2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

காஷ்மிரில் மீண்டும் பதற்றம்; துப்பாக்கிச் சண்டையில் எழுவர் பலி

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் சர்ச்சைக்குரிய காஷ்மிரில், ஆயுததாரிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று (18) காலை ஏற்பட்ட துப்பாக்கி மோதலில், நான்கு படையினரும் ஆயுததாரிகள் இருவரும் கொல்லப்பட்டனர் என, பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இஸ்லாமிய ஆயுதக்குழுவொன்றால், துணை இராணுவப் பொலிஸ் பிரிவு நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டு நான்கு நாள்களில் இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, குறித்த தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களைத் தேடி, தேடுதல் நடவடிக்கையில் பொலிஸாரும் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

தாக்குதல் நடத்தப்பட்ட புல்வமா மாவட்டத்திலுள்ள பிங்லான் என்ற கிராமத்தை, இந்தியப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளரொருவர், அதன் போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலதிகமாகக் கருத்து தெரிவித்த மாநிலத்தின் பொலிஸ் அதிகாரியொருவர், கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ள ஜெய்ஷ்-ஈ-மொஹமட் குழுவைச் சேர்ந்த 3 பேர், பிங்லான் கிராமத்தில் மறைந்திருக்கின்றனர் எனத் தகவல் கிடைத்துள்ளதெனவும், அவர்களுள் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரிவித்ததோடு, படை நடவடிக்கை முடிவுக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார். 

குறித்த ஆயுததாரிகள், அக்கிராமத்தின் வீடொன்றில் ஒளிந்து காணப்படுகின்றனர் எனவும், அதன் போதே துப்பாக்கி மோதல் ஏற்பட்டது எனத் தெரிவித்த பொலிஸ் தகவல்கள், இதன் போது, அவ்வீட்டின் உரிமையாளர் காயமடைந்தாரெனவும், அவரே பின்னர் உயிரிழந்தாரெனவும் தெரிவித்தன. 

புல்வமா பகுதியில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்களை வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X