Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மே 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையுமென கடந்தகாலங்களில் வாய்க்கிழிய பேசப்பட்டாலும், பெருந்தொகையான டொலரை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பால்மாவை இறக்குமதிச் செய்யவேண்டிய நிலைமையிலேயே நாடு உள்ளது. பாற்பண்ணை தொடர்பில் போதியளவில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
ஒருசில மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் மேலதிக வருமானத்துக்காக மாடுகளை வளர்க்கின்றனர். இன்னும் சில இடங்களில் பாரியளவில் பாற்பண்ணைகள் இருக்கின்றன. தனியார் துறையினரும் அந்தத்துறையில் கூடுதலான அக்கறையை காண்பிக்கின்றனர்.
எனினும், அவ்வப்போது ஏற்படுகின்ற தொற்றுநோய்கள், புண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலையேற்றம், பசும்பாலுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் விலை, பாற்பண்ணையாளர்களுக்கான நிவாரணம் உள்ளிட்டவை, இந்தத் துறையில் பாரியளவில் தாக்கத்தை செலுத்துகின்றன.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் புல்லுக்கு அடிக்கும் ரவுண்டப் எனும் கிருமி நாசினி, மேய்ச்சல் புற்தரைகளில் தெளிக்கப்பட்டு, 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேய்ச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மாகாணத்தில், கால்நடைகளுக்கு பரவும் தட்டம்மை நோயினால் இதுவரையிலும் 135 மாடுகள் உயிரிழந்துள்ளன. நுவரெலியாவில் பரவியுள்ள இந்த அம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கு ந நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இந்நோயைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாவிட்டால், அவசரத் தேவையின் கீழ் அவற்றை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு திடீரென வரும் நோய்களால், பால் உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமன்றி, இறைச்சியை உட்கொள்வதில் மக்களிடத்தில் ஒருவகையான அச்ச உணர்வு ஏற்படும். எனினும், தட்டம்மை நோயினால் பாதிக்கப்படும் பசுக்களில் இருந்து கறக்கப்படும் பாலை பருகுவதால் எவ்விதமான பாதிப்புகளும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வதால் எந்தவிதமான சுகாதார பிரச்சினைகளும் ஏற்படாது எனவும், இந்த நோய் மனிதர்களை தாக்கும் அபாயம் இல்லை எனவும் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். இது ஒருவகையில் ஆறுதலை தந்தாலும், ஏனைய மாவட்டங்களில் வாழும் கால்நடைகளுக்கு இந்த தட்டம்மை நோய் பரவாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வது அவசியமாகும்.
இந்நிலையில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது, போலியான கால்நடை வைத்தியர்களும் மூக்கை உள்நுழைத்துக்கொள்வார்கள். ஆகையால், அவ்வாறான போலி முகங்கள் குறித்தும் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில், நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களை இலக்குவைத்த கால்நடை போலி வைத்தியர் அண்மையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், கால்நடைகளை காப்பாற்றவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. ஆகையால், காலந்தாழ்த்தாது, உரிய தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கி, மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
24.05.2024
6 hours ago
6 hours ago
20 Oct 2025
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
20 Oct 2025
20 Oct 2025