2025 மே 01, வியாழக்கிழமை

'சாய்ந்தமருது வைத்தியசாலையை வேறு வைத்தியசாலையுடன் இணைக்க அனுமதிப்பதில்லை'

Administrator   / 2017 மே 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை வேறு எந்தவொரு வைத்தியசாலையுடனும் இணைப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று சாய்ந்தமருது ஷூரா சபை ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது என ஷூரா சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் சபைச்  செயலகத்தில்  நேற்று நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தொகுதியில் எலும்பு முறிவு சிகிச்சை ஆரம்பிக்கப்படும் என்று சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷால் காசீம் கடந்த திங்கட்கிழமை அஷ்ரப் வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்திருந்தார்.

இது  தொடர்பில் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இந்த வைத்தியசாலையின் மூலம் நோயாளர்களுக்கு நிறைவான சுகாதார சேவை வழங்கப்பட்டு வந்துள்ளது. எனினும்,   2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த வைத்தியசாலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வைத்தியசாலையைத் தரம் உயர்த்தி  மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களை சேவையில் அமர்த்த வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி கருதி, இதனை மத்திய அரசாங்கத்தின்; கீழ் கொண்டு வருவதற்கும் பிராந்தியத்துக்குப் பொதுவான விசேட பிரிவை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாத்திரமே, அதற்கு  ஆதரவளிப்பது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .