2025 மே 07, புதன்கிழமை

இலங்கையுடனான பங்காண்மையை பலப்படுத்தும் அமெரிக்கா

Editorial   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

​  இலங்கை மக்கள் மற்றும் அவர்களுடனான எமது பங்காண்மை ஆகியவற்றில் நாம் நீண்டகாலமாக மேற்கொள்ளும் முதலீட்டை மேலும் அதிகரிப்பதற்காக அமெரிக்க மக்களிடமிருந்து 24.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 7.2 பில்லியன்) வழங்குவதற்கான ஒரு மேலதிக உறுதிப்பாட்டினை அறிவிப்பதில் அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஆசிய பணியகத்திற்கான உதவி நிர்வாகியான மைக்கல் ஷிஃபர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நிதியமைச்சில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் இந்த மேலதிக நிதியளிப்பு தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

வௌ்ளிக்கிழமை (09)  இடம்பெற்ற அந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹவுடன் USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவும் கலந்து கொண்டார்.

USAIDஇற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான அபிவிருத்தி நோக்கத்திற்கான மானிய ஒப்பந்தத்தினூடாக உறுதியளிக்கப்பட்ட இந்நிதியானது இலங்கையின் சந்தை உந்துதலால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்தும், சுற்றுச்சூழலின் நிலைபேறான தன்மை மற்றும் அதன் மீண்டெழும் தன்மை ஆகியவற்றைப் பேணி வளர்க்கும் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும். அரசாங்க நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றுடன் எமக்கிருக்கும் பங்காண்மைகளின் ஒரு விளைவாக, இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற எமது கூட்டு முயற்சிகளுக்கு இந்த நிதி உதவி செய்கிறது.

இம்மேலதிக நிதியளிப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லாட்சியில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் : “அமெரிக்காவானது 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை மக்களில் முதலீடு செய்துள்ளதுடன், தமது தொழில்முனைவு நோக்கங்களில் இலங்கை மக்களை வலுவூட்டுகின்ற, காலநிலை மாற்றங்கள் மற்றும் பேரினப்-பொருளாதார அதிர்ச்சிகளின் போதான இலங்கையின் மீண்டெழும் தன்மையினைப் பலப்படுத்துகின்ற, மற்றும் நாடு முழுவதுமுள்ள மக்களின் வாழ்வை வளப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இம்மேலதிக நிதியளிப்பானது இலங்கையிலுள்ள எமது உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் கொண்டுள்ள நிலையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதுமுள்ள சமூகங்கள் நீடித்த ஸ்திரத் தன்மையினையும், செழிப்பான வாழ்க்கையினையும் அனுபவிப்பதற்கான ஒரு அடித்தளத்தை ஒன்றாக இணைந்து நாங்கள் உருவாக்குகிறோம்.” எனத் தெரிவித்தார்.

“இலங்கையுடனும் அதன் மக்களுடனும் எமக்கிருக்கும் பங்காண்மை குறித்துஅமெரிக்காவும் அமெரிக்க மக்களும் பெருமையடைகிறார்கள்” என USAIDஇன் ஆசிய பணியகத்திற்கான உதவி நிர்வாகியான ஷிஃபர் கூறினார். “இலங்கையின் அபிவிருத்திச் சவால்களுக்கான நிலைபேறான தீர்வுகளுக்கு ஒரு உந்து சக்தியினை வழங்குவதற்காக, உள்நாட்டில் வழிநடத்தப்படும் முன்முயற்சிகளுக்கு மேலும் உதவிசெய்வதற்கான ஒரு முதலீடாக இந்நிதியளிப்பு அமைகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், நீர், துப்புரவுப்பணிகள்,உட்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் வணிக அபிவிருத்தி மற்றும் தேவையுடையமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றிற்கு உதவியாக 16956 ஆம் ஆண்டு முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (ரூ.598 பில்லியன்) அதிகமான பெறுமதியுடைய உதவிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஏழு தசாப்தங்களாக, இலங்கையின் டீசல் புகையிரதங்களை நவீனமாக்குதல், இலங்கையின் திரிபோஷா குறைநிரப்பு போசாக்கு நிகழ்ச்சித்திட்டம், மின்சார வாகன மின்னேற்றல் நிலையங்களை விருத்தி செய்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுதல் போன்ற பல விடயங்களுக்கு அமெரிக்கா உதவி செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X