2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘ட்ரம்பை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது’

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, 2017ஆம் ஆண்டு, பதவியிலிருந்து அகற்றுவதற்கு, எத்தனை அமைச்சரவை உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என அந்நாட்டின் பிரதி சட்டமா அதிபர் றொட் றொசென்ஸ்டைன் கலந்துரையாடியதாக, ஐக்கிய அமெரிக்காவின் புலன்விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (எஃப்.பி.ஐ) முன்னாள் பதில் பணிப்பாளர் அன்ட்ரூ மக்கபே, நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.  

எஃப்.பி.ஐ-இன் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியை, 2017 மேயில், ஜனாதிபதி ட்ரம்ப் பதவி நீக்கிய பின்னர், ஐ.அமெரிக்க அரசமைப்பின் 25ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து, றொட் றொசென்ஸ்டைன் கலந்துரையாடியதாக மக்கபே கூறியுள்ளார்.  

இந்த 25ஆவது திருத்தமானது, ஜனாதிபதி இறந்தால், பதவியிலிருந்து அகற்றப்பட்டால், பதவியை இராஜினாமா செய்தால் அல்லது உடற்றகுதி இல்லாவிட்டால், பிரதியீட்டுக்கான நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது.  

மேற்குறித்த விடயத்தை றொசென்ஸ்டைன் பிரஸ்தாபித்ததாகவும் இவ்வாறான நடவடிக்கைக்கு அமைச்சரவை அதிகாரிகள் எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்ற நோக்கத்தில் கலந்துரையாடியதாகவும்,  மக்கபே தெரிவித்தார்.  

2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலில் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் மீதான விசாரணையை எஃப்.பி.ஐ கையாண்டமை தொடர்பான உள்ளக விசாரணையில் வெளிப்படைத்தன்மைக் குறைவு காணப்பட்டமை காரணமாக, மக்கபே, கடந்தாண்டு மார்ச்சில், அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.  

குறித்த நிகழ்ச்சியின் காணொளியொன்று, சி.பி.எஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் ஒளிபரப்பானபோதே, அன்ட்ரூ மக்கபேயின் சர்ச்சைக்குரிய விடயங்கள் முதன்முறையாக வெளிப்பட்டிருந்தன.  

இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவது குறித்து தான் கலந்துரையாடிய தகவல்களை மறுத்துள்ள றொட் றொசென்ஸ்டைன், ஜனாதிபதி ட்ரம்ப்புடனான தனது கலந்துரையாடல்களை இரகசியமாகப் பதிவுசெய்வதற்காக வயரொன்றை அணி வது குறித்து ஆராய்ந்ததாகத் தான் தெரிவித்திருந்தால் அது நகைச்சுவையொன்று எனக் கூறியிருந்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X