2024 பெப்ரவரி 24, சனிக்கிழமை

ரணிலுக்கு சவாலான 52 நாள்களும் அரசாங்கத்தின் தீவிர முயற்சியும்

Editorial   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணிலுக்கு சவாலான 52 நாள்களும் அரசாங்கத்தின் தீவிர முயற்சியும்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அபகரித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு திடீரென வழங்கியதன் ஊடாக நிறைவேற்று, சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையில் பெரும் குழப்பகரமான நிலைமை ஏற்பட்டு, அதனை தீர்ப்பதற்கு 52 நாள்கள் எடுத்திருந்தமை சகலரும் அறிந்த விடயமாகும்.

அந்த 52 நாள்களும் அப்போதிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் சவாலான நாள்களாக இருந்தன. இறுதியில் மீண்டும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதமர் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததன் காரணமாகவே, இவ்விருவருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு, நீதித்துறை தலையிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதற்கிடையே மற்றுமொரு 52 நாள்கள் சவாலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முகக்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது, தேசிய இனப்பிரச்சினையை நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் (பெப்ரவரி 04) தீர்த்துவைக்க ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அவ்வழைப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருசில கட்சிகளைத் தவிர, ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் டிசெம்பர் 13ஆம் திகதி ஒன்றுகூடி, தத்தம் தரப்பு கருத்துகளை பகர்ந்துகொண்டனர். முழுமையாக தீர்வு கிடைக்காவிட்டாலும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் இணக்கம் காணமுடியுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏசுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அதிலிருக்கும் அதிகாரங்களை முழுமையாக பகிர்ந்தாலேயே பிரச்சினைக்கு தீர்வை காணமுடியுமென இதர கட்சிகள் சிலவற்றின் தலை​வர்கள் எடுத்துரைத்துள்ளனர். இதற்கிடையே கருத்​துரைத்துள்ள உதய கம்மன்பில எம்.பி, 65 வருடகால இனப்பிரச்சினைக்கு 52 நாள்களில் தீர்வு காண முடியாது. அந்த முயற்சி அரசாங்கத்தின் பைத்தியகாரத்தனமானது எனத் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்து பேச்சை ஆரம்பித்திருக்கும் நிலையில், எதிர்மறையான கருத்துரைகளை பரப்பி, அதில் குளிர்காய்ந்து அரசியல் செய்யும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியை பாராட்ட வேண்டும். பங்கேற்ற ஏனைய கட்சிகளின் தலைவர்கள் இதயசுத்தியுடன் இருக்கவேண்டும். ஆக, எதிர்வரும் 52 நாள்கள் மிகவேகமாகவும் கடினமாகவும் உழைக்கவேண்டும். அதனூடாக ஓரளவுக்கேனும் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டால், மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு இந்த 52 நாள்கள் மிகவும் சவால்மிக்கதாகவே இருக்கும் என்பதை நினைவில் கொண்டு செயற்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே காலத்தின் தேவையாகும். (16.12.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .