2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் வழக்கு

Editorial   / 2023 ஜனவரி 23 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் வந்தது. இந்த மனுவை விசாரிக்க மூன்று நபர் கொண்ட அமர்வை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

 2022 ஒக்டோபரில் இதே வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நபர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது மூன்று பேர் அமர்வுக்கு பரிந்துரைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாக்‌ஷி அரோரா, "கர்நாடகாவில் அரசு கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை இருப்பதால் நிறைய மாணவிகள் தனியார் கல்வி நிலையங்களுக்கு மாறிவிட்டனர். இருப்பினும் கல்லூரி தேர்வுகளை அரசாங்க கல்வி நிலையங்கள் தான் நடத்த முடியும். அதனால் தான் இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த மனுவை பரிசீலித்து நான் விசாரணைக்கான திகதியை ஒதுக்குகிறேன். இது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் தன்மை கொண்டது. நீங்கள் பதிவாளரிடம் இதுபற்றி முறையிடுங்கள்" என்றார்.

அதற்கு வழக்கறிஞர் மீனாக்‌ஷி அரோரா, "தேர்வுகள் பிப்ரவரி 6-ஆம் திகதி தொடங்குகின்றன. அதனால், இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டியலிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரினார்.

மாறுபட்ட தீர்ப்பு: முன்னதாக, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு நீதிபதி சுஷந்த் துலியா கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.

"வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதால் தனிநபர் சுதந்திரமோ இஸ்லாமிய மாணவிகளின் உரிமையோ பறிபோகாது" என்று நீதிபதி ஹேமந்த் குப்தா கூறினார்.

அதேவேளையில், நீதிபதி சுஷாந்த் துலியா கூறும்போது, "ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறையா இல்லையா என்று கர்நாடக உயர் நீதிமன்றம் முடிவு செய்ததே தவறு” என்றார். உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிஜோ இமானுவேல் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதி துலியா, “ஒரு பழக்கம் நடமுறையில் உள்ளதா அது நிறுவப்பட்டதா, அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை மட்டுமே நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஹிஜாப் அணிதல் என்பது இந்த மூன்று புள்ளிகளையும் உள்ளடக்கியுள்ளது" என்றார். இந்நிலையில், தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி மாணவிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .