2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

‘உலகிலிருந்து மொத்தமாக அழிவடைந்த நத்தையினம்’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜார்ஜ் பிறந்ததிலிருந்து காட்டையும் செடி, கொடிகளையும் நிலத்தையும் பார்க்கவேயில்லை. ஆய்வுக்கூடத்தில் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத்தில்தான் ஜார்ஜ் வளர்க்கப்பட்டது. இத்தகைய இனம் அழிந்து வருவதால் கடைசியாய் இருந்த பத்து நத்தைகளைக் கண்டெடுத்து ஆய்வுக்கூடத்தில் வளர்த்து வந்தனர்.

2019ஆம் ஆண்டு புத்தாண்டு மலர்ந்தபோது ஹவாயில் இருந்த ஜார்ஜ் என்ற நத்தை தனது ஓட்டை விட்டு வெளியே கூட வர முடியவில்லை. ஏனென்றால் அது அன்று இறந்துவிட்டது.

ஒரு நத்தையின் இறப்பை புத்தாண்டுக் கொண்டாட்டத்தோடு இணைத்துப் பேச வேண்டுமா என்றால் ஆம், பேச வேண்டும்தான். இயற்கையை அலட்சியமாக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கேட்கும்படி பேச வேண்டும். இயற்கைதான் நம்மை உயிருடன் வைத்திருக்கிறது. ஹவாய்த் தீவுகளில் ஒரு நத்தை இறந்தால் இயற்கையில் என்ன நிகழ்ந்து விடப்போகிறது? நிகழும் ஹவாய்த் தீவுகளின் உயிர்ச்சூழலே மாறலாம். உயிரினங்களின் பல்வகைத்தன்மை குறையலாம். காரணம் ஜார்ஜ் என்கிற நத்தைதான் அதன் இனத்திலேயே கடைசி நத்தை. அந்த நத்தை இனமே இப்போது அழிந்துபோய்விட்டது. 14 வயதுடைய ஜார்ஜ் உயிருடன் இருந்தபோது உலகிலேயே தனிமையான நில நத்தை (Land Snails) அதுதான். இவை நிலத்தில் வாழக்கூடியவை. இத்தகைய நத்தையினங்களில் மிஞ்சியிருந்தது ஜார்ஜ் மட்டும்தான்.

இந்த நில நத்தையானது அச்சடினெல்ல அபெக்ஸ்ஃபுல்வா (Achatinella apexfulva) இனத்தைச் சேர்ந்தது. இவை பூஞ்சை, பாசி மற்றும் பாக்டீரியா போன்றவற்றை உண்டு வாழக்கூடியவை. சிறு உயிரிகளை உண்பதன் மூலம் ஹவாய்த் தீவின் பல்லுயிரியல் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. இவை மரநத்தைகள் எனவும் அறியப்படும். அமெரிக்கா, ஹவாய்த்தீவுகள் போன்றவற்றில் மட்டுமே காணப்படுகின்றன. இவை மிகவும் அரிய உயிரினமாகக் கருதப்படுகிறது. ஹவாய் மக்களின் கலாசாரத்திலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. இவற்றின் ஒலி `காட்டின் குரல்’ என்று அழைக்கப்படுகிறது.

ஜார்ஜ் பிறந்ததிலிருந்து ஆய்வுக்கூடத்தில் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத்தில்தான் வளர்க்கப்பட்டது. இத்தகைய இனம் அழிந்து வருவதால் கடைசியாய் இருந்த பத்து நத்தைகளைக் கண்டெடுத்து ஆய்வுக்கூடத்தில் வளர்த்து வந்தனர். அதில்தான் ஜார்ஜின் பெற்றோர்களும் இருந்தனர். ஜார்ஜை தவிர மற்ற அனைத்து நத்தைகளும் அதிக காலம் வாழவில்லை. உடனடியாக இறந்துவிட்டன. இப்படித்தான் ஜார்ஜ் உலகிலேயே தனிமையான நில நத்தையாக மாறியது. ஆண், பெண் என இருபாலின உறுப்புகளைத் தன்னிடையே கொண்டிருக்கும் விலங்காக இந்த நத்தை இருந்தாலும் இனப்பெருக்கத்துக்கு இன்னொரு துணையின் தேவை அவசியமானதாகும்.

அதற்காக ஜார்ஜைத் தவிர அதன் இனத்தில் வேறு நத்தைகள் இருக்கும் என விஞ்ஞானிகள் தேடியும் பலனில்லை. ஹவாயின் நிலம் மற்றும் இயற்கை வளத்துறையின் (Department of Land and Natural Resources) ஆய்வுக்கூடத்தில் ஜார்ஜ் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டது. உள்ளூர் அளவில் ஜார்ஜ் பற்றிப் பரவலாகத் தெரிந்திருந்தது. இதுவரை ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஜார்ஜைப் பார்த்துள்ளனர். அங்குள்ள செய்தித்தாள்கள், தொலைக்காட்சி பலவற்றிலும் ஜார்ஜ் பற்றிய செய்திகள் வந்துள்ளன. இதை உள்ளூர் பிரபலம் என்றே ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சொல்வதுண்டு. வண்ணமயமான நத்தையோடுகள் கூட ஜார்ஜிற்குக் கிடையாது. வயதான பழைய கூடுகளைக் கொண்டவை. அப்படியும் ஜார்ஜைப் பார்க்க நிறைய மாணவர்கள் வந்தார்கள் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜார்ஜின் மூதாதையர்கள் எப்படி அழிந்து போனார்கள்? தேடினால் வழக்கம்போல இயற்கையை அழிக்கும் மனிதர்களின் கதையே கிடைக்கிறது. ஹவாய்த் தீவுகளில் மொத்தம் 752 வகையான நில நத்தைகள் இருந்துள்ளன. கிபி 1787-ம் ஆண்டு கேப்டன் டிக்சன் ஹவாய்த்தீவுகளுக்கு வந்தபோது நத்தையோடுகளால் ஆன மாலைகளை அவருக்குப் பரிசாகக் கொடுத்துள்ளதாக வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன. இதைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக நத்தையோடுகளையும் நத்தைகளையும் வேட்டையாடியுள்ளனர். 19-ம் நூற்றாண்டில் ஒரே நாளில் எளிதாக 10,000 நிலநத்தைகளைக் கைப்பற்றியிருக்கின்றனர். மரங்களிலும் புதர்களிலும் எளிதில் பிடிக்கும் வகையில் இவை இருந்துள்ளன. வெளியிலிருந்து தீவுக்கு வந்தவர்கள், படையெடுத்தவர்கள் புதிது புதிதாக விலங்குகளை அழைத்து வந்தனர். இயற்கையாக இவற்றுக்குப் பெரிய எதிரிகள் கிடையாது. ஆனால் வெளியிலிருந்து வந்த எலிகள் மிகப்பெரிய எதிரிகளாகின. அழகுக்காகவும் உணவுக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் அளவுக்கதிகமான நில நத்தைகள் சேகரிக்கப்பட்டன.

“ஆமாம் இது வெறும் நத்தைதான். ஆனால் அவை வனத்தின் பல அம்சங்களைப் பிரதிபலித்தது” என்கிறார் காட்டுயிரி உயிரியலாளர் டேவிட் சீஷோ (David Sischo). ஜார்ஜின் 2 மில்லி மீட்டர் அளவுக்கான உடற்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு தற்போது பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அறிவியலும் இயற்கையும் வாய்ப்பு தந்தால் வேண்டுமானால் மீண்டும் ஜார்ஜின் வம்சாவளிகளைப் பார்க்கலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .