2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

‘பேச்சைக் கேட்காததால் தண்டிக்க முயற்சி’

George   / 2017 ஜூன் 07 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்  

“சர்வதேச நாடுகளின் பேச்சைக் கேட்காமல், விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தமையால், அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச நாடுகள், இலங்கையைத் தண்டிக்க முயல்கின்றன” என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணியால், நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனீவாத் தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“விடுதலைப் புலிகள் அமைப்புடன், யுத்தம் ஆரம்பித்த போது மேற்கத்தேய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டன. அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் தகவல்களை வழங்கின. அதனால், இந்தோனேஷிய கடற்பரப்பில், ஆயுதங்களுடன் இருந்த புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூன்றை இலங்கைப் படையினரால் அழிக்க முடிந்தது.  

இந்நிலையில், மேற்கத்தேய அதிகாரமிக்க நாடுகள், ஈராக் போன்ற நாடுகளுடன் போர் புரிந்த நிலையில் அவர்களால் அதில் வெற்றிபெறமுடியாத நிலை காணப்பட்டது.  

அந்த நேரத்தில், விடுதலைப் புலிகளை அழித்து இலங்கை வெற்றிபெறுவதை அந்த நாடுகள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளை நாங்கள் கட்டுப்படுத்துவோம் என நினைத்தே, எங்களுக்கு ஆதரவளித்த மேற்கத்தேய நாடுகள், 2009ஆம் ஆண்டு கிளிநொச்சியை இலங்கைப் படையினர் வெற்றிகொண்டதும். விடுதலைப் புலிகளை நாங்கள் அழிக்கப்போவதைப் புரிந்து கொண்டன.  

இதில் விரும்பமில்லாத நிலையில், அன்றைய நாட்களின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அன்றைய அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் உள்ளிட்ட முக்கியமான உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து அலைபேசி அழைப்புகள் வந்தன.  
எனினும், நாங்கள் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதால், மேற்கத்தேயே நாடுகள் வெட்கமடைந்தன.

தமது பேச்சை மீறி செயற்பட்ட இலங்கையைத் தண்டிக்காவிட்டால் சர்வதேச நாடுகளிடம் தமது அதிகாரத்தை நிரூபிக்க முடியாது என்பதால், இலங்கை மீதான குற்றப்பிரேரணையை அந்த நாடுகள் கொண்டு வந்தன.  

அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெனீவாத் தீர்மானத்தின்படி, விசாரணைகளுக்காக எமது பொலிஸாருக்குப் பதிலாக சர்வதேச பொலிஸார், வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளுக்குப் பதிலாக சர்வதேச நீதிபதிகள் மற்றும் எமது சட்டத்தரணிகளுக்கு பதிலாக வெளிநாட்டுச் சட்டத்தரணிகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .