Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னை அழிவிலிருந்து காக்க விழித்திருந்த ஒரு பிராமணன் போல, உங்களை அழிவில் இருந்து காக்க வழி தேடும் அறிவியல் விழிப்பு நிலையே சிவராத்திரி. சத்குரு மகா சிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14ஆவது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரியாகும். அவ்வாறான திருநாளை புதன்கிழமை (26) அன்று உலகவாழ் இந்துக்கள் அனுஷ்டிக்கின்றனர்.
சிவராத்திரிக்குப் புராணங்களில் பல கதைகள் இருந்தாலும், ‘யார் பெரியவர்’ என்ற கதை விளக்கம் என்பது இக்காலத்தில் இலங்கையின் அரசியலுக்கு மிகப் பொருத்தமாகவே இருக்கும் என்பதில் எவ்வாறான மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை.
“பிரம்மனும், விஷ்ணுவும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதிட்டனர். அந்த வாதத்திற்குப் பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.
அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காணப் பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை” இறுதியில் இருவரும் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
எமது நாட்டை பொறுத்தவரையில், புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளுக்கு இன்றுமே தீர்வு காணப்படவில்லை. வடக்கு, கிழக்கில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை உள்ளிட்டவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். அதுமட்டுமன்றி, பெரும்பான்மை இன மக்களின் சாதாரண பிரச்சினைகள் கூட, பல்வேறு பிரதேசங்களில் தீர்க்கவில்லை. அவ்வாறான மக்கள் கூட்டம் இன்றுமே அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
காலகாலம் மாறி, மாறி ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களுக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பெரும்பாலான மக்கள், பாடம் புகட்டிவிட்டனர் என்பது தெட்டத்தெளிவாகும். எனினும், பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட விவாதங்களில் உரையாற்றும் மக்கள் பிரதிநிதிகளின் உரைகளின் சாரம்சத்தை அவதானித்தால், “நான் செய்தேன்”,
“நீங்கள் செய்யவில்லை” என்பதைக் கூடுதலான வாதமாக இருக்கின்றது.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமாயின் அரசாங்கத்திடம் சிறந்த அரச பொறிமுறை இருக்கவேண்டும். அடிமட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, உள்ளூராட்சி மன்றங்களுக்கு உயிர்கொடுப்பது அவசியமாகும். இந்நிலையில், சிவராத்திரி தினத்துக்கு மறுநாளான, வியாழக்கிழமை (27) தேர்தல்கள் ஆணைக்குழு, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான முடிவை எட்டுவதற்குக் கூடவிருக்கின்றது.
இதேபோல, அரசியலமைப்பின், 13ஆவது திருத்தத்துக்கு எவ்விதமான பங்கமும் ஏற்படாது என்றும், புதிய அரசியலமைப்பை வெகு விரையில் உருவாக்குவோம் என்று அரசாங்க தரப்பினர் கூறிவருகின்றனர். இங்கு, யார் பெரியவர், என்பதைப் புறந்தள்ளிவைத்துவிட்டு, ‘நாங்கள்’ தீர்த்துவைத்தோம் என்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்பதை இந்நாளில் வலியுறுத்துகின்றோம்.
7 minute ago
11 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
5 hours ago
5 hours ago