2021 ஜூன் 14, திங்கட்கிழமை

வௌ்ளவத்தையில் 5 மாடிகள் சரிந்தன; 28 பேர் படுகாயம்: ஒருவர் பலி

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கத்துக்கு அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டடமொன்று, நேற்று (18) முற்பகல் 11 மணியளவில் சரிந்து விழுந்ததில், அங்கு நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 28பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலன்கொட, ஹசலகவைச் சேர்ந்த ரத்நாயக்க  (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேற்படி நபரை, நேற்று மாலையே இராணுவத்தினர் மீட்டுள்ளதுடன், இவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டபோதிலும் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌ்ளவத்தை, சார்ளிமன்ட் வீதியில், மிக நீண்டகாலமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடிகளைக் கொண்ட கட்டடமே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது. அச்சந்தர்ப்பத்தில் அங்கு கூலி வேலை செய்துகொண்டிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர்.  

இந்தக் கட்டடம் வாகனத் தரிப்பிட வசதியுடன் நிர்மாணிக்கப்படுகிறது. மூன்று மாடிகளின் வேலைகள் ஏற்கென​வே நிறைவடைந்துவிட்டன. ஆகையால், வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்கள் பல நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தால், அந்த வாகனங்களும் நசுங்குண்டன.  

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு, மிக அவசரமான தேடுதல் பணிகளை முப்படையினரும் பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் முன்னெடுத்திருந்தனர்.   

கட்டடம் விபத்துக்குள்ளான போது, அங்கு சுமார் 45 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சவோய் திரையரங்குக்கு வந்திருந்த வாகனங்கள், திருமண மண்டபத்துக்கு வந்திருந்த வாகனங்கள் மற்றும் பாடசாலைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என, சுமார் 30 வாகனங்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்தன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

முறையற்ற நிர்மாணம் காரணமாகவே, இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக, அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இது தொடர்பில் பொலிஸாரிடம் வினவியபோதும், இது குறித்து சரியான காரணத்தை இதுவரை ஊகிக்க முடியாதுள்ளதாகக் கூறினர்.   

மேற்படி கட்டடம், 5 வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் இதன் பணிகள், கட்டம் கட்டமாகவே முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த பிரதேசவாசிகள், நிர்மாணப் பணிகள் முழுமைபெறாத நிலையில், சில மாடிகளுக்கான திறப்புவிழாக்களையும் நடத்திவிட்டு, மீண்டும் நிர்மாணப் பணிகளைத் தொடர்கின்றனர் என்றும் கூறினர்.   
“இந்தக் கட்டடத்தின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில், கட்டட உரிமையாளருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டபோதும், அது குறித்த அவர் அக்கறை காட்டவில்லை. இந்நிலையை அவதானிக்கும்போது, இந்தக் கட்டட நிர்மாணம் முறைகேடான விதத்தில் இடம்பெற்றுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என, பிரதேசவாசிகள் கூறினர்.   

கொட்டும் மழையிலும் மீட்புப் பணிகள்:

​மேற்படி சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களின் பின்னர், கொழும்பில் அடைமழை பெய்தமையால், மீட்புப் பணிகள் சற்று தாமதத்துடன் இடம்பெற்றன. எனினும், பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாது, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை உயிருடன் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.  

இச்சம்பவத்தை அடுத்து, ஸ்தலத்துக்கு உடனடியாக வருகை தந்த பொலிஸார், இராணுவத்தினர், தீயணைப்புப் படையினர், கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும், மீட்பு பணிகளுக்கென பாரம் தூக்கி இயந்திரங்களையும் விசேட வாகனங்களையும் பயன்படுத்தினர்.   

காயமடைந்தவர்களுக்கு முதலுதவி:

காயமடைந்தவர்கள், அம்பியூலன்ஸ் வண்டிகள், அவ்வீதியாகப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலம், உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

மேற்படி சம்பவத்தை அடுத்து, சவோய் திரையரங்கை அண்மித்த பகுதியில், அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு, சுமார் 10 அம்பியூலன்ஸ் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் 7 இந்திய அம்பியூலன்ஸ் வண்டிகளும் அரச வைத்தியசாலைகளைச் சேர்ந்த 3 அம்பியூலன்ஸ் வண்டிகளும் அடங்கின.   

வைத்தியசாலை நிலைவரம்:

மேற்படி சம்பவத்தை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காயமடைந்தவர்களில் 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 19 பேர் ​கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

போக்குவரத்து நிலைவரம்:

இச்சம்பவம் காரணமாக, கொழும்பு - காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரங்களின் பின்னரே போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.  

அத்துடன், அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது. கட்டடத்தை, பொதுமக்கள் பார்வையிடுவதற்கு முற்பட்டபோதும், அக்கட்டடத்தை சூழவுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.  

மேற்படிக் கட்டடம் தொடர்ந்து சரிந்து வருகின்ற காரணத்தினால், அப்பகுதியின் பாதுகாப்பு கருதி, அக்கட்டடத்தை அண்மித்த பகுதியில் வாழும் குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.  

மேற்படி கட்டடமானது, இன்னும் சரியக் கூடிய அபாயத்தில் காணப்படுகின்றமையாலும் கட்டடத்தின் சரிவுக்குள்ளான பெரும்பகுதி, அருகிலுள்ள சவோய் திரையரங்குக் கட்டடத்தில் சாய்ந்துக் கொண்டிருக்கின்றமையாலும், கட்டடத்தை அண்மித்த சில பகுதிகள் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .