2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஐ.எஸ் ஆயுததாரிகள் 200 பேர் சரணடைந்தனர்

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சிரியாவில் தமது இறுதியிடம் பக்கூஸ் தொடர்பான ஆக்ரோஷமான மோதலொன்றைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் 200 பேர் சரணடைந்ததாகவும் ஆனால், 1,000 பேர் அளவிலானோர் இன்னும் மறைந்திருப்பதாக, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகளின் பேச்சாளர் மொஸ்தபா பாலி, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

யுப்ரேட்டஸ் நதிக்கரையில் அமைந்திருக்கின்ற பக்கூஸில் தோல்வியை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு எதிர்கொள்கின்றபோதும் குறித்த இடத்திலிருந்து மேலும் மேற்காக சில ஒதுக்குபுறமான பகுதிகளைக் கொண்டிருப்பதுடன், அங்கிருந்து தாம் இழந்த பகுதிகள் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்துகிறது.

இந்நிலையில், முழுமையாக வெளியேறி விட்டனர் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட பொதுமக்கள், பக்கூஸினுள்ளே சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தமது தாக்குதலை மெதுவாக்குவதாக, சிரிய ஜனநாயகப் படைகள் நேற்று முன்தினம் அறிவித்திருந்தபோதும் விரைவில் பக்கூஸை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளது.

அந்தவகையில், முன்னர் பொதுமக்களை வெளியேற்றிய ட்ரக்குகள், பக்கூஸுக்குள் நேற்று முன்தினம் மீண்டும் சென்றிருந்தன.

இதேவேளை, சரணடைந்த ஆயுததாரிகள், உஸ்பெக்கிஸ்தான், துர்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என சிரிய ஜனநாயகப் படைகளின் பிரிவொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யாரை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு வைத்திருக்கிறதெனத் தெரியவில்லை எனத் தெரிவித்த சிரிய ஜனநாயகப் படைகளை ஆதரிக்கும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டணியின் பேச்சாளர் கேணல் ஷோண் றயான், அவர்கள் பாதிப்பில்லாமல் விடுவிக்கப்படுவார் என நம்புவதாகக் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X