2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நட்டஈடு வழங்கவில்லையென அமைச்சர் சஜித்திடம் மகஜர் கையளிப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஜனவரி 27 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை போக்குவரத்துச் சபையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பங்குகளுக்கான நட்டஈடு வழங்கப்படவில்லை எனவும் அதனைப் பெற்றுத் தருமாறு கோரியும், கிழக்குப் பிராந்திய இ.போ.சவின் ஓய்வுபெற்ற சங்க உறுப்பினர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் மகஜர் கையளித்தனர்.

திருக்கோவிலில் நேற்று (26) நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரிடம் இவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.

இது தொடர்பாக கிழக்குப் பிராந்திய இ.போ.சபையின் ஓய்வுபெற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சின்னலெப்பை கருத்துத் தெரிவிக்கையில், 1997ஆம் ஆண்டு, இ.போ.சபையானது, மக்கள் மயமாக்கள் திட்டத்தின் கீழ் கம்பனிகளாக மாற்றப்பட்டு, பின்னர் 2005ஆம் ஆண்டு மீண்டும் கம்பனிகள் ஒன்றிணைக்கப்பட்டு, இ.போ.சபையாகக் கொண்டுவரப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

இதன்காரணமாக, பாதிக்கப்பட்ட திருகோணமலை, கந்தளாய், மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, அக்கரைப்பற்று இ.போ.சபையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இதுவரை பங்குகளுக்கான நட்டஈடுக் கொடுப்பனவகள் வழங்கப்படவில்லையென அவர் விசனம் தெரிவித்தார்.

இதனையடுத்து, கிழக்குப் பிராந்திய இ.போ.சபையின் ஓய்வுபெற்ற சங்கத்தின் ஊடாக, 2012ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட எமக்குத் தீர்வு பெற்று தரும்படி, மனு வழங்கியிருந்ததோடு, நாடாளுமன்ற ஒப்புஸ்மேனுக்கும் மனு வழங்கியிருந்த போதிலும் இன்றுவரை எமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பங்குகளுக்கான நட்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் வகையில், நாடாளுமன்றத்தில் எமது பிரச்சினையை முன்வைத்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றித் தருமாறே, அமைச்சர் சஜித்திடமும் கோடீஸ்வரன் எம்.பியிடமும் மேற்படி மகஜரைக் கையளித்ததாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .