2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பாரிய குழி மூடப்பட்டது

Thipaan   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு பிரதேசத்தில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது.

பொதுமக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று நேற்றுக் காலை முதல் கோபுரம் அமைக்கும் ஆரம்ப கட்ட பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், நேற்று (06) வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கனரக வாகனத்தையும் இடைநிறுத்தியதுடன், தோண்டப்பட்ட குழியினையும் உடன் மூடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது விருப்பின்றி அனுமதி வழங்கிய பிரதேச சபைக்கெதிராகவும் கோசம் எழுப்பினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தொலை தொடர்பு அதிகாரிகளும்; அக்கரைப்பற்று பொலிஸாரும் மக்களை சமரசம் செய்ய முற்பட்டபோதும் அது பயனளிக்காமையினால் தோண்டப்பட்ட பாரிய குழி மூடப்பட்டது.

ஆயினும், இச்சம்பவம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதற்கமைவாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு, இன்று (07) சென்ற மக்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்ததுடன் சட்ட உதவி ஆணைக்குழுவிடமும் தகவல்களை வழங்கினர். அத்தோடு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் சுற்றாடலுக்கும் தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் இக்கோபுரத்தினால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறியே  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களின் கருத்துக்களை பெறாமல் தான்தோன்றித்தனமாக அனுமதியை வழங்கிய அரச நிறுவனங்களுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்த அவர்கள் உடனடியாக அரசாங்கம் இத்திட்டத்தை நிறுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த மக்கள் முன்கூட்டியே அரச அதிகாரிகளுக்கும் பிரதேச சபைக்கும் எழுத்து மூலமான கடிதங்களை அனுப்பிய போதிலும் இன்று யார் இதற்கு அனுமதி கொடுத்தனர் எனவும் கேள்வி எழுப்பினர்.

மக்களை பாதிக்கும் எந்தவித நடவடிக்கைளும் இந்த நாட்டில் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதியும் அரசாங்கமும் தெரிவித்து வரும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மீது கரிசனம் காட்டாமல் அவர்களை அச்சமூட்டும் அதிகாரிகள் தொடர்பிலும் விசனம் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X