2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கரும்புக் காணிச் சொந்தக்காரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத்; தீர்வு காணப்பட வேண்டுமெனக் கோரி அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை கண்டனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, இக்கண்டனப் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்; கரும்புக் கம்பனிக்கு ஆதரவு தெரிவித்தும் இனந்தெரியாத குழுவொன்றினால் அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அங்கு பதற்றமான நிலைமை தோன்றியதை அடுத்து, பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 4,850 ஹெக்டேயரில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் நுரைச்சோலை 08ஆம் கட்டை, ஆலங்குளம், தீகவாவி, இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் 750 ஏக்கரில் கரும்புச் செய்கையில் ஈடுபட்டுவரும் கரும்புச் செய்கையாளர்களே தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எட்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து  முன்னெடுக்கப்பட்ட இக்கண்டனப் பேரணியில் நூற்றுக்கணக்கான கரும்புச் செய்கையாளர்கள்  கலந்துகொண்டனர்.

அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவிருந்து ஆரம்பமாகிய பேரணியானது மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்கவிடம் பேரணியில் ஈடுபட்டோர் கையளித்தனர்.
 

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கரும்புச் செய்கைக்கு பொருத்தமற்ற மண் வளத்தையுடைய காணிச் சொந்தக்காரர்களுக்கு வேறு பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கவும், நெற்செய்கைக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உரமானியத்தை கரும்புச் செய்கைக்கும் வழங்கவும், கம்பனியின் அளவுக்கதிகமான காணியில் கரும்புச் செய்கை தவிர வேறு பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கவும், கரும்புக் காணி உரிமையாளர்களுக்கு அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளை கரும்புக் கம்பனிக்கு அடிமைப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், இதுவரையில் கரும்புச் செய்கையில் ஈடுபடாத காணிச் சொந்தக்காரர்களுக்கு நட்டஈடு வழங்கவும், உரிய காலத்தில் கரும்பு அறுவடை செய்வதற்கான ஏற்பாடு செய்யவும், நெற்செய்கையாளர்களுக்கு நடத்தப்படும் ஆரம்பக்கூட்டத்தைப் போன்று கரும்புச் செய்கையாளர்களுக்கு ஆரம்பக்கூட்டத்தை நடத்தவுமெனக் கோருகின்றோம்;' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .