Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூன் 19 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- விஜயரத்தினம் சரவணன்
வடக்கு மமாகாணத்தில் விளையாட்டுத் துறையில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வன்னிப் பகுதியில் விளையாட்டுத் துறை சார்ந்து காணப்படும் வளப் பற்றாக்குறைகளையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றுகையிலேயே இக்கோரிக்கைகளை ரவிகரன் முன்வைத்துள்ளார்.
ரவிகரன் இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“பல தேசியப் பதக்கங்களை வட மாகாணம் பெற்றுக்கொண்டபோதும், வடக்கு மாகாண விளையாட்டுத்துறையின் செயற்பாட்டிற்காக வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது.
வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் ஐந்து மாவட்ட உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில் மூன்று நிரந்தர மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களே காணப்படுகின்றனர். அதேவேளை 24 பயிற்றுநர்கள் தேவையான நிலையில், 16பயிற்றுநர்களும், 33 விளையாட்டு உத்தியோகத்தர்கள் தேவையான நிலையில் 25விளையாட்டு உத்தியோகத்தர்களும் காணப்படுகின்றனர்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆறுபேர் தேவையானநிலையில் இரண்டு விளையாட்டு உத்தியோகத்தர்களே காணப்படுவதுடன், பயிற்றுநர்கள் ஐவர் தேவையானநிலையில் இரண்டு பயிற்றுநர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர்.
வடமாகாண விளையாட்டுத் திறனை மேம்படுத்த, காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இலங்கையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில்தான் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும், கூடைப்பந்தாட்டம் விளையாடக் கூடியதான உள்ளக அரங்கு இல்லாதநிலை காணப்படுகின்றது. இதுதவிர நீச்சல் தடாகமும் அற்றஇடமாக முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்கள் காணப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான உடல்வலுவூட்டல் பயிற்சிநிலையம்கூட இல்லாத நிலை காணப்படுவதுடன், பயிற்சி உபகரணங்களும் இல்லாத நிலமை காணப்படுகின்றது. அவ்வாறு உபகரணங்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் எமது இளைஞர்களும் சிறப்பானமுறையில் விளையாட்டில் இன்னும் பிரகாசிக்கக்கூடிய நிலை ஏற்படுமென உறுதியாக நம்புகின்றேன்.
அதேவேளை மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்ட விளையாட்டுக் கட்டத்தொகுதியும் இங்கு அமைக்கப்படவில்லை.
விளையாட்டு உபகரணங்களின் பற்றாக்குறை, மாகாண மற்றும், தேசிய ரீதியில் பதக்கங்களைப்பெற்றவர்களுக்குக்கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. தொழில் வாய்ப்புக்களில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.
மாகாண விளையாட்டுத் திணைக்களத்துக்குகு ஓர் பஸ் வழங்கப்படுமாயின் விளையாட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்தலாமென்பது எனது ஆலோசனை.
அத்தோடு மாணவர்களுக்குத் தொடச்சியான ஊட்டச்சத்து வழங்கலுடன், பயிற்சிகளை வழங்கினால் விளையாட்டுத் திறன் அதிகரிக்கும்.
பின்தங்கிய மாவட்டமென்று எம்மை ஒதுக்கிவிடாது, விளையாட்டுத்துறையில் எமது இளைஞர்களுக்கு சிறந்த வசதி வாய்ப்புக்களை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
விளையாட்டுக் கட்டடத்தொகுதியொன்றை முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கவேண்டுமென்ற பலருடைய கோரிக்கைகள் ஆராயப்பட்டு, கட்டடத்தொகுதி அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்பு அந்தவிடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதேவேளை மாவட்டத்துக்கு விளையாட்டுக் கட்டடத்தொகுதி என்ற வகையில் மன்னார் நறுவிலிக்குளத்தில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. இதற்கான முயற்சிகளையும் துரிதமாகச்செய்து முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு விளையாட்டுக் கட்டடத்தொகுதிக்கான காணி தெரிவுசெய்யப்பட்டு நிலஅளவைசெய்யப்பட்டதுடன், மண் மற்றும், நீர் பரிசோதனைகளும் பூர்த்திசெய்யப்பட்டிருந்தும் அந்த வேலைகள் அனைத்தும் முன்னைய அரசின் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஆனால் நிறைவான விளையாட்டுவீரர்கள் மாவட்டத்திலுள்ளார்கள்.
கடந்தகால கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களுக்குள்ளான நிலையிலிருக்கும் இளைஞர், யுவதிகளை மன உளைச்சலில் இருந்து விடுவிக்கவும் மேற்குறித்த விளையாட்டுக் கட்டடத்தொகுதி அமைத்து பின்தங்கிய எமது மாவட்டத்திற்கு உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago