2024 மே 21, செவ்வாய்க்கிழமை

ஜே.ஆர் எனும் நவீன துட்டகைமுனு

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜூன் 11 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 147)

வரலாற்றுத் திருமறையும் மனிதக் கடவுள்களும் 

அமெரிக்காவில் அடிக்கடி இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பற்றிய செய்திகள், பெரும் பரபரப்பை உலகமெங்கும் ஏற்படுத்துகின்றன.  

 குறிப்பாக, அமெரிக்கப் பாடசாலைகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், பல அப்பாவி உயிர்கள் பலியாகின, பலியாகிக் கொண்டிருக்கின்றன. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டும், எட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், அமெரிக்கப் பாடசாலைகளில் இடம்பெற்றிருப்பதாக ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  

 இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் வேர், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் அரசமைப்புக்கான இரண்டாவது திருத்தமானது, பொதுமக்களது ஆயுதம் வைத்திருக்கும் உரிமை, மீறப்படக்கூடாது என்று குறிப்பிடுகிறது.  

அதாவது, அமெரிக்க அரசமைப்பின்படி ஆயுதம் வைத்திருத்தல் என்பது, அமெரிக்கக் குடிமகனின் உரிமையாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அரசமைப்பு உரிமையால், பல்லாயிரம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் போது, காலம் மற்றும் சூழல் மாற்றத்துக்கேற்ப, அதை மாற்றியமைப்பதுதான் பொருத்தமானது என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.  

 அமெரிக்க அரசமைப்பின் இரண்டாவது திருத்தம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள், முடிவில்லாத கதையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு நாம் குறிப்பிட்டு அவதானிக்கக் கூடிய ஒரு விடயம் இருக்கிறது.   

அதுதான், அமெரிக்கர்களிடையே பரவலாகக் காணப்படும் ‘அரசமைப்பு வழிபாடு’. அமெரிக்காவைப் பொறுத்தவரை அரசமைப்பு என்பது, வெறும் அடிப்படைச் சட்டம் மட்டுமல்ல,   அது அமெரிக்க வரலாற்றின் தோற்றுவாய்; ஒரு வல்லரசின் வரலாற்று மூலம். 

அமெரிக்கா என்பது, ஒப்பீட்டளவில் மிக அண்மையில் உருவாக்கப்பட்ட ஓர் அரசு. அமெரிக்க தேச அடையாளம் என்பது, பிரித்தானிய சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்து, 13 பிராந்தியங்கள் ஒன்றிணைந்து, ஐக்கிய அமெரிக்க அரசை ஸ்தாபிப்பதுடன் ஆரம்பிக்கிறது. 

அந்தத் தேச அடையாளத்தின் மூல ஆவணங்களாக, அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் மற்றும் அமெரிக்க அரசமைப்புச் சட்டம் என்பன கருதப்படுகின்றன.  

 அமெரிக்கர்களின் தோற்றம், வரலாறு, இலட்சியப் புனைவு எல்லாவற்றின் ஊற்றும், அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும் அமெரிக்க அரசமைப்புச் சட்டமுமாகும். ஆகவேதான், அவற்றின் மீதான அதீத மோக ஆர்வம், அமெரிக்கர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது.   

இது ஆரோக்கியமானது இல்லை என்று, பலரும் விமர்சித்தாலும், அமெரிக்க அரசியல் யதார்த்தத்தில், இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. 

“அமெரிக்காவை மீண்டும் உன்னதம் ஆக்குவோம்” என்ற டொனல்ட் ட்ரம்பின் அறைகூவலுக்குப் பின்னாலிருக்கும் ‘உன்னதம்’ என்பதில், அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனமும் அமெரிக்க அரசமைப்பும், அதுகூறும் வரலாற்றுப் புனைவின் வழியான கற்பனையும்தான் இருக்கிறது.   

அந்த வரலாற்றுக்கு ‘புனித’த் தன்மை வழங்கப்படுகிறது. இது காலத்தின் தேவைக்கும், அவசியத்துக்கும்  ஏற்ற மாற்றங்களை நிராகரிக்கச் செய்கிறது. மாற்றங்கள், புனிதத்தைக் கெடுப்பதாக, தாம் நம்பிக்கை கொண்ட பழைமையின் உன்னதத்தைச் சிதைப்பதாக சித்திரிக்கப்படுகிறது.   

இதைப் பற்றிக் கவலையுடன் கருத்துரைக்கும் லெக்ஸிங்டன், “வரலாறு திருமறையாகவும் மனிதர்கள் கடவுளாகவும் ஆக்கப்படும்போது, உண்மை பலிக்கடா ஆக்கப்படுகிறது” என்கிறார்.   

மஹாவம்சமும் ஜே.ஆரும்  

அமெரிக்காவுக்குச் சுதந்திரப் பிரகடனமும் அரசமைப்பும் அவர்களது தேச அடையாளத்தின் தோற்றுவாயாகவும் அடிப்படையாகவும் அமைக்கப்பட்டதைப் போல, இலங்கைக்குக் குறிப்பாக, 19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால உள்ளிட்டவர்களின் ‘சிங்கள-பௌத்த’ எழுச்சிக்குப் பின்னர், ‘மஹாவம்சம்’ கருதப்படத் தொடங்கியது.   

 மஹாவம்சம் என்பது, அது கூறும் வரலாற்றுக் காலத்துக்குப் பின்னர், எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவாகும். ஒரு வரலாற்றுப் புனைவையே, வரலாற்றின் தோற்றுவாயாகவும் வரலாறாகவும் மாற்றியதுதான் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம்.   

ஏனென்றால், சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையே மஹாவம்சம்தான். மஹாவம்சம் கூறும் வரலாற்றுப் புனைவானது, சிங்கள-பௌத்த தேசியத்துக்கு, ஒரு ‘பயன்தரு கடந்த காலமாக’ அமைகிறது.

மஹாவம்சத்தின் முக்கியத்துவம் மிக்க அரசியல் சாரத்தை, வில்ஹெல்ம் கைகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, ‘மஹாவம்சம்: இலங்கையின் பெரும் வரலாற்றுக்கூறு’ என்ற நூலின், 25ஆம் அத்தியாயத்தின் 75ஆம் சரத்து பின்வருமாறு கூறுகிறது:  

 ‘முப்பத்திரண்டு தமிழ் மன்னர்களை வீழ்த்தியதும் துட்டகைமுனு, இலங்கையை ஒரே இறைமையாக ஆட்சிசெய்தான்’. 

தமிழ் ஆட்சியாளர்களை வீழ்த்தி, இலங்கையை ‘ஒற்றையாட்சி’ அரசாக ஆட்சி செய்தான் என்று மஹாவம்சம் கூறும் துட்டகைமுனு தான், மஹாவம்சத்தின் கதாநாயகன். 

உண்மையில் இலங்கைத் தீவு என்ற முழுமையையும் துட்டகைமுனு, ‘ஒரே இறைமையாக’ ஆண்டானா என்ற கேள்வி இங்கு அவசியப்படவில்லை. ஏனென்றால், ஒரு வரலாற்றுப் புனைவு, வரலாறாக்கப்பட்டது. அதன் மீது, திருமறையைப் போன்ற புனிதமிக்க நம்பிக்கை விதைக்கப்பட்டது. அதுகூறும், ‘கதாநாயகர்கள்’ புனிதர்கள் ஆக்கப்பட்டார்கள். இங்கே உண்மைக்கு அவசியமில்லாமல் போனது.   

இந்த மஹாவம்சம் மீது, அளவற்றதும் அதீத மோகமும் ஆர்வமும் ஜே.ஆருக்கு இருந்தது. இதற்கு அவர் எழுதி அரசாங்க அச்சக திணைக்களத்தின் வௌியீடாக வந்த இலங்கையின் வரலாற்றை கூறுவதாகச் சொல்லும் ‘தங்க இழைகள்’ (Golden Threads) என்ற நூலே சான்றாகும். ‘எங்கள் மண்ணின் கதையின் வரிவடிவம் இது...’ என்று தனது நூலை ஆரம்பிக்கும் ஜே.ஆர், இலங்கையின் வரலாற்றை, மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்.   

விஜயனின் வருகை முதல், பிரித்தானியர் முழு இலங்கைத் தீவையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவரும் 1815 வரை, கடந்த காலமாகவும் 1815 முதல் 1977 வரை தற்காலமாகவும், 1977 அதாவது 5/6 பெரும்பான்மையோடு ஜே.ஆரின் அரசாங்கம் பதவிக்கு வந்த ஆண்டு முதல், இலங்கையின் எதிர்காலமாகவும் வகைப்படுத்தி, இலங்கையின் வரலாற்றைத் தன்னுடைய பார்வையில் பதிவுசெய்கிறார்.   
ஆனால், அது இலங்கையின் வரலாறா என்பதுதான் இங்கு முக்கிய கேள்வியாகிறது. 
ஜே.ஆர் ஜெயவர்தன எழுதிய வரலாறு, மஹாவம்சத்தின் வழிதொடர்ந்த வரலாறு. அது, ‘சிங்கள-பௌத்தர்’களின் வரலாறு. அதை இலங்கையின் வரலாறாகச் சொல்வதானது, இலங்கையின் மற்றைய தேசங்கள், மற்றைய மக்களுக்கு இடமில்லை; அல்லது அவர்கள் இரண்டாம் தரமானவர்கள் என்று குறிப்பிடுவதற்கு ஒப்பானது.   

விஜயன் முதல், துட்டகைமுனு, பராக்கிரமபாகு என இலங்கையை ஆண்டவர்களைப் பட்டியலிட்ட ஜே.ஆர் அந்தப் பட்டியலின் இறுதியில் தன்னை இணைத்திருந்தார். 

இது பற்றிய தனது ஆய்வு நூலில், சங்கரன் கிருஷ்ணா, ‘ஜே.ஆர் தன்னை, இலங்கையை ஆண்ட இராஜவம்சத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார். மஹாவம்சம் கூறும் மன்னர்களைப் பிரதிபலிப்பதாகவே,தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.  பௌத்த ‘தர்மிஷ்ட’ ஆட்சியை வழங்குவேன் என்ற கொள்கை, பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுத்தல், அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஆகியவற்றை நகரங்களை இணைத்து, ‘பௌத்த தங்க முக்கோணம்’ பிராந்தியத்தைப் பலகோடிகள் செலவில் ஸ்தாபித்தமை ஆகியவற்றை, ஜே.ஆர் முன்னெடுத்திருந்தார்’ என்று கருத்துரைத்துள்ளார்.  

 தமிழர்களை ஜே.ஆர் அந்நியத் தன்மையுடனேயே விவரிக்கிறார். எல்லாளனையும் சோழ, பாண்டிய, பல்லவப் படையெடுப்புகளை ‘விரும்பத்தகாத இடையீடாகவும் அவற்றினூடான, இந்து மற்றும் மஹாயான பௌத்தம் ஆகியவற்றின் பெரும் செல்வாக்கையும் மீறி, தேரவாதப் பௌத்தம் நீடித்திருந்தமையைப் பெருமையாகவும் ஜே.ஆர் விளிப்பதைச் சுட்டிக்காட்டும் சங்கரன் கிருஷ்ணா, ஜே.ஆரின் இந்த அணுகுமுறையானது, ஒன்றுபட்ட சிங்கள தேசத்தைச் சிதைக்கும் இடையீடாகத் தமிழர்களை வர்ணிப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.   

கலிங்க மாகனை ‘புலி’ என்று வர்ணிக்கும் ஜே.ஆர், மாகனது படையெடுப்பின் பின்னர், இராச்சியமானது மலேரியா தாக்கிய பயனற்ற நிலமாகிப்போனது என்று குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டும் சங்கரன் கிருஷ்ணா, அந்தப் ‘புலி’ என்ற வர்ணிப்புக்குள் ஒளிந்துள்ள இனவாத விஷத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.   
மஹாவம்ச மனநிலை  

ஜே.ஆரின் ‘வரலாற்று’ நூலைப் படிப்பவர்களுக்குக் கிடைக்கும் விம்பமானது, இலங்கைத் தேசம் என்பது, சிங்கள தேசம் (சிங்கள-பௌத்த தேசம்) என்பதே என்ற புனைவாகும்; ஏனையவர்களுக்கு அதில் இடமில்லை. குறிப்பாகத் தமிழர்கள் விரும்பத்தகாத அந்நிய இடையீடாகவே பார்க்கப்பட்டார்கள்.  

 இதுபற்றிக் கருத்துரைக்கும் ஒரு விமர்சகர், “ஜே.ஆரின் தேசம் (ஜாதிய) பற்றிய வர்ணிப்பு, நாஸிகளின் ‘ஃவோக்ஸ்’ (மக்கள்) என்ற வர்ணிப்புக்குச் சமமானது. எப்படி நாஸிகள் ‘ஆரிய’ ஜேர்மனியரை மட்டுமே ‘ஃவோக்ஸ்’ என்று கருதினார்களோ, அதேபாணியில் ‘ஆரிய’ சிங்கள-பௌத்தர்களை மட்டுமே ‘ஜாதிய’ ஆக, ஜே.ஆர் கருதினார்’ என்கிறார்.  

 ஜே.ஆரின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு, அவரின் மனநிலையை, தத்துவார்த்த பார்வையை உணர்ந்துகொள்ளுதல் அவசியமாகிறது. பிராந்திய ரீதியிலான அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வொன்றை மிக எளிதாக ஜே.ஆர் வழங்கியிருக்கலாம்.   

அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதனூடாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வை ஜே.ஆர் எட்டியிருக்கலாம். ஆனால், அதைச் செய்வதிலிருந்து ஜே.ஆரைத் தடுத்தது எது என்ற கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, அவரின் தத்துவார்த்த அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுதல் உதவிசெய்யலாம்.  

 ஜே.ஆர் தன்னை, ‘மஹாவம்ச’ வரலாற்றின் தொடர்ச்சியாகவே பார்த்தார். கடந்தகால மஹாவம்சத்தின் கதாநாயகன் துட்டகைமுனு என்றால், எதிர்கால மஹாவம்சத்தின் கதாநாயகன் தானாக இருக்க வேண்டும் என்ற அவா, ஜே.ஆரிடம் இருந்ததை அவரது, ‘தங்க இழைகள்’ நூல் தௌிவாகச் சுட்டிக் காட்டுகிறது.  

 இங்கு துட்டகைமுனுவின் பெருமை என்பது, 32 தமிழ் மன்னர்களைத் தோற்கடித்து, இலங்கையை ‘ஒரு இறைமையாக’ ஆட்சி செய்ததில் தான் இருக்கிறது என்று மஹாவம்சம் சொல்வதால், சிங்கள-பௌத்தர்களின் பெருமைமிகு தலைவனாவதற்கு, தமிழ் மன்னர்களைத் தோற்கடித்தல், இலங்கையை ஓர் இறைமையின் கீழ் ஆட்சிசெய்தல் என்ற இரண்டு விடயங்களைத் திருப்தி செய்ய வேண்டிய தேவை, ஜே.ஆருக்கு இருந்திருக்கும்.   

பேச்சுவார்த்தை நடத்துவதாலோ, தமிழ் மக்களுக்குப் பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதாலோ இனப்பிரச்சினையை ஜே.ஆர் தீர்த்திருக்கலாம், இலங்கையை ஒற்றையாட்சிக்குள் ஆண்டிருக்கலாம்.  

 ஆனால், அடுத்த துட்டகைமுனு ஆக முடியுமா என்பது நிச்சயமில்லை. ஆகவே, அடுத்த துட்டகைமுனு ஆகும் ஜே.ஆரின் இரகசிய கனவுக்குப் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு உதவப் போவதில்லை என்பது, சர்வகட்சி மாநாடு மூலம் அரசியல் தீர்வொன்றை எட்டுவதில், ஜே.ஆர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததன் பின்னாலுள்ள மனநிலையை விளக்குவதாக அமைகிறது.   

மஹாவம்சம் என்பதை, இலங்கையின் முழுமையான வரலாறாகக் கொள்வது மிகச் சிக்கலானது எனப் பல்வேறு ஆய்வாளர்களும் மிகத் தௌிவாகக் கருத்துரைத்திருக்கிறார்கள்.  

 தற்காலத்தின் ‘சிங்கள-பௌத்த’ தேச அடையாளமானது, அநகாரிக தர்மபாலவின் பின்னரான கட்டமைப்பு என்பதை லெஸ்லி குணவர்த்தன, கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் மிகத்தௌிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். 

‘சிங்கள’ அடையாளம் என்பது, காலத்துக்குக் காலம் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.  

 எது எவ்வாறு இருப்பினும், ஒரு புனைவுக்குச் சாதகமானதொரு பார்வையை வழங்குவதனூடாக, அதைத் தமது கட்டமைப்பை நியாயப்படுத்த, ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும் என்ற ஷபீரோவின் கருத்துக்கேற்றாற் போல, மஹாவம்ச புனைவானது, சிங்கள தேசக் கட்டமைப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த மஹாவம்ச மனநிலைதான், இனப்பிரச்சினைக்கான அடிப்படையாகவும் அதைத் தீர்ப்பதற்கான முட்டுக்கட்டையாகவும் மாறியிருக்கிறது.

(அடுத்த திங்கட்ழைமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .