Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2020 நவம்பர் 10 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் பாதுஷா
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றது என, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில், நான்காவது கட்டத்தை அடையமாட்டாது என்று உறுதிபடச் சொல்ல முடியாதுள்ளது. ஆனால், இன்னுமோர் அலையை நாடு தாங்காது என்பதையும் அதே சுகாதார அமைச்சே கூறியுள்ளது.
இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை, இந்தளவுக்குப் பரவியதற்கு, மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என்ற தொனியிலான குற்றச்சாட்டுகள், அரசாங்க அதிகாரிகள் தொடக்கம் ஆட்சியாளர்கள் வரை பலராலும், கடந்த சில நாள்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, அரசாங்கம், தனது பொறுப்பிலிருந்தும் பொறுப்புக்கூறலில் இருந்தும், வெளியேறுவதற்கான கதவுகளைத் தேடுகின்றதா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியாதுள்ளது.
இலங்கையில், கடந்த ஒரு மாதத்துக்குள் மாத்திரம், 10 ஆயிரம் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். மரணங்கள் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றன. சுகாதார நிலைமைகள், கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், நிஜத்தில் அவ்வாறான ஓர் ஆறுதலான சூழல் கிடையாது. எந்த நேரமும், நிலைமை கைமீறிப் போகக் கூடும் என்ற உள்ளச்சம், சுகாதார அதிகாரிகளிடையே ஏற்பட்டிருக்கின்றது.
மதம், ஆன்மீக நம்பிக்கைகளை, நாம் கேலி செய்ய முடியாது. அவை, சம்பந்தப்பட்ட மக்களை ஆசுவாசப்படுத்துகின்றன. மருந்துகளை விட, அதிகமான மனக் காயங்களை ஆன்மீகம் ஆற்றுகின்றது என்றும் சொல்லலாம். எனவே, சுகாதார அமைச்சர் முதல், பிரதமர் வரை ஆன்மீக ரீதியான பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றமை ஆச்சரியமானதல்ல.
ஆனால், விஞ்ஞான ரீதியாக எல்லாம் கட்டுக்குள் இருக்கின்றது என்றால், ஆன்மீகத்தை இந்தளவுக்கு நாடமாட்டார்கள் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் நோக்கும் போது, கொரோனா வைரஸின் தொற்றின் வேகம், எவ்வேளையிலும் தலைக்கு மேலால் போகலாம் என்ற நிலையிருப்பதாகவே ஊகிக்க முடிகின்றது.
இவ்வாறான ஒரு பின்புலத்தில், இத்தனை பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டனர்; இத்தனை பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறினர்; இத்தனை மரணங்கள் இன்று சம்பவித்திருக்கின்றன என்று ‘கொரோனா புள்ளிவிவரங்களை’க் காட்டுவதை விட, கொரோனா வைரஸ் பரவலின் நான்காம் கட்டத்துக்குச் செல்லாமலோ, மூன்றாவது அலை ஏற்படாமலோ தடுப்பதற்கு, காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், அது முறையாகத் திருத்தப்படுவதுடன், தரகுக் கூலிகளுக்காக அன்றி, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான மருத்துவ சாதனங்கள் தருவிக்கப்பட வேண்டும். ஐ.சி.யு கட்டில்கள் அதிகரிக்கப்படுவது நல்லது. பி.சி.ஆர் முடிவுகளோ எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ‘அன்டிஜன்’ பரிசோதனை முடிவுகளோ, பிழையின்றி அமைதல் வேண்டும். ஆகவே, நன்றாகப் பயிற்றப்பட்ட ஆய்வுகூடப் பணியாளர்கள் இதற்காக உள்வாங்கப்பட வேண்டியுள்ளது.
வைத்தியர்களும் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், மார்ச் மாதத்தில் இருந்து அயராது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். எல்லா மருத்துவ சேவைகளின் வெற்றியும், மருத்துவ பணியாளர்களின் செயற்றிறனிலேயே தங்கியுள்ளன என்ற அடிப்படையில், அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவது அவசியமாகின்றது. அவர்கள் சிறப்பாகச் சேவையாற்ற, இது உந்துதலாக அமையும்.
இருப்பினும், இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் அலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் செயற்பட்ட விதமும், இப்போது இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகளிலும் வித்தியாசங்கள் இருப்பதை பொதுமக்களே பேசிக் கொள்கின்றனர். இதற்கு, யதார்த்தபூர்வமானதும் நியாயபூர்வமானதுமான காரணங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அரசாங்கம் இந்தப் பொறுப்பிலிருந்து விலக முடியாது.
ஓர் ஆட்புல எல்லைக்குள், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது என்பது ஆட்சியாளரால், அதிகாரியால், தனிமனிதனால் சாத்தியப்படுகின்ற விடயமல்ல. இதுவொரு கூட்டுப் பொறுப்பாகும். இதற்கு, எல்லோருடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமாகின்றது. இதில், எவர் பொடுபோக்குத்தனமாகச் செயற்பட்டாலும், வைரஸைக் கட்டுப்படுத்தும் இலக்கை, கற்பனையில் கூட அடைய முடியாது.
இதுதான் இலங்கையில் நடந்தது. கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட பராமுகம் இன்று, இன்னுமோர் அலையை உண்டுபண்ணி இருக்கின்றது. இதற்கு, பொது மக்களும் முக்கிய காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், பொதுமக்கள் மட்டுமே காரணம் என்பதைச் சொல்லிவிட்டு, அரசாங்கமும் அதிகாரிகளும் நழுவிவிட முடியாது.
இலங்கைக்கு வந்திருந்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதற்கும், முதலாவதாக இலங்கையர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இருப்பினும், தேர்தலை ஓகஸ்ட் வரை ஒத்திவைத்த அரசாங்கம், இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்தது. சில நாடுகளுக்கான விமான சேவைகள், காலம் பிந்தியே இடைநிறுத்தப்பட்டதைத் தவிர, அரசாங்கம் எடுத்த ஏனைய அனைத்து நடவடிக்கைகளும், முதலாவது அலையைச் சமாளிக்கக் காரணமாக அமைந்தன.
இந்தக் கட்டத்தில், தேர்தலை நடத்தும் எதிர்பார்ப்பு, நாட்டைத் தொடர்ச்சியாக முடக்கி வைத்திருக்க முடியாது என்ற யதார்த்த நிலை என்பவற்றின் அடிப்படையில், ‘இயல்பு நிலைக்குத் திரும்புதல்’ என்ற தோரணையில், பொலிஸ் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இது, மீளவும் பரவலான மக்கள் நடமாட்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால், இன்னும் சில நாள்களுக்குக் கட்டுப்பாடுகளைத் தொடர்ச்சியாக அமுல்படுத்துமாறு அவதானிகளும் செயற்பாட்டாளர்களும் அப்போது கோரிக்கை விடுத்தனர். ஆனால், தனது தீர்மானத்தில் அரசாங்கம் சரிகண்டது. நாட்டை வழமைக்கு திருப்பி, தேர்தலையும் நடாத்தியது.
கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையை, வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியமையானது, ஆளும் பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்தது. ஆனால், தேர்தல் கூட்டங்களிலோ அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுகளிலோ சமூக இடைவெளியைப் பேணுதல், முகக் கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
‘இலங்கையில் கொரோனா வைரஸ் இல்லை’ என்று, சுகாதார அமைச்சு வழங்கிய சான்றுறுதியின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணைக்குழு, வாக்கெடுப்பை நடத்தியது. எனவே, கொரோனா வைரஸ் நாட்டுக்குள் இல்லை என்பது போலவே, எல்லோரது செயற்பாடுகளும் அமைந்திருந்தன.
‘இலங்கைக்குள் வைரஸ் இல்லை’ என வழங்கப்பட்ட அறிக்கை, ஆதாரபூர்வமானது என்றால், நாட்டுக்குள் மீண்டும் கொரோனா வைரஸ் நுழைவதற்கான கதவுகளில் காவல் நிற்க வேண்டியதும், பரவாமல் தடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால், என்ன நடந்தது?
இலங்கைக்குள் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரவிய பிறகு, ஒரு பிரபல ஆடைத்தொழிற்சாலையில் இருந்து, இரண்டாவது அலையின் முதலாவது தொற்றாளர் என, ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதிலிருந்து பல நாள்களின் பின்னர், இவ்வைரஸ் உக்ரேன் நாட்டில் இருந்து, காவி வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
உக்ரேன் விமானப் பணியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகத்தின் அசமந்தப் போக்கே, இரண்டாவது அலை ஏற்பட அடிப்படைக் காரணம் என்பது உண்மையாயின், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேற்படி ஆடைத் தொழிற்சாலை விமர்சிக்கப்பட்ட அளவுக்கு, அந்த ஹோட்டலின் பெயர் கூட வெளியிடப்படவில்லை. சட்ட நடவடிக்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதும் தெரியாது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் ஆறுதல் கொள்ளுமளவுக்கு இருக்கின்றது. மக்களின் மீது அரசாங்கம் குற்றம் சொல்வது போல, அரசாங்கத்தின் மீது மக்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இரண்டாவது அலைக்கு, கட்டுப்பாடுகள் விதிக்க சற்றுத் தாமதமானமை, கொழும்பில் இருந்து வெளியேற காலஅவகாசம் கொடுக்கப்பட்டது போல, ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டமை, அங்குமிங்குமாகப் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட போதும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தைத் தடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் என, பல நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
அதேபோன்று, மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய போதிலும், நிலைமைகள் இதைவிட மோசமடைந்தால், எதிர்கொள்வதற்கு மருத்துவ சாதனங்கள், இடவசதி போதாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே, கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் பொறுப்புக்கூறல்களும் இன்மையே, மோசமான விளைவுகளை ஏற்படுத்தின என்பதை அரசாங்கம் உணர்ந்து பொறுப்புடன் செயற்படுவதுடன், மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
4 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
50 minute ago
59 minute ago