Freelancer / 2024 ஜூன் 20 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன்பிடி நடவடிக்கையின் போது இழுவை மடிவலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், யாழ். மாவட்டத்தில் சில இடங்களில் சட்டத்தை மீறி அந்த வலை பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19), கடற்றொழில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
2017/11ஆம் இலக்க நீரியல்வள திருத்த சட்டத்தின் பிரகாரம் இழுவை மடிவலை தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் இழுவை மடிவலை பாவனையை நிறுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் அந்த இழுவை மடிவலை பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே இதனை இதனை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பரா? அவ்வாறு அங்கே இழுவை மடிவலை பயன்படுத்தப்படுவது தொடர்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். அவ்வாறு அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 2017/ 11 ஆம் இலக்க நீரியல்வள திருத்த சட்டத்தை நீங்கள் மீறிச் செயற்பட்டுள்ளீர்கள். இதற்கு அமைச்சரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றேன் என்றார்.
இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீதான எதிர்க்கட்சித் தலைவரின் அக்கறைக்கு நன்றி, இதேவேளை இழுவை மடிவலை தொடர்பாக 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் தனிநபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்டு அதனை பின்னர் கடற்றொழில் அமைச்சு பொறுப்பேற்றுக் கொண்டது. கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் நாரா நிறுவனத்தின் ஆய்வுக்கு பின்னர் எந்தெந்த பகுதிகளில் செய்யலாம் என்று கூறி தீர்மானிக்கப்பட்டதுடன் அந்த இடங்களில் மென் இழுவைவலைக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் வழங்கப்படவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .