2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் 2018 - ரஷ்யா

Editorial   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம்  ஆரம்பிக்கவுள்ள நிலையில்  ஒவ்வொரு அணி பற்றிய விபரங்களும் தமிழ் மிரரின்  விளையாட்டு கட்டுரைகள் பகுதியில் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. அதன்படி 32 அணிகளது கடந்த காலங்கள், இம்முறை உலகக் கிண்ணம் எவ்வாறு அமையப்போகிறது என்ற விடயங்கள் அடங்கலான தகவல்களை  தரவுள்ளோம். இந்த கட்டுரையின் முதல் அணியாக உலகக் கிண்ணத்தை நடாத்தும் ரஷ்ய அணி பற்றிய கட்டுரை இங்கே தொடர்கிறது.

முதற் தடவையாக ரஷ்யா உலகக் கிண்ணத் தொடரை நடாத்துகின்றது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சோவியத் ஒன்றியமாக இருந்த கலாத்திலும் அவர்களால் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரை நடாத்த முடியவில்லை. பலமான பெரிய நாடாக திகழ்கின்ற போதும் சோவியத் ஒன்றியமாகவும் சரி, ரஷ்யாவாகவும் சரி உலகக் கிண்ணத்தில் இவர்கள் மிகப் பெரிய சிகரம் தொடவில்லை.

1930ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை  சோவியத் ஒன்றியமாக விளையாடிய இவர்கள் ஏழு தடவைகள் உலகக் கிண்ண தொடரில் விளையாடியுள்ளார்கள். இவற்றுள் 1966ஆம் ஆண்டு நான்காமிடத்தைப் பெற்றுக்கொண்டார்கள். மூன்று தடவைகள் காலிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். 1994ஆம் ஆண்டு ரஷ்யாவாகப் பிரிந்த பின்னர்  உலக கிண்ணத் தொடரில் விளையாடினார்கள். அதன் பின்னர் 2002ஆம் ஆண்டும் 2014 ஆம் ஆண்டு உலக கிண்ணத் தொடர்களில் விளையாடி முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  ஆனாலும் கூட இம்முறை பலமான அணியாகவே இவர்கள் தென்படுகிறார்கள். தரப்படுத்தல்களில் 62 ஆம் இடத்தில் காணப்படும் இவர்கள் கடந்தாண்டு போட்டிகளில் விளையாடியது குறைவு. இது அவர்களுக்கு பின்னடைவைத் தந்தாலும், விளையாடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள்.  இறுதியாக ஸ்பெய்ன் அணியுடன் நடைபெற்ற சிநேகபூர்வ போட்டியொன்றில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை முடிவைப் பெற்றார்கள்.

கடந்தாண்டு விளையாடிய 11 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். நான்கு போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்துளார்கள். நான்கு அணிகளுமே பலமான அணிகள். ஆர்ஜென்டீனா, மெக்ஸிக்கோ, ஐவரி கோஸ்ட், போர்த்துக்கல் ஆகிய அணிகள் அவை. நான்கு போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்தனர். எனவே சொந்த  நாட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன என்ற பலமே தவிர மற்றைய காரணங்களால் இவர்கள் பெரியளவில் சாதிப்பது கடினம். இரண்டாம் சுற்றுடன் வெளியேற்றப்படுவார்கள் என்பது நிச்சயம். அவர்களின் குறிக்கோள் கூட இரண்டாம் சுற்றுவரை செல்வதே.

இரண்டாம் சுற்றுவரை செல்லவேண்டும் என்ற இவர்களின் குறிக்கோளுக்கு ஏற்றால் போல் அவர்களுக்கான குழுவும் அமைந்துள்ளது. போட்டியை நடாத்தும் நாடாக குழு ஏயில் இடம்பிடித்துள்ளமையால் இவர்களுக்கு கிடைத்துள்ள மற்றைய அணிகள் ஓரளவு இலகுவான அணிகளாகக் காணப்படுகின்றன. இதுவும் கூட இவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளுள் தரப்படுத்தலில் மூன்றாவது இடத்திலிருப்பது ரஷ்ய அணி. உருகுவே அணி 21ஆவது இடத்திலும், எகிப்து அணி 3ஆவது இடத்திலும், சவுதி அரேபியா அணி 63ஆவது இடத்திலும் உள்ளன. ரஷ்ய அணி 62 ஆம் இடத்திலுள்ளது. எனவே முதலிரு இடங்களுக்குள் வந்து அடுத்த சுற்றுக்குச் செல்வார்களா என்பது கேள்வியே. அவ்வாறு அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றாலும் இடண்டாவது சுற்றில் போர்த்துக்கல் அல்லது ஸ்பெய்ன் அணியைச் சந்திக்க வேண்டும். அதன் காரணமாக இவர்கள் இரண்டாவது சுற்றுக்கு மேல் செல்ல மாட்டார்கள் என நிச்சயம் அடித்துக் கூற முடியும்.

ஐரோப்பா கண்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷ்ய அணி போட்டிகளை நடாத்தும் நாடு என்ற காரணத்தால் தகுதிகாண் போட்டிகளில் விளையாடவில்லை.  2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ண தொடரிலும் இவர்கள் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது இங்கு முக்கியமான விடயமாக அமைகிறது.  ஆனால் ரஷ்ய அணி மாத்திரமே ஐரோப்பிய வலைய அணியாக குழு ஏயில் இடம்பிடித்துள்ளது.  முதல் சுற்றுப் போட்டிகளில் மற்றைய வலைய நாடுகளுடன் மோதுவதாலேயே ரஷ்ய அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெறுமென நம்பப்படுகிறது.

ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியமாக இணைந்து உலகக் கிண்ண தொடரில்  40 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இவற்றுள் 17 வெற்றிகள், எட்டு சமநிலை முடிவுகள், 15 தோல்விகள் என்ற பெறுபேற்றைக் கொண்டுள்ளார்கள். இந்த முடிவுகளின்படி 59 புள்ளிகளைப்  பெற்று  உலகக் கிண்ணத் தரப்படுத்தலில் 11ஆவது இடத்தைப் பெற்றுள்ளனர்.  ரஷ்ய அணியாக விளையாடிய மூன்று உலக கிண்ணத் தொடரின் ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் இரண்டு சமநிலை முடிவுகளையும் ஐந்து தோல்விகளையும் பெற்றுள்ளார்கள்.

உத்தியோகபூர்வ பந்தயக்காரர்கள் ரஷ்ய அணி உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை 12ஆம் இடத்தில் வழங்கியுள்ளார்கள். அவ்வாறு பார்த்தால் அவர்கள் உலகக் கிண்ணத் தொடரில் 12ஆவது இடத்தைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகுமணிகள்  16 இடங்களுக்குள் வருவார்கள். இரண்டாம் சுற்றில்  தோல்வியடைபவர்கள் எட்டு தொடக்கம் 16 வரையான இடங்களை பிடிப்பார்கள். அதன்படி ரஷ்ய அணிக்கான இடம் 12ஆவதாக  வழங்கப்பட்டுள்ளது. அதே குழுவிலுள்ள உருகுவே 11ஆவது இடத்தை பிடித்துள்ளது. அவ்வாறு பார்த்தால் குழு ஏயில் ரஷ்ய அணி இரண்டாமிடத்தைப் பிடிக்குமென நம்பப்படுகிறது.

சொந்த நாட்டில் போட்டிகள் நடைபெறுவதனால் முழு ரஷ்யாவுமே உலக கிண்ண ஆரம்ப போட்டிக்காக காத்திருக்கும். அதிலும் மைதானம் நிரம்பி வழியும். மிகப்பெரிய கொண்டாட்டத்துக்காக காத்திருக்கும் ரஷ்ய அணியின் ரசிகர்களுக்கு அவர்களது அணி ஏமாற்றத்தை வழங்காமல் நல்ல விறுவிறுப்பான போட்டியை வழங்கினாலே அது மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

 

ரஷ்யாவின் முதல் சுற்று போட்டிகள்

14 ஜூன் - சவுதி அரேபியா - இரவு 8.30

19 ஜூன்  - எகிப்து  - இரவு 11.30

25 ஜூன்  - உருகுவே  - இரவு 7.30

(இலங்கை நேரப்படி)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .