2020 ஜூன் 04, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2019 மே 20 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது, இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலியா குறித்து இப்பத்தி ஆராய்கிறது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்கள் என வரும்போது ஜாம்பவானாக இருக்கின்ற அவுஸ்திரேலியா, ஐந்து தடவைகள் சம்பியனாகியுள்ளதோடு, இரண்டு தடவைகள் இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.

அந்தவகையில், உலகக் கிண்ணத் தொடர் என்ற அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடிய அணியாக காணப்படும் அவுஸ்திரேலியா, பந்தைச் சுரண்டிய சர்ச்சையில் சிக்கியதோடு, கடந்த காலங்களில் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தாலும் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிப்பதற்கு சரியாக முன்னதாக இந்திய, பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கிண்ணத் தொடர்களுக்கு முன்னதாகக் தம்மீது வழமையாகக் காணப்படும் அதே எதிர்பார்ப்போடு இந்த உலகக் கிண்ணத் தொடரில் களம் காண்கிறது.

ஓராண்டு தடைக்குப் பின்னர் தமது முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் உப தலைவர் டேவிட் வோணர் ஆகியோர் வெற்றிகரமாக இணைந்து கொண்டது அவ்வணிக்கு நம்பிக்கையளிப்பதுடன், அண்மையில் முடிவடைந்த இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் அவர்களின் பெறுபேறுகள் அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயம் இனிப்பானதாக இருக்கும்.

எவ்வாறெனினும், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோரை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணி, பந்தைச் சுரண்டிய சர்ச்சைக்குப் பின்னர் இங்கிலாந்தின் ஆக்ரோஷமிக்க இரசிகர்களை எதிர்கொள்ளவேண்டியும் காணப்படுகிறது.

டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித்தின் மீளிணைப்புக்கு மேலதிகமாக முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மிற்செல் ஸ்டார்க் காயத்திலிருந்து குணமடைந்து அணியில் இணைந்து கொண்டமை அவுஸ்திரேலியா வரவேற்கும் செய்தியாக உள்ளபோதும், கடந்த உலகக் கிண்ணத் தொடரின்போது அவுஸ்திரேலியா சார்பாக சிறப்பாக செயற்பட்ட ஜொஷ் ஹேசில்வூட், அண்மைய போட்டிகளில் அவுஸ்திரேலியா சார்பாக சிறப்பாக செயற்பட்ட ஜஹை றிச்சர்ட்ஸனை காயம் காரணமாக இழந்தமை அவ்வணிக்கு இழப்பாகவே நோக்கப்படுகிறது. இதுதவிர, டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித்தின் மீளிணைப்புக்காக, அவுஸ்திரேலியாவுக்காக கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் குழாமில் இணைத்துக் கொள்ளப்படாததும் அவுஸ்திரேலியாவுக்கு பின்னடவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் ஏனைய அணிகளைப் பற்றிய இப்பத்தியாளரின் பார்வையில் குறிப்பிட்டவாறு, இந்த உலகக் கிண்ணத் தொடரின் ஆடுகளங்களானவை தட்டையானதாக, துடுப்பாட்டவீரர்களின் சொர்க்கபுரியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகையில், மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், நேதன் கூல்டர்நைல், அடம் ஸாம்பா போன்ற அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு எதிரணியின் ஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்பதிலேயே அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவது தங்கியுள்ளது.

இதுதவிர, கடந்த காலங்களில் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவீரர்கள் தடுமாறியிருந்த நிலையில், இனிங்ஸின் மத்தியபகுதியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்காக எதிரணிகள் கொண்டிருக்கின்ற சுழற்பந்துவீச்சாளர்களை அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டவீரர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதிலும் அவ்வணியின் வெற்றிவாய்ப்பு தங்கியிருக்கின்றது.

எவ்வாறிருந்தபோதும், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோரின் மீளிணைப்போடு அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்சோடு, உஸ்மான் கவாஜாவும் தற்போது சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், இவர்கள் நால்வருமே முதல் நான்கு துடுப்பாட்டவீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது அவ்வளவாக பிரச்சினையாகக் காணப்படாது என்றே கருதப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் அண்மைய ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின்போது ஆரோன் பின்ஞ்சுடன் உஸ்மான் கவாஜா ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கி ஓட்டங்களைக் குவித்திருந்தபோதும், தற்போது டேவிட் வோணர் அணியில் மீள இணைந்துள்ள நிலையில், ஆரோன் பின்ஞ்சோடு, டேவிட் வோணரே ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாகக் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மூன்றாமிலக்கத்தில் உஸ்மான் கவாஜா, நான்காமிடத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஐந்தாமிடத்தில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஆறாமிடத்தில் கிளென் மக்ஸ்வெல், ஏழாமிடத்தில் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் காரே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களைப் பெறுவதற்கு டேவிட் வோணர், ஆரோன் பின்ஞ்சைக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா, இனிங்ஸை கட்டமைப்பதற்கு உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், இறுதி நேர அதிரடிக்கு மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மக்ஸ்வெல் என பலமானதாகவே காட்சியளிக்கின்றது.

பந்துவீச்சுப் பக்கம் மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், நேதன் கூல்டர்நைல், அடம் ஸாம்பா ஆகியோரே முதன்மைத் தெரிவாக விளங்குவர் என எதிர்பார்க்கப்படுவதோடு, நிலமைகளுக்கேற்ப இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் தேவைப்படுமிடத்தில் நேதன் கூல்டர்நைலை நேதன் லையன் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலியா, அதற்கப்பால் முன்னேறுவது அவ்வணியின் பந்துவீச்சாளர்களின் பெறுபேறுகளிலேயே பிரதானமாக தங்கியிருக்கையில், பிறிஸ்டலில் இலங்கை நேரப்படி அடுத்த மாதம் முதலாம் திகதி மூன்று மணிக்கு இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தானுடனான போட்டியுடன் தமது உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X