Editorial / 2019 ஜனவரி 25 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அமெரிக்க நாடான வெனிசுவேலாவில், இரண்டு பேர் ஜனாதிபதிப் பதவிக்கு உரிமை கோருவதன் காரணமாக, மாபெரும் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றிபெற்ற நிக்கொலஸ் மதுரோவும், எதிர்க்கட்சித் தலைவரான ஜுவான் குவைய்டோவுமே, இவ்வாறு ஜனாதிபதிப் பதவிக்கு உரிமை கோரியுள்ளனர்.
வெனிசுவேலாவில் கடந்தாண்டு மே மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை, அநேகமான எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன. அத்தேர்தலில், 67.8 சதவீதமான வாக்குகளைப் பெற்று, நிக்கொலஸ் மதுரோ வெற்றிபெற்றாரென அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தேர்தலில் மோசடி இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன. இவற்றுக்கு மத்தியில், தனது இரண்டாவது பதவிக் காலத்துக்காக அவர், கடந்த வாரம் பதவியேற்றிருந்தார். அதைத் தொடர்ந்து, எதிர்ப்புகளும் எழுந்திருந்தன.
இந்நிலையில், வெனிசுவேலா நேரப்படி நேற்று முன்தினம் (24), நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைய்டோ அறிவித்தார். இதையடுத்தே, பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. ஜுவானுக்கான ஆதரவை, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுள்ள நிலையில், கடுமையான அழுத்தத்தை, மதுரோ எதிர்கொண்டுள்ளார். இதற்குப் பதிலடியாக, ஐ.அமெரிக்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக அறிவித்த அவர், தமது நாட்டிலுள்ள இராஜதந்திர அதிகாரிகள், 72 மணிநேரத்துக்குள் வெளியேற வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
தொலைவிலிருந்து வெனிசுவேலாவை ஆள்வதற்கு ஐ.அமெரிக்கா முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர், தலையீட்டு முயற்சிகளில் அந்நாடு ஈடுபடுகிறது எனவும் தெரிவித்ததோடு, அரசியல் சதி முயற்சியில் எதிரணி ஈடுபடுகிறது எனவும் தெரிவித்தார்.
எனினும், மதுரோவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஐ.அமெரிக்கா, இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதற்கான அதிகாரம் அவருக்குக் கிடையாது என, பதில் வழங்கியுள்ளது.
புதிய ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்துள்ள ஜுவான், புதிய தேர்தலொன்று நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளதோடு, நாட்டின் உண்மையான தலைவர் தானே எனக் குறிப்பிட்டுள்ளார். முப்பத்தைந்து (35) வயதான ஜுவான், இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தி, நீதியான தேர்தலை நடத்துவதே தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

மதுரோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்திருந்ததோடு, இரு நாள்களாக இடம்பெற்ற முரண்பாடுகளில், 13 பொதுமக்கள், அந்நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது ஜனாதிபதிப் பதவிக்கு இரண்டு பேர் உரிமை கோருவது, அங்கு மேலும் வன்முறையை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
35 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
9 hours ago
05 Nov 2025