2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

உலகை அச்சுறுத்தும் தாக்குதல்: ஐ.நா. எச்சரிக்கை

S.Renuka   / 2026 மார்ச் 01 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல், உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் கட்டுப்படுத்த முடியாத சங்கிலித்தொடர் நிகழ்வுகளை தூண்டும் அபாயம் இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களில் உலகின் சக்திவாய்ந்த 15 நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடியது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ், "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை நாம் காண்கிறோம். உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத சங்கிலித் தொடர் நிகழ்வுகளை தூண்டும் அபாயத்தை இந்த இராணுவ நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் உலகிற்கும் இப்போது அமைதிக்கான ஒரு வழி தேவை. பதற்றத்தைக் குறைத்து உடனடியாக விரோதங்களை நிறுத்த வேண்டும். இது பொதுமக்களுக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மோதலாகும்.

மேலும், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் ஈரானின் தாக்குதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய இராணுவத் தாக்குதல்களை கண்டிக்கத்தக்கது.

தெஹ்ரானில், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்சத் தலைவரின் வளாகம் உள்ளிட்ட இடங்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இஸ்ரேலிய வட்டாரங்களின்படி, ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி உட்பட பல உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதை நான் உறுதிப்படுத்தும் நிலையில் இல்லை.

அத்துடன், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ எஸ்டேட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்ரூத் சமூக வலைதளத்தில் கமேனியின் மரணத்தை அறிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் மோதின. அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், "வரலாற்றில் இது தார்மீக தெளிவு தேவைப்படும் ஒரு தருணம். எந்தவொரு இறையாண்மை அரசாங்கத்தின் மிக அடிப்படையான கடமை அதன் மக்களைப் பாதுகாப்பதாகும். அதனால்தான் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

ஈரானுக்கு ராஜதந்திர வாய்ப்புகள் இருந்தபோதிலும் அணு ஆயுத உற்பத்திக்கான நோக்கங்களை கைவிட மறுத்தது ஒரு கடுமையான மற்றும் பெருகிவரும் ஆபத்தை முன்வைக்கிறது. ஈரானில் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. இதற்காக அமெரிக்கா சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐ.நாவில் தார்மீக தெளிவு இல்லாத இடத்தில், அமெரிக்கா அதை பராமரிக்கும்" என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .