2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ் நாட்டின் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உத்தரவிட்ட இந்தியாவின் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை இரத்துச் செய்து உத்தரவிட்ட இந்திய உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடைவிதித்தது. இவ்வுத்தரவு நேற்று (18) விடுக்கப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்தாண்டு நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசாங்கத்தின் உத்தரவுப்படி, ஆலை மூடப்பட்டது.

எனினும், அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்தும், ஆலையை மூடப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இரத்து செய்யக் கோரியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமம் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை உடனே அமுல்படுத்த தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி, வேதாந்தா குழுமம் சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதியரசர்கள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளும், இந்த மனுக்களோடு சேர்த்து விசாரிக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வழக்கில்  உச்ச நீதிமன்றம், நேற்றுத் தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி, ஆலையைத் திறக்க அனுமதி வழங்கிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை இரத்துச் செய்து உத்தரவிட்டனர். அத்துடன், ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசாங்கத்தின் அரசாணையை இரத்துச் செய்ய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், தெரிவித்தனர்.

மேலும், “இதுதொடர்பாக தமிழக அரசாங்கமும் வேதாந்தா நிறுவனமும், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகித் தீர்வு பெற்றுக்கொள்ளலாம்” என்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X