2025 ஒக்டோபர் 11, சனிக்கிழமை

அடைவுகள் பட்டியலில் அடங்காத தமிழர் பிரச்சினை

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையிலான ஏற்பாட்டை அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகி ஒரு வருட நிறைவடையும் வேளையில், அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. விரைவில் நீண்டகாலமாக நடத்தப்படாமலிருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியா தொடர்ந்தும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகத் தெரிகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் ஏற்படுத்தப்படவிருக்கின்ற தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.

இது முன்னைய அரசாங்கங்களிலிருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவித வித்தியாசமுமில்லாதது. புதிய அரசியலமைப்பைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் உருவாக்காது என்பதனையும் வெளிப்படுத்தியிருக்கும் ஒன்றாகும்.

நாட்டின் பொருளாதார மேம்பாடொன்றே எமது முதல் நோக்கம் என தற்போதுவரை கூறிக் கொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான 
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கருதத்தினை அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானது முதல் கூறிக்கொண்டு வருகிறது.

ஆனால், அதன் நோக்கம் இன நல்லிணக்கமா, மத நல்லிணக்கமா, தேசிய ஒருமைப்பாடா என்பது இன்னமும் தெரியவில்லை. 22ஆவது திருத்தம் வரை கண்ட இலங்கையின் குடியரசு அரசியலமைப்பானது பலமுறைகளில் 
ஆராய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

 அரசியலமைப்பு மாற்றத்தை நோக்கிய செயற்பாடுகள் பல தடவைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் புதிய அரசியலமைப்புக்கான வேலைப்பாடுகள் நடைபெற்றிருந்தன.

ஆனால், அது அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் குழப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் புதிய அரசாங்கம் அரசியலமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. 
ஆனால், போகிற போக்கில் அது இந்த அரசாங்கத்தின் காலத்தில் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை.

இந்தச் சந்தேகம் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியது முதலே அனைவருக்கும் இருக்கிறது. இருந்தாலும், நம்பிக்கை கொள்ளவேண்டியது கட்டாயமாகும் என்றவகையில் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது என்று தெரிகிறது. எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

1833இல் கோல்புறுக் - கமரன், 1929இல் மனிங், 1924இல் மனிங் - டெவன்சியர், 1931இல் டொனமுர், 1947இல் சோல்பரி என இலங்கையில் அரசியலமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

1948இல் பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னரும் டொமினியன் அந்தஸ்திலேயே இலங்கை இருந்துவந்தது. 1972இல் குடியரசாக மாறியது. 1978இல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இப்போது இருக்கின்ற அரசியலமைப்பு  22 திருத்தங்களைக் கண்டதாகும்.

அரசியலமைப்பு திருத்தங்களுக்கு உட்படாததாக இருக்கவேண்டும் என்றில்லை. ஆனால், இலங்கையின் அரசியலமைப்பானது மக்களது நலனைக் கருத்தில் கொண்ட மாற்றத்துக்குட்படுகிறது என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது.

அந்தவகையில்தான், இந்த அரசாங்கம் அறிவித்திருப்பது திருத்தமா புதிய அரசியலமைப்பா என்ற கேள்வியும் ஏற்பட்டிருக்கிறது.  இலங்கை சோசலிசக் குடியரசு அரசியல் யாப்பானது நாட்டில் ஆட்சி நடத்துபவர்களுக்கும் நாட்டு மக்களுக்குமான வழிகாட்டியாகும்.

ஆனால், அந்த வழிகாட்டியை தாங்கள் நினைத்த வேளைகளிலெல்லாம் ஆட்சியாளர்கள் தமக்கேற்றால் போன்று, தமது அரசியல்
தேவைகளுக்காக மாற்றியமைப்புது தான் இலங்கையில் நடைபெற்று வந்திருக்கிறது.

அதேநேரத்தில், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்று அரசியலமைப்புக்குள் இணைக்கப்படாதவைகளும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு நாட்டின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட முடியாததோ, திருத்தம் செய்யப்படக் கூடாத ஒன்றோ அல்ல. 

ஆனால், அத்திருத்தங்கள் நாட்டு நலனை, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டிருப்பதே சிறப்பானதாகும். ஆனால், இலங்கைக்கு பிரித்தானியரின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பு கிடைத்தது முதல் இருந்துவருகின்ற தமிழர்கள் சார் உரிமைப் பிரச்சினைக்கு இதுவரையில் இந்தத் திருத்தங்களால் எதுவும் நடைபெற்றுவிடவில்லை.

6ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகளை அடக்குவதற்காகவும், 13ஆவது திருத்தம் இந்தியாவின் அழுத்தத்துக்குள்ளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், 13ஆவது திருத்தத்தின் மூலமாக பிரயோசமானதை அடைந்து கொள்ள முடியாதபடி சிதைப்புகள் நடைபெற்றிருக்கின்றன என்பதே உண்மை.
அதற்கு மாகாண சபைத் தேர்தல்கள் இழுத்தடிக்கப்படுவதிலிருந்தே உதாரணங்கள் ஆரம்பமாகும்.

இவ்வாறான நிலையினால்தான் இலங்கையின் அரசியலமைப்புத் திருத்தங்கள் எதனைச் செய்து விட்டன என்ற விடயம் மேலெழுப்புகிறது எனலாம். பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கமையவே மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்களைக் கண்ட இலங்கை அரசியலமைப்பு மேலும் திருத்தங்களைக் காணும் போதும் இந்த நகர்வுகளுடனேயே இருக்குமா என்பது ஒருபக்கமிருக்க, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களுக்கான நோக்கங்கள் கவனிக்கப்படாமலேயே இருப்பது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் தொடங்கிய தமிழர்களின் உரிமை சார் பிரச்சினையானது 1978இல் ஆயுதப் போராட்டமாக மாறி 2009இல் முள்ளிவாய்காலில் மௌனிக்கச் செய்யப்பட்டது.

ஆனால், அதன் பின்னரும் தமிழர்களின் அடிப்படையான சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த இடத்தில்தான் இனப்பிரச்சினை குறித்தும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளடங்கலான அரசியல் தீர்வு தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி அக்கறை செலுத்துகிறதா என்ற கேள்வி தோன்றுகிறது.

தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்பின் உருவாக்கமே அதன் எதிர்பார்ப்பாகும்.யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் பல நடைபெற்றிருந்தாலும், 2009ஆம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்பட்டபின்னிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன.

பல சுற்றுக்களின் பின்னர், ஆளுந்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாத நிலையில், அது கைவிடப்பட்டது. அதே நேரத்தில், லங்கா சமசமாஜக் கட்சியின் திஸ்ஸவிதாரன தலைமையில் சர்வகட்சி குழு உருவாக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டது.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குமாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முயற்சிக்கப்பட்டது.

அவ்வேளையில், பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு பிரதமர் தலைமையில் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளையும் இணைத்ததாக வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. பல்வேறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டன. புத்திஜீவிகள் குழு,  மக்கள் கருத்தறியும் குழு என்பனவும் அமைக்கப்பட்டன.

புதிய அரசியலமைப்பு குறித்து. ஆராயப்பட்டன. ஆனால், 2019இன் இறுதிப்பகுதியில் உருவான சூழல் காரணமாக அது கைவிடப்பட்டது. அது துரதிர்ஷ்ட நிகழ்வே. பின்னர் உருவான சிறிலங்கா பொதுஜன பெரமுன ட்சி அதனைப்பற்றிக் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு, கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் உருவாக்கப்பட்டு, கைவிடப்பட்டு இருக்கின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் இவற்றினைக் கருத்திலெடுக்குமா என்பது இந்த இடத்திலுள்ள முக்கிய விடயமாகும். 

அதே நேரத்தில், தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி  தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஒரு தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் அது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லையானால் அது மீண்டும் பிரச்சினையான ஒன்றாக மாறுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாகும்.முன்னாள் ஜனாதிபதிகளின் வசதிகளைப் பறிப்பதும், நிதி மோசடிகளைக் கண்டுபிடிப்பதும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை இல்லாமல் செய்வதும் என நகரும் அரசாங்கம் தனிக்காட்டு ராஜாவாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போன்று அரசியலமைப்பு மாற்றமானது மேற்கொள்ளக்கூடியதல்ல.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையானது வெறுமனே காலங்கடத்தல்களிலும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் நிறைவேறிவிடப் போவதில்லை.

பதவிக்கு வந்து முதன் முதலில் மேற்கொண்ட இந்திய விஜயத்தில் தமிழர் விவகாரம் கவனிக்கப்படாமலேயே விடப்பட்டிருந்தது. அது தமிழர்கள் குறித்த அனுரகுமாரவின் மனோநிலையை வெளிப்படுத்தியிருந்தது.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற வேளைகளில் அவர் இந்த விடயத்தினைப் பற்றி மூச்சுவிடுவதையே காணவில்லை. இவ்வாறான நிலையில், அனுரவால் கணக்கிலெடுக்கப்படாமலே இருக்கும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்பிரச்சினை ஒருவருட பூர்த்தியின் பின்னராவது கவனத்திற்கு வரும் 
என்று எதிர்பார்ப்போம்.

இணக்கப்பாட்டுடன் கூடிய தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குரிய 
தீர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்புக்காக காத்திருப்போம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X