Janu / 2026 மார்ச் 18 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் தொழில்நுட்பத்திலும் சுதந்திரத்திலும் உச்சத்தை தொட்டுள்ள இந்த யுகத்தில், இன்னும் ஒரேயொரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டு, வெளி உலகத்திலிருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடு தான் வட கொரியா.
பெயரில் 'ஜனநாயகம்' என்று இருந்தாலும், அந்நாட்டு மக்கள் கிம் ஜொன் உன்-னின் கடுமையான ஆட்சியின் கீழ் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கைதிகளை போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
1. தெய்வமாக வணங்கப்படும் "கிம்" குடும்பம்
வட கொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும், பாடசாலையிலும், அலுவலகத்திலும் முன்னாள் தலைவர்களான கிம் இல் சுங் மற்றும் கிம் ஜொன் இல் ஆகியோரின் புகைப்படங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தப் படங்களின் தூசியை துடைப்பதற்கு கூட ஒரு விசேட துணி இருக்க வேண்டும். ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அந்தப் புகைப்படங்களே முதலில் காப்பாற்றப்பட வேண்டும்.
தற்போதைய தலைவர் கிம் ஜொன் உன் "உன்னதத் தலைவர்" என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் கூட, அது மரண தண்டனை அல்லது மூன்று தலைமுறைகள் சிறையிலிருக்க வேண்டிய பாரதூரமான குற்றமாக கருதப்படுகிறது.
2. சொங்புன் முறை: பிறப்பிலேயே தீர்மானிக்கப்படும் விதி
வட கொரியாவில் ஒரு நபரின் மதிப்பு அவரது திறமையால் அல்ல, மாறாக அவரது குடும்பம் அரசாங்கத்திற்கு காட்டும் விசுவாசத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதுவே 'சொங்புன்' முறை என அழைக்கப்படுகிறது.
3. தொழில்நுட்பம் மற்றும் தகவல் தடை
நமக்கு இணையம் (Internet) இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஆனால், ஒரு சாதாரண வட கொரிய குடிமகனுக்கு இணையம் என்றால் என்னவென்றே தெரியாது. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் "க்வான்ம்யோங்" (Kwangmyong) என்ற உள்நாட்டு வலையமைப்பு மட்டுமே அங்கு உண்டு. அதில் அரசாங்கத்தின் பிரச்சார செய்திகள் மட்டுமே இருக்கும்.
அவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அவற்றின் மூலம் வெளிநாடுகளுக்கு அழைக்க முடியாது. அனைத்து செய்திகளும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும்.
தென்கொரிய நாடகங்களையோ அல்லது ஹொலிவுட் திரைப்படங்களையோ பார்ப்பது ஒரு "புரட்சிக்கு எதிரான" குற்றமாகும். இதற்காக பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
4. குவான்லிசோ (Kwanliso): பூமியிலுள்ள நரகம்
வட கொரியாவில் உள்ள அரசியல் சிறை முகாம்கள் உலகின் மிக கொடிய இடங்களாக கருதப்படுகின்றன. ஒருவர் தவறு செய்தால், அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட சிறையிலேயே பிறந்து சிறையிலேயே இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்களுக்கும் மேலான கடின உழைப்பு, பட்டினி மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் அங்கு சாதாரணமானவை. பெரும்பாலான கைதிகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலேயே உயிரிழக்கின்றனர்.
5. இருளில் மூழ்கிய தேசமும் பஞ்சமும்
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, சீனாவும் தென்கொரியாவும் ஒளியால் பிரகாசிக்கின்றன, ஆனால் வட கொரியா ஒரு கருந்துளை (Black hole) போலத் தெரியும். தலைநகருக்கு வெளியே உள்ள பல பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். மேலும், 1990களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இன்றும் அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் முறையான ஊட்டச்சத்து இன்றி வாழ்கின்றனர். இருப்பினும், அரசாங்கம் தனது நிதியை அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்கவே செலவிடுகிறது .
6. தப்பிச் செல்வதில் உள்ள ஆபத்து
இந்தச் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வது என்பது மரணத்தை வரவேற்பதற்கு சமம். பலர் சீன எல்லை வழியாக தப்ப முயல்கின்றனர். ஆனால் சீனாவில் பிடிபட்டால், அவர்கள் மீண்டும் வட கொரியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மரண தண்டனை காத்திருக்கும். தென்கொரியாவை அடைய முடிந்த ஒரு சிலரே தாங்கள் அனுபவித்த அந்த துயர கதைகளை கூறுகின்றனர். சுதந்திரமாக சுவாசிப்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை அவர்கள் உலகிற்கு உணர்த்துகின்றனர்.
வட கொரியாவை பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் உரிமை, தகவல்களை அறியும் உரிமை மற்றும் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை ஆகியவை எவ்வளவு பெறுமதியானவை என்பது புரிகிறது. அரசியல் நிலைத்தன்மை என்ற பெயரில் மனித உரிமைகள் நசுக்கப்படும்போது, ஒரு நாடு எவ்வளவு பெரிய அதலபாதாளத்தில் விழும் என்பதற்கு வட கொரியாவே சிறந்த உதாரணம்.

4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago