2024 மே 21, செவ்வாய்க்கிழமை

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் வலியுறுத்திய சமஷ்டி

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜனவரி 22 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 128) 

தனித்த தேசமும் பிரிவினையும்  

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறும்போதே, தமிழ்த் தலைமைகள் தமிழருக்கென தனியானதொரு நாட்டை, இலங்கையில் பெற்றிருக்க வேண்டும் என்று சிலர் அவ்வப்போது அங்கலாய்ப்பதுண்டு.   

கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் போது, முஹம்மட் அலி ஜின்னாஹ், முஹம்மதியர்களுக்கென தனியானதொரு நாட்டைக் கோரியது போன்று, தமிழ்த் தலைமைகள் இலங்கையில் கோரியிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அங்கலாய்ப்பின் அடித்தளம்.   

இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது தொடர்பில், டெல்லி வந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்றின் இரு அவைகளையும் சேர்ந்தவர்களின் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலின் போது, தமது லாஹூர் பிரகடனத்தின்படி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள், தனித்த இறைமையுள்ள அரசாக வேண்டும் என்ற கோரிக்கையில், முஹம்மட் அலி ஜின்னாஹ் விடாப்பிடியாக இருந்தார்.   

தூதுக்குழு, “நீங்கள் முன்வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கையானது, பெருமளவிலான இந்துக்களை, முஸ்லிம்களின் மேலாதிக்கத்துக்குள் ஆழ்த்தும் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா” (அதாவது பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் மாகாணங்களிலுள்ள இந்துக்கள்) என்று கேட்டது.   

அப்பொழுது, “ஆம்! அது உண்மைதான். ஆனால், அதைவிட அதிகளவிலான முஸ்லிம்கள், இந்துக்களின் மேலாதிக்கத்தில் இந்துஸ்தானில் விட்டுத்தான் செல்கின்றேன்” என்று ஜின்னாஹ் பதிலளித்தார்.   

இந்தப் பதிலினால் ஆச்சரியமடைந்த தூதுக்குழு, “அப்படியானால், இது எவ்வாறு இந்து-முஸ்லிம் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறது; மாறாக, இது இந்து-முஸ்லிம் விரோதப் போக்கை அதிகரிக்காதா” என்று கேட்டது. 

அதன்போது, “நான் குறைந்தபட்சம் மூன்றிலிரண்டு பங்கு முஸ்லிம்களையாவது இந்து மேலாதிக்கத்திலிருந்து விடுவிக்கிறேன்” என்று ஜின்னாஹ் பதிலளித்தார்.   

“இது தீர்வல்லவே” என்று தூதுக்குழு கூறியபோது, “சிவில் யுத்தமொன்றைத் தவிர்க்க விரும்பினால், இதுவே ஒரே வழி” என்று ஜின்னாஹ் கூறினார்.   

“ஆனால், இது இரண்டு நாடுகளிலும் வாழ்கின்ற சிறுபான்மையினருக்குத் தீங்காக அமையாதா” (அதாவது பாகிஸ்தானில் வாழ்கிற இந்துக்கள், இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்கள்) என்று தூதுக்குழு வினவியது.   

அதற்குப் பதிலளித்த ஜின்னாஹ், “இரண்டு பலமான அரசாங்கங்கள் அமைவதுதான் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஏனெனில், அப்போதுதான் இரண்டில் எந்தவோர் அரசாங்கமும் அதன் சிறுபான்மையைச் சீண்டிப் பார்க்க முனையாது” என்றார்.   

“ஆக, நீங்கள் இரு நாட்டினதும் சிறுபான்மையினர் பணயக்கைதிகளாக இருப்பார்கள் என்கிறீர்களா” என்று தூதுக்குழு வினவியது.   

அதற்கு, “ஆம்! ஓர் அரசாங்கம், தனது சிறுபான்மையினரை முறைகேடாக நடத்தினால், மற்றைய அரசாங்கம் அதற்கெதிராகத் தன்னுடைய அரசாங்கத்துக்குள் நடவடிக்கையெடுக்கும். இது அடிக்கு அடியாக இருக்கும்” என்று ஜின்னாஹ், தயங்காது பதிலளித்தார்.   

“இது மிகக் கொடூரமான முறை” என்று தூதுக்குழு விமர்சித்தபோது கூட, ஜின்னாஹ் தன்னிலையிலிருந்து விலகவில்லை.   

பாகிஸ்தான் பிரிந்ததைப் பற்றிய இந்தக் குறிப்பை மேற்கோள் காட்டும், சிலரின் அங்கலாய்ப்புக்கு, ஒரு குறிப்பிடத்தக்க காரணமுண்டு. அது பிராந்திய பெரும்பான்மை.   

பாகிஸ்தான் என்ற தனிநாட்டுப் பிரிவினையை, ஜின்னாஹ் பெருமளவுக்கு மாகாண ரீதியிலான பெரும்பான்மையை மையமாகக் கொண்டே கோரியிருந்தார்.   

பிரிவினைக்கு முந்திய இந்தியாவில், இந்துக்கள், பாரதம் தழுவிய ரீதியில் பெரும்பான்மையாக இருந்தாலும், ஜின்னாஹ் கோரிய மேற்கு-பஞ்சாப், வடமேற்கு உள்ளிட்ட மேற்குப் பிராந்தியங்களிலும் கிழங்கு வங்காளத்திலும் பிராந்திய ரீதியில் முஸ்லிம் பெரும்பான்மை பெருமளவுக்கு இருந்தது.   

அத்தோடு முஹம்மதியர்கள் ஒரு தனித்த தேசம்; அந்தத் தேசத்துடைய ஏக குரல் தன்னுடைய முஸ்லிம் லீக் என்பதுவும் ஜின்னாஹ்வினுடைய முழக்கமாக இருந்தது.   

இலங்கை சுதந்திரத்தின் போதான இலங்கைத் தமிழ்த் தலைமைகளின் நடவடிக்கைகளும், ஜின்னாஹ் தலைமையிலான இந்திய முஹம்மதியர்களின் பாகிஸ்தான் பிரிவினையும் அவற்றிடையே ஒப்பிட்டும், தனித்தும் ஆராயப்பட வேண்டியது.   

அது, இங்கு அவசியமல்ல. ஆனால், தமிழ் மக்கள் கோரிய பிராந்தியப் பெரும்பான்மை, தமிழ்த் தேசம், பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வு என்பவை வரலாற்றில் எங்கும் நடைபெறாத விடயங்கள் அல்ல; புதுமையான விடயங்கள் அல்ல; பேசத்தகாத விடயங்கள் அல்ல.  

‘ஒழுங்கமைக்கப்பட்ட, ஒரு குறித்த நிலப்பரப்பைக் குடிமையாகக்கொண்ட, ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே மாதிரியான மரபுகளையுடைய, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட, ஏனைய, இதுபோன்ற மக்கள் கூட்டங்களிலிருந்து அவர்தம் இன அடையாளம், தன்மை என்பவற்றின் அடிப்படையில் பிரித்தறியத்தக்க மக்கள் கூட்டம் என்பது ஒரு தேசமாகும்’ என்பது தேசம் என்பதற்கு சர்வதேச சட்டங்களின்படியான வரவிலக்கணமாகும்.   

இதனடிப்படையில் இலங்கை வாழ் தமிழ் மக்கள், தம்மை தனித்தேசமாக அடையாளப்படுத்தும் உரித்துடையவர்களாகிறார்கள். அத்தகைய தனித்த மக்கள் தேசமானது, தமக்கான சுயநிர்ணய உரிமையைக் கோருவதோ, தாம் வன்முறை எனும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியொடுக்கப்படும் போது, அத்தகைய அடக்குமுறையைப் பிரயோகிக்கும் அரசாங்கத்திடமிருந்து பிரிவினையைக் கோருவதோ சர்வதேச சட்டங்களின் கீழ் முரணானதொரு விடயமல்ல.  

 ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தாலும், பிராந்திய ரீதியிலான குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்குத் தயாராகவே இருந்தனர்.   

அனெக்ஷர் ‘ஸீ’ குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் தயாராகவே இருந்தார். அதற்காகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன் முரண்பட வேண்டிய சூழல் இருந்த போதும், அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தார்.  

 ‘பிரிவினை’ என்பது ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரையில், அன்று ஓர் ‘உயர்ந்த கருத்தியலாக’ இருந்ததேயன்றி, அதை முன்னெடுக்க அவர்கள் தலைப்படவில்லை.   

ஆகவே, இந்தப் பொழுதிலே, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைக்கு இணங்கி, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணும் அரிய வாய்ப்பு, ஜே.ஆரின் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது.   

ஆனால், ஜே.ஆரின் மனத்திட்டம், தமிழ் ஜனநாயகத் தலைமைகளை ஓரங்கட்டுவதில் இருந்தது எனலாம்.   
தமிழர்களின் தனித்தேசக் கோரிக்கையையோ, 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் பின்னரான ‘பிரிவினைக்’ கோரிக்கையையோ, சர்வதேச ரீதியில் எதிர்ப்பதற்கு ஜே.ஆரிடம் பலமான காரணங்கள் இல்லை; மாறாக, அந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் காரணங்கள், தமிழ்த் தலைமைகளிடம் நிறையவே இருந்தன.   

அதை எதிர்கொள்ள, ஜே.ஆர் கையாண்ட முதல் வழி அரசமைப்புக்கு ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம், மக்கள் பிரதிநிதிகளோ, அரச பதவி வகிப்பவர்களோ பிரிவினைக் கோரிக்கையை முன்னெடுக்க முடியாத சூழலை ஸ்தாபித்தார்.   

ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள், சர்வதேச ரீதியில் பிரிவினையை அதற்குரிய நியாயங்களுடன் கோரினால், அதனை எதிர்ப்பது கடினமானது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் பலமிழந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் வன்முறை வழியில், இதே கோரிக்கையை முன்னெடுக்கும் போது, அவற்றைப் ‘பயங்கரவாதிகள்’ என்று முன்னிறுத்தி, ஆயுத வழியில், அழிக்க முடியும். ஜே.ஆரின் நடவடிக்கைகள் இதையே கோடிட்டுக்காட்டி நின்றன.   

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கத்தின் உரை  

அனெக்ஷர் ‘ஸீ’ முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சர்வகட்சி மாநாட்டில், ஒருமித்து அழுத்தம் கொடுப்பது என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் முடிவெடுத்திருந்தனர்.   

1984 ஜனவரி 19ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு கூடியபோது, அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உரையாற்றினார். “எனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த இப்பொழுது ஆதி வரலாற்றுக்கு நான் செல்ல விரும்பவில்லை. வரலாற்றின் தொடக்கம் முதல் சிங்களவர்களும் தமிழர்களும் இந்தநாட்டில் வாழ்ந்தும் அதிகாரத்தைப் பகிர்ந்தும் ஒருவரையொருவர் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப் போரில் ஈடுபட்டும், இந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைப் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தனித்து ஆண்டும் வந்திருக்கிறார்கள் என்று கூறுவது இங்கு போதுமானது. ஒரு சகாப்தமளவுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட விடயமிவை. இதை யாரும் முரண்பாட்டுக்கு உட்படுத்த முடியாது. நாம் அனைவரும் இங்கு அந்நிய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவே கூடியிருக்கிறோம்” என்று கூறினார்.   

தொடர்ந்து அவர், காலவோட்டத்தில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து, சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, தொடர்ந்து சிறுபான்மையினர் முன்வைத்த கோரிக்கைகள், 1936இல் தனித்த சிங்கள மந்திரிசபை அமைந்ததைத் தொடர்ந்து, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘சமமான பிரதிநிதித்துவம்’ (50:50), பிரஜாவுரிமைப் பறிப்பு, அதனால் ஏற்பட்ட இனவிகிதாசார மாறுபாடுகள், தனிச்சிங்களச் சட்டம், அதைத் தொடர்ந்த இன ரீதியிலான வன்முறைகள், அஹிம்சை வழிப்போராட்டங்கள், வன்முறை வெறிகொண்டு தாக்கப்பட்டமை, அப்பொழுதே சீ.சுந்தரலிங்கம் போன்ற தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த போதும், தமிழரசுக் கட்சியும் சரி, தமிழ்க் காங்கிரஸும் சரி அதை ஏற்றுக்கொள்ளாமை என்ற வரலாற்றை அமிர்தலிங்கம் எடுத்துரைத்தார்.   

அதன்பின், சா.ஜே.வே. செல்வநாயகத்தின், சமஷ்டிக் கொள்கையானது பிரிவினைக்குப் பதில், இனப்பிரச்சினைக்குப் பொருத்தமானதொரு மாற்றுத் தீர்வு என்பதை விளக்கினார். “சமஷ்டி முறையை அரசாங்கத்தைப் புரிந்துகொண்ட எவரும், சமஷ்டி என்பது பிரிவினை என்று சொல்ல மாட்டார்கள். உலகின் மிகப் பலமான இரண்டு தேசங்களான ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகியன சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் ஒற்றுமையோ, பலமோ அவற்றின் அரசியல் கட்டமைப்பினால் பாதிக்கப்படவில்லை. இலங்கையின் அளவில் 3/5 அளவுடைய சிறிய நாடான சுவிட்ஸலாந்து, சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வளவும் ஏன், 1926இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவே இலங்கைக்கு ஏற்ற அரசாங்க முறைமை சமஷ்டிதான் என்று வாதிட்டார். டொனமூர் ஆணைக்குழு முன்பாக, கண்டி இளைஞர் லீக் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருந்தது” என்று சமஷ்டி பற்றியும், இலங்கையில் சிங்களத் தலைமைகளே சமஷ்டி கோரிய வரலாற்றை அமிர்தலிங்கம் சுட்டிக் காட்டியிருந்தார்.   

தொடர்ந்து அவர், “ஆனால், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணயத்துக்கான அங்கிகாரத்தையும், சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசாங்கத்தையும் கோரும் போது மட்டும், அது சிங்கள மக்களிடையே இந்த உண்மைகள் தெரிந்திருக்க வேண்டிய அரசியல்வாதிகளாலேயே பிரிவினைக்கான முன்னெடுப்பாகத் தவறாக உருவகப்படுத்தப்படுகிறது” என்று நியாயமான ஆதங்கத்தை முன்வைத்திருந்தார்.  

1984இல் சமஷ்டி தொடர்பில் அமிர்தலிங்கம் பேசிய இதே விடயங்களைச் சுட்டிக்காட்டி, 2017இல் நாடாளுமன்றத்தில் மதியாபரணன் ஆப்ரஹாம் சுமந்திரன் பேசியமையானது, 33 வருடங்கள் கழித்தும் இந்த நிலை மாறவில்லை என்பதையே எமக்கு உணர்த்துவதாக உள்ளது.   

அனெக்ஷர் ‘ஸீ’யையும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலான அதிகாரப் பகிர்வையும் கடுமையாக எதிர்த்த மகாசங்கத்தை சுட்டிப் பேசிய அமிர்தலிங்கம், “இரண்டு நாட்களுக்கு முன்னர், வணக்கத்துக்குரிய பௌத்த மதத் தலைவர்கள், மக்களின் நடமாடும் சுதந்திரம் பற்றிப் பேசக் கேட்டோம். வணக்கத்துக்குரிய மதப்போதகர்களிடம் நான் கேட்க விரும்புவது, தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் என்ன நடமாடும் சுதந்திரம் இருக்கிறது? இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே சுதந்திரம் தெற்கில் அமைந்துள்ள அகதி முகாம்களில் இருந்து கப்பல் மூலம் வடக்கு-கிழக்குக்கு அனுப்பப்படும் சுதந்திரம் மட்டும்தான்” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.   

இதைத் தொடர்ந்து, வடக்கு-கிழக்கிலுள்ள பௌத்த ஸ்தலங்கள் தொடர்பிலும், அவை மீட்கப்பட்டு அங்கு சிங்கள-பௌத்த மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் பௌத்த மகாசங்கத்தினர் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலுரைத்துப் பேசிய அமிர்தலிங்கம், சில மிக முக்கியமான கருத்துகளையும் விடயங்களையும் தனது பேச்சில் கோடிட்டுக் காட்டியிருந்தார்.   

(அடுத்த திங்கட்கி​ழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .