2025 மே 01, வியாழக்கிழமை

'மு.கா.வின் கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்பதுடன், கட்சியின் மேல் மற்றும் கீழ்மட்டத் தொண்டர்களுக்கு இடையில் காணப்படும் இடைவெளியைக் களைய வேண்டும் என்பதே தற்போது கட்சி எதிர்நோக்கும் சவால் ஆகும் என மு.கா தலைவரும் நகர அபிவிருத்தி  மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிராமங்கள் தோறும் கட்சிக்  கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், கடந்தகால கசப்புணர்வை மறந்து எதிர்காலத்தில் புதிய யுகம் நோக்கி அனைவரும் ஒன்றாகப் பயணிப்பதற்கான உற்சாகத்தை கட்சிப் போராளிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்தல் மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கான  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்,  சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (9) இரவு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'தற்போதைய நிலவரப்படி அரசியல் அதிகாரங்களில் மு.கா அல்லாதவர்கள் அம்பாறை மாவட்டத்தில் கிடையாது. மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை மு.கா தனது கைகளில் வைத்துக்கொண்டிருக்கின்றது.  ஆனால், மு.கா. வின்  அரசியல் பலவீனப்பட்டு விட்டது என்ற பார்வை இன்று பரவலாக ஏற்பட்டுள்ளது. எமது கட்சியை எவராலும்  ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது' என்றார்.

'மு.கா. வுக்கு எதிராக இருக்கின்ற எதிரணிக்கு அரசியல் அதிகாரம் கிடையாது. மேலும்,  அபிவிருத்திகளை முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரஸே செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மு.கா என்ன செய்தாலும், அதனை எதிர்க்கும்  எதிரணியினர் இருக்கின்றார்கள். அது பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமது கட்சியைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் தற்போது பல்வேறு சக்திகள் களம் இறங்கியுள்ளன. இவ்வாறான சக்திகளுக்கு மு.கா போராளிகள்  இடங்கொடுக்கக் கூடாது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .