2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கள்ளச் சாராயம் குடித்து அஸாமில் 130 பேர் பலி

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸாமில், கள்ளச் சாராயம் அருந்தி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தோரில் அநேகமானோர், தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் எனவும், கொலகட், ஜோர்ஹமட் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை இரவே, கள்ளச் சாராயம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னர் வெளியான செய்தியின் அடிப்படையில், சுமார் 100 பேர் உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டது. ஆனால், நேற்று மாத்திரம், 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்மூலமாக, இந்திய வரலாற்றில், கள்ளச் சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட மிக அதிகமான உயிரிழப்புகளுள் ஒன்றாக இது மாறியது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்குமென அச்சம் வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 200க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றனர் என அறிவிக்கப்படும் நிலையிலேயே, இவ்வச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியாளர்கள், மெதனோல் உள்ளடங்கிய மதுபானத்தை அருந்தினர் எனவும், அதைத் தொடர்ந்து மயங்கிவிழ ஆரம்பித்தனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. மெதனோல் என்பது, மனித உடலின் மத்திய நரம்புத் தொகுதியைத் தாக்கும் இரசாயனமாகும்.

இந்த உயிரிழப்புகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, அஸாமின் முதலமைச்சர் சர்பனந்தா சொனோவால் உத்தரவிட்டுள்ளார்.

இம்மதுபானம் விற்கப்பட்டமை தொடர்பில், ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், இந்த மது விற்பனை தொடர்பில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காக, கலால் திணைக்கள அதிகாரிகள் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டனர்.

முன்னதாக, பெப்ரவரி 2ஆம் வாரத்தில், வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தரகான்ட் ஆகியவற்றில் கள்ளச் சாராயம் அருந்தியதால், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X