறுநர், 2016.05.23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு வருடங்களைக் கடந்திருப்பதால், அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கும் அதிகாரம் நீதவானுக்கு இல்லை என்றும் 2ஆவது சந்தேகநபரான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மன்றில் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, அவர், மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்துள்ளதால், பிணை வழங்கும் அதிகாரமும் நீதவானுக்கு இல்லை என்றும், சந்தேகநபர், சாட்சியாளர்களை அச்சுறுத்தியிருந்தாலோ அல்லது விளக்கமறியலில் இருந்த போது தப்பிக்க முயன்றிருந்தாலோ விளக்கமறியலில் வைக்கமுடியும் எனவும் கூறினார்.

பிணைச் சட்டத்தின் 17ஆம் பிரிவுக்கு அமைய, சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் கோரப்பட்டு, அந்த உத்தரவு நீதவானுக்கு அனுப்பப்பட்டாலேயே விளக்கமறியலில் வைக்கமுடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அநுர சேனநாயக்கவை விடுதலை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விளக்கமறியலில் வைக்கும் அதிகாரம் இல்லை என்பதை தான் ஒத்துக்கொள்வதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க, மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அது நாளை (இன்று) எடுத்துக்கொள்ளப்படுவதால், பிணைச் சட்டத்தின் 13ஆம் பிரிவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கமுடியும் எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இரண்டு மணிநேரத்தில் தனது உத்தரவை வழங்குவதாக அறிவித்த நீதவான் வழக்கை ஒத்திவைத்தார். வழக்கு பின்னர் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாஜுதீன் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில், 2012ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை, ஜனாதிபதி செயலகத்தில் இருந்த பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டமை தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டுள்ளது என, வழக்கு ஆரம்பித்த போது, அறிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க, மேலதிக விசாரணைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அறிவித்தார்.

வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X