Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
களை நாசினிகள், இரசாயன பசளைகளின் தாக்கம், இந்த பூமியை விட்டுவைக்கவில்லை. இரசாயனப் பசளைக்கு அடிமையான விவசாயிகளின் நிலம்தான், இன்று விவசாயிகளின் விளைநிலங்களாக காணப்படுகின்றன.
இரசாயன பசளைகளின் தாக்கம், களை நாசினிகளின் நச்சுத் தன்மையின் விளைவுகள், மனிதர்களை சும்மா விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, வடக்கில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கைக்கு, என்ன காரணம் என ஆராய்ந்தால், நிலத்தின் நீர் ஓட்டத்தில் கலக்கப்படும் இரசாயனங்களே காரணம் என அறியவந்துள்ளது. இதன் தாக்கங்கள் பலஆண்டுகளுக்கு தொடரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்துவரும் சந்ததிகளைக் காப்பாற்ற, அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை சேதனப் பசளை பாவனையாகும். இது, வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், விவசாயிகளுக்குக் கசப்பாகவே இருக்கின்றது. விவசாயிகளின் அடுத்தடுத்த தலைமுறையைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவுமே அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என உணரமுடிகின்றது. இதை, விவசாயிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்னைய காலத்தில், காட்டாற்று நீரைக் குடித்து வாழ்ந்த விவசாயிகள், இன்று அவர்களின் கிணற்று நீரைக் கூட குடிக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதற்கெல்லாம் காரணம், நிலத்தடி நீரில் ஏற்பட்ட மாசுபடுதல்கள்தான். குடி தண்ணீருக்காக இன்று வன்னியில் அல்லற்படும் மக்களும் சுத்தமான குடிநீரினைப் பெற்றுக்கொள்ளமுடியாத மக்களுமாகவே தண்ணீரினை விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆயிரக்கணக்கில் குளங்கள் இருந்தும், என்ன பலன்? சுத்தமான குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் பிரயத்தனம்தான் எத்தனை எத்தனை...
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் ஊடாக, மக்களின் ஆயுட்காலத்தையும் அதிகரித்துக்கொள்ளலாம். இன்று ஆயுட்காலம் குன்றிய நாடுகளின் வரிசையில், எங்கள் நாடும் இடம்பிடித்துள்ளது.
இவற்றை மாற்றி அமைக்கவே, சேதனப் பசளையும் இயற்கை விவசாயத்தையும் விவசாயிகள் கையில் எடுக்க வேண்டிய காலகட்டத்தை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
மண்ணின் வளம் சமநிலையில் பேணப்படும்போது, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையிலேயே இரசாயனக் கலவைகளை மண்ணில் விதைக்காமல் இயற்கையோடு ஒன்றிப் பயணிப்போம். எங்கள் நாட்டையும் நாட்டின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் தூண்களாக விவசாயிகளும் மாறவேண்டும் என்பதற்கு, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில்லைச் சேர்ந்த அருந்தராசா என்ற விவசாயி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கமநலசேவை பிரிவில் மருதங்குளத்தின் கீழ், இம்முறை சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் அறுவடையைப் பெற்றுள்ளனர். இந்தப் பிரதேசத்தில் ஒரு விவசாயி ஏனைய விவசாயிகளுக்கு முன்னுதாராணமாக, சிக்பு நெல்லை விதைத்து, நெல்லின் விளைச்சலை அதிகரித்தும் களையையும் கட்டுப்படுத்தியுள்ளார். அருந்தராசா என்ற விவசாயி, விவசாய போதானாசிரியர்களின் ஆலோசனைக்கு அமைவாக அறுவடையில் வெற்றிகொண்டுள்ளதுடன் சிறந்த விளைச்சலினையும் எடுத்துள்ளார்.
இவர் கூறுகின்றார், “வயல் நிலங்களில் உள்ள பன்றி நெல் எனப்படும் களையினை அழிப்பதற்கு முயற்சி எடுத்தும் அது கட்டுப்படுத்த முடியவில்லை. களையினை கட்டுப்படுத்துவதற்காக சிகப்பு நெல்லினை எந்த அறிமுகமும் இல்லாமல் இரண்டு ஏக்கருக்கு விதைத்தேன். நல்ல அறுவடை கிடைத்தது. களையினையும் கூலி கொடுத்து கட்டுப்படுத்த முடிந்தது. இந்த சிகப்பு நெல்லிற்கு ஒரு மதிப்புள்ளதாக நெல்லு வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது எனக்கு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால் தொடர்ந்து அடுத்த போகத்திற்கு பத்து ஏக்கருக்கு இந்த நெல்லினை விதைப்பதாக முடிவு செய்துள்ளேன்.
இந்த சிகப்பு நெல்லின் முளைதிறன் சிறப்பாக உள்ளது. வயிலில் தண்ணீருக்குள் சேத்துக்குள் தாண்டாலும், தண்ணி வத்த வத்த முளைக்கும். காற்றுக்கு நெல்லு விளாது; ஏனைய நெல்லு இனங்கள் காற்றிற்கு சாய்ந்து விழுந்துவிடும். இது அவ்வாறு இல்லை. ஏனைய களைகளைக் கட்டுப்படுத்த (கோரை, நெற்சப்பிக்கு) மருந்து அடித்துள்ளேன். இரண்டு தடவைகளே பசளையைப் போட்டுள்ளேன். அடிக்கட்டு பசளையும் ஒருபசளையும் தான் வயலுக்கு இட்டுள்ளேன்.
இந்த வயலுக்கு தண்ணீர் கட்டும்போது அசோலா பாசியினை விட்டேன். அது விளைச்சலினை கொடுத்துள்ளது. அசோலா பாசி நிலத்திற்கு நைதரசனின் செறிவினைக் கூட்டும். இதனை பாவிப்பதன் ஊடாக, ஏனைய பசளைகளின் வீதத்தினை குறைத்துக்கொள்ளலாம்.
அசோலா பாசியினை வயலுக்கு இடுவதன் ஊடாக, அது தண்ணியில் பெருகும். இதனால் விவசாய மண்ணின் வளம் பாதுகாக்கப்படும். அசோலா பாவிப்பதால் பசளை இல்லாத காலத்திலும் அதனை எதிர்கொள்வதற்கு பசளை பாவனையினை குறைப்பதற்கும் வழிவகுக்கும். இதனால் பசளை இல்லாத காலத்திலும் வயல் நிலங்களுக்கு வெற்றியளிக்கக்கூடிய விளைச்சலை தரக்கூடிய வகையில், இலகுவாக பெற்றுக்கொள்ளும் அசோலா பாசியில் இருந்து பயன் பெறலாம்” என்றார்.
உண்மையில் வடக்கில் விவசாயிகள் தற்போது அசோலா பாசியினை பாவிப்பார்களாக இருந்தால், உரப்பாவனையினை குறைத்துக்கொள்ளமுடியும்
இன்று விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் வேலை, அவர்கள் விவசாயம் செய்யும் மண்ணைப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் மண் பரிசோதனை செய்து கொடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு இயற்கை உரத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நைதரசன் செறிவு காணப்படுவதால், அசோலா பாசியினை வயலுக்கு இடுவதன் ஊடாக களைகளை கட்டுப்படுத்த முடியும். மீண்டும் வயல் நிலங்களை பண்படுத்தும் போது, அது மண்ணுக்கு பசளையாகப் பயன்படும்.
கால்நடைகளுக்கு தீவனமாகவும் அசோலா பாசி பயன்படுத்தப்படுகின்றது. தற்போது கால்நடை தீவனத்துக்கான விலை அதிகமாக உள்ளதால், கால்நடை வளர்ப்போர், இதனை வீட்டில் செய்து பயன்பெற்றால், மாட்டில் இருந்து அதிகளவான பால் உற்பத்தியும், கோழியில் இருந்து நல்ல முட்டையும் கிடைக்கும்.
இவ்வாறு இயற்கையினை கொண்டு பல்வேறு விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தக் கூடியவாறான அசோல உற்பத்தி தொடர்பில் அறிந்து கொள்ளாத விவசாயிகள், அதனை அறிந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையை நாடுகள். நாட்டிற்குள்ளும் வீட்டுக்குள்ளும் இயற்கை வளத்தைச் சேருங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago