2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'பலர் மதம், இனம், மொழியைக் குறை கூறுகின்றவர்களாக உள்ளனர்'

Suganthini Ratnam   / 2017 மே 07 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

நாட்டிலுள்ள பலர் ஏனைய மதங்களையும்  இனங்களையும்; மொழிகளையும் குறை கூறுகின்றவர்களாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

சத்யசாயி சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக்கான கிழக்குப் பிராந்தியத்துக்கான இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்  நடைபவனியும் ஒன்றுகூடலும் அக்கரைப்பற்றில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'மதங்கள் அன்பைப் போதிக்கின்றது. மனிதர்களுக்குரிய மத விழுமியங்ளையும் போதனைகளையும் கூறியிருக்கின்றன. ஆனால், இன்று மதங்கள் அன்பைப் போதிப்பதை தவிர்த்து, மத விழுமியங்களை வெளிப்படுத்துவதை தவிர்த்து, மதங்கள் மதவாதமாகவும் இனவாதமாகவும் செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது' என்றார்.

'மத விழுமியங்கள் முறையாகக்  கடைப்பிடிக்கப்பட்டிருக்குமாயின், இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டிருக்காது. இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு இடையில் பிரிவினைகள் ஏற்பட்டிருக்காது.  

30 வருடகால யுத்தத்தில் ஆயிரக்கணக்கான  உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்காது. பெறுமதியான மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

சிலர் மதத்தின் பேரால் மதம் பிடித்து அலையும் அவல நிலைமை இன்று உருவாகியுள்ளது.  

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பிரிவினைகளுக்கு சமய விழுமியங்கள் கடைப்பிடிக்கப்படாமையே ஆகும்.  ஆகவே, நாம் அனைவரும் அன்பால் ஒன்றிணைந்து அழகிய நாட்டை உருவாக்குவதற்காக ஒற்றுமையுடன் வாழ  திடசங்கற்பம் பூணுவோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .