2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பதவி, பட்டம் சேவையாற்றுவதற்கான கருவிகள்: சுகுணன்

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்


பதவி பட்டம் இருந்தால்தான் சமூகத்துக்கு சேவையாற்ற முடியும் என எவரும் நினைக்கக் கூடாது. அவை சேவை செய்வதற்குரிய கருவி மாத்திரமே என்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐp.சுகுணன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் தென்றல் சஞ்சிகையின் ஏற்பாட்டில், கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளை எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (31) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கலந்து கொண்டு நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


ஒரு மனிதனின் உன்னதமான நோக்கம் என்னவெனில், தான் வாழ்கின்ற காலத்தில் தனது சக்தியை பயன்படுத்தி தன்னால் ஆன உதவிகளை அல்லது பங்களிப்புக்களை சமூகத்துக்கு செய்ய வேண்டும். பதவி பட்டம் இருந்தால் தான் நாங்கள் சேவையாற்ற முடியும் என எவரும் நினைக்கக் கூடாது. இவற்றுக்கு அப்பால் இந்த பதவி, பட்டம் அனைத்தையும்  மக்கள் சேவைக்கு கருவியாக பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.


புத்தக வெளியீட்டு விழா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் புத்தகமின்றி எந்த கல்வியும் இல்லை. நிறைய விடயங்களை வாசித்து அறிவதன் மூலமே, நாங்கள் கல்வியிலோ ஏனைய விடயங்களிலும் வீர நடை போட்டுச் செல்ல முடியும். இதனால் நாங்கள் வாழ்வில் முழுமையும் முன்னேற்றமும் காண்கின்றோம்.


எனவேதான், புத்தகக் கல்வியானது மனித வாழ்வில் இன்றியமையாததாக காணப்படுகின்றது. இந்த புத்தகமானது, நிறைய வகைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இந்த வகையில் கின்னஸ் எனும் உலக சாதனையை பதிவு செய்யும் புத்தகமானது மிகவும் முக்கியமானதாக கொள்ளப்பட்டாலும் அதனை நான் தேவையற்ற ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். காரணம் என்னவென்றால் ஒருவர் 24 மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக பேசி சாதனை படைத்தார் என்பதனை அப்புத்தகத்தில் சாதனையாக பதிவு செய்கின்றனர். ஆனால் அதனை 24 மணித்தியாலமும் அமைதியாக கேட்டிருந்தவர்களை சாதனையில் பதியவில்லை. இதனால் தான் நான் அதனைக் கூறுகின்றேன்.


இங்கு வெளியிடப்படும் புத்தகமானது, சமூகத்துக்கு அழிக்க முடியாத சொத்தாக காணப்படுகின்றது. மரணம் என்பது ஒரு சாதனையாளருக்கு முற்றுப்புள்ளியல்ல. ஏனென்றால் விபுலானந்தர், விவேகானந்தர், காந்தியடிகள் போன்றோர் மரணித்த பின்பும் இன்றும் எமது மனங்களில் குடி கொண்டவர்களாகவும் தினமும் நினைத்து பேசக் கூடியவர்களாகவும்  உள்ளமை இதற்கு பெரிய சான்றாக உள்ளது.


பூவை கசக்குகின்றவன் அதிலிருந்து வாசனையை கற்றுக் கொள்கின்றான். அந்த வகையில் இவ்வாசிரியரிடம் இருந்து நான் அன்பு, பண்பு, கருணை போன்றவற்றை எனது மாணவப் பருவத்தில் இருந்து நான் கற்றுக் கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .