2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தியெமை வென்று சம்பியனானார் சிட்டிபாஸ்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்று வந்த தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் ஆறாம்நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் சம்பியனானார்.

நேற்றிரவு நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் தற்போதைய நான்காம்நிலை வீரரான டொமினிக் தியெமை எதிர்கொண்ட கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், டை பிரேக்கர் வரை சென்ற மிகவும் போராட்டமாக அமைந்த முதலாவது செட்டை 6-7 (6-8) என்ற ரீதியில் இழந்திருந்தார்.

எனினும், சுதாகரித்துக் கொண்ட 21 வயதான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் 6-2 என்ற ரீதியில் இரண்டாவது செட்டை வென்றிருந்தார்.

இந்நிலையில், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 3-1 என்ற முன்னிலையை ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் அடைந்திருந்தபோதும், மீண்டு வந்த ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், டை பிரேக்கருக்கு போட்டியைக் கொண்டு சென்றிருந்தார்.

அந்தவகையில், இரண்டு மணித்தியாலங்கள் 35 நிமிடங்கள் வரை நீடித்த குறித்த இறுதிப் போட்டியின் தீர்மானமிக்க டை பிரேக்கரில் 4-1 என முன்னிலையை ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் பெற்றிருந்தபோதும், 4-4 என 26 வயதான டொமினிக் தியெம் சமப்படுத்தியிருந்தார். எனினும், அடுத்த மூன்று புள்ளிகளையும் தொடராகப் பெற்று 7-4 என்ற ரீதியில் டை பிரேக்கரை வென்று ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் சம்பியனானார்.

நேற்று முன்தினமிரவு நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் தகுதிபெற்றிருந்தார்.

இதெவேளை, நேற்று அதிகாலையில் நடைபெற்ற மற்றைய அரையிறுதிப் போட்டியில், உலகின் ஏழாம்நிலை வீரரும், நடப்புச் சம்பியனுமான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை 5-7, 3-6 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு டொமினிக் தியெம் தகுதிபெற்றிருந்தார்.

அந்தவகையில், இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம், தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக தரவரிசையில் ஐந்தாமிடத்தில் காணப்பட்ட டொமினிக் தியெம், இன்று வெளியிடப்பட்ட தரப்படுத்தலில், நான்காமிடத்திலிருந்த ரஷ்யாவில் டேனியல் மெட்வெடெவ்வை ஐந்தாமிடத்துக்கு பின்தள்ளி நான்காமிடத்தைப் பிடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .