2025 மே 02, வெள்ளிக்கிழமை

'பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாததால் சிறுபான்மையின மக்கள் விரக்தியில் உள்ளனர்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குப் பக்கபலமாக இருந்த சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதனால், மக்கள் விரக்தி மனநிலைக்கு ஆளாகியுள்ளனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று18) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'துன்பத்துடன் வாழ்ந்துவந்த சிறுபான்மையின மக்கள்  நல்லாட்சி என்ற வார்த்தையை மட்டும் நம்பி வாக்களித்து, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்தும், சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றாமல் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. இதனால், பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக, காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் போராட்டம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம்; தொடர்பில் அரசாங்கமோ அல்லது மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளோ எந்தவிதத் தீர்வையும் முன்வைக்கவில்லை.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் பல வருடங்களாக இருந்துவரும் தீர்க்கப்படாத பல காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், வேலையற்ற பட்டதாரிகள் ஒரு மாதத்தைத் தாண்டியும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் போராட்டம், இறக்காமம் மாணிக்கமடு தமிழ் பிரதேசத்தில் பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலைப் பிரச்சினை, 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு போன்ற எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் இன்னும் தீர்வை முன்வைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த  ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையின மக்கள் எவ்வாறான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தார்களோ, அதே பிரச்சினைகளை இந்த ஆட்சிக்காலத்திலும்  மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கத்தை வைத்துக்கொள்வதற்காக அளவு கடந்த அமைச்சுப் பதவிகளையும் அவர்களுக்கான சுகபோகங்களையும் வழங்கி,  பணம் விரயம் செய்யப்படுகின்றதே தவிர, மக்கள் நலனில் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .