2025 மே 01, வியாழக்கிழமை

இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளிடம் விழிப்பாக இருங்கள்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வார விடுமுறை நாட்களுடன், 2025 தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கான கொள்வனவுகள் சூடுபிடிக்கும். குயில் கூவுவது கேட்கின்றது. ஆக, பெருநாள், எப்போது வருமெனப் பலரும் பலத்த எதிர்பார்ப்புடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். விலைவாசிகளைப் பார்த்த பலரும், வழமையை நாட்களைப் போலவே பெருநாளும் கடந்து போகக்கூடாதா? என நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

புத்தாண்டுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொதி, ஏப்ரல் 1ஆம் திகதி முதல், ஏப்ரல் 13 ஆம் திகதி வரையிலும், சதொசவில் 2,500 ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ளலாம். எனினும், எரிபொருள் விலை, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. அரிசிக்கான தட்டுப்பாடு இன்னுமே நீங்கவில்லை. அரிசியை இறக்குமதிச் செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தங்களிடம் இருக்கிற​தோ, இல்லையோ, எனினும், தங்களுடைய குழந்தைகளுக்காக ஏதாவது கடன் வாங்கி இல்லையேல், இருக்கும் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, பிள்ளைகளுக்கு மட்டுமேனும் புத்தாடைகளை வாங்கிக்கொடுப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்தளவுக்குப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளமுடியாத நிலைமையில் நாடு இருக்கிறது.

புதிய அரசாங்கத்தால், ஓரிரு மாதங்களுக்குப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது, உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் நமது மீதும் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என்பதும் உண்மையாகும். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், அந்த பொருட்களுக்கான உலக சந்தையை இலங்கை தேடவேண்டும். 

புத்தாண்டு காலம் என்பதால், பெரும் நகரங்களில் சனநெரிசல் அதிகமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி முடிச்சுமாற்றிகள் தங்களுடைய கைவரிசையைக் காண்பித்துவிடுவர். ஆகையால், விழிப்பாக இருக்கவேண்டும். இழந்துவிட்ட பின்னர் தேம்பியழுவதை விடவும். இருப்பதைப் பாதுகாத்துக்கொள்வதே சிறந்தது.  

கைவரிசை ஒருபுறம் இருக்க,  தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதிலும் கில்லாடிகள் இருக்கத்தான் செய்கின்றனர். எனினும், பொருட்களின் தரத்தைக் கவனிக்காது, குறைந்த விலைக்குப் பின்னால் அலைமோதும் குழுவினரே, முதலைகள் விரித்திருக்கும் வலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

இந்த பண்டிகை காலத்தில் நுகர்வோரைக் காப்பாற்ற வேண்டுமானால், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிரடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  அத்தியாவசிய பொருட்களைப் பதுக்கி வைத்து, செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு, விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்கு முயன்ற வர்த்தகர்கள் பலரும் கையும்  மெய்யுமாகச் சிக்கிக் கொண்டுள்ளனர்.

ஆகையால், பொருட்களைப் பதுக்கி வைத்துச் சிக்கிக்கொள்ள வேண்டாம். அவ்வாறு சிக்கிக்கொள்ளும் வர்த்தகர்களுக்குக் கடுமையான தண்டனையைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்தில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சன நெரிசல், வரிசைகளில் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கும். ஆகையால், பொதுப் போக்குவரத்தின் போது, அருகருகே அமர்ந்து பயணிக்கும் பயணிகளிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். களைப்பில் அயர்ந்துவிட்டால், இருப்பதை இழக்கவே நேரிடும் ஆகையால்,  இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளிடம் விழிப்பாக இருங்கள் என்பதே எமது அறிவுரையாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .