2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ரஷ்ய தலையீட்டு குற்றச்சாட்டுகள்: விசாரணைக்கு விசேட வழக்குரைஞர்

Shanmugan Murugavel   / 2017 மே 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் காலத்தில், டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்ய அதிகாரிகளுக்குமிடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு, விசேட வழக்குரைஞர் ஒருவரை, ஐ.அமெரிக்க நீதித் திணைக்களம் நியமித்துள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) பணிப்பாளராகப் பணியாற்றிய றொபேர்ட் எஸ். மல்லர் III என்பவரே, இவ்வாறு விசேட வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்த நடவடிக்கை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் அவரது குழுவினருக்கும் கிடைத்த மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.  

தேர்தல் காலத்தில் ரஷ்யர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் ஜெப் செஸன்ஸ், ரஷ்யா தொடர்பான அனைத்து விசாரணைகளிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டுள்ளதன் காரணமாக, பிரதி சட்டமா அதிபர் றொட் ஜே. றொசென்ஸ்டெய்ன், இந்த நியமனத்தை வழங்கினார்.  

ரஷ்யா தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த எப்.பி.ஐ-இன் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியை, ஜனாதிபதி ட்ரம்ப், பதவியிலிருந்து நீக்கியிருந்த நிலையில், இந்த விசாரணை, நீதித் திணைக்களத்திலிருந்து வெளியாக, சுயாதீனமாக இடம்பெற வேண்டும் என, ஜனநாயகக் கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு, நீதித் திணைக்களம், அடிபணிந்ததாகவே, இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.  

ஜேம்ஸ் கோமியின் பதவி நீக்கம் தவிர, கோமியின் காலத்தில், மைக்கல் ஃபிளினுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த விசாரணையை முடிக்குமாறு, ஜனாதிபதி ட்ரம்ப் அழுத்தம் வழங்கினார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்நிலையிலேயே, வழக்கமான நீதித் திணைக்கள நடைமுறைகளுக்குள் இல்லாது, சுயாதீனமான ஒருவரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு, ஜனநாயகக் கட்சியினர், தேர்தலில் தோற்ற பின்னர், அதை மறைப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சியென, ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவரும் நிலையில், சுயாதீன விசாரணையாளரை நியமிக்கும் அளவுக்கு, இந்த விசாரணையை முக்கியமாகக் கருதுவதாக, நீதித் திணைக்களம், இந்த நடவடிக்கை மூலம் காட்டியிருப்பதாகவே கருதப்படுகிறது.  

விசேட வழக்குரைஞருக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின்படி, ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்குமிடையிலான தொடர்புகளை ஆராய்வதோடு மாத்திரமல்லாது, அது தொடர்பான விசாரணைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள், தனது விசாரணைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் ஆகியவற்றையும் விசாரிக்கும் அதிகாரம், விசேட வழக்குரைஞருக்குக் காணப்படுகிறது. எனவே, ஜேம்ஸ் கோமிக்கு, ஜனாதிபதி ட்ரம்ப்பால் அழுத்தங்கள் காணப்பட்டிருந்தால், அதையும் அவர் விசாரணை செய்ய முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .