Thipaan / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூறாண்டை நிறைவு செய்யவுள்ள திராவிட இயக்கத்துக்கு தமிழகத்தில் பெரிய ஆபத்து உருவாகியிருக்கிறது. 1916ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமை சங்கம் தோன்றியது. அதிலிருந்து நீதிக் கட்சி, திராவிடர் கழகம் என்று அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டியது. பெரியாரின் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சென்னையில் உள்ள ரொபின்சன் பூங்காவில் தொடங்கினார்.
அதன் தளகர்த்தாக்களாக ஐம்பெரும் தலைவர்கள் அந்த மேடையில் காட்சியளித்தார்கள். காங்கிரஸ் ஆட்சி புரிந்த தமிழகத்தில் அக்கட்சியை தோற்கடித்து 1967இல் முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட இயக்கத்தின் அசல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அண்ணா மறைவுக்குப் பின்னர் கலைஞர் கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்து செயலாற்றி வருகிறார்.
தி.மு.க. பின்னர் பிளவுபட்டு எம்.ஜி.ஆர் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே இருந்த போட்டி அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேயான போட்டியாக மாறியது. 1977இல் தனது தோழனிடமே தி.மு.க. ஆட்சியைப் பறி கொடுத்தது. எம்.ஜி.ஆருக்கும், தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக எஸ்.டி.சோமசுந்தரம் 'நமது கழகம்' கட்சியை ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர் மறைவு, அ.தி.மு.க.வை பிளவு பட வைத்தது. 'ஜானகி அணி' என்றும் 'ஜெயலலிதா அணி' என்றும் அ.தி.மு.க. செயற்பட்டாலும் இறுதியில் 1991ஆம் ஆண்டு தேர்தலில், ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக உருவானது. ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்ட பின்னர் தி.மு.க. பிளவுபட்டது. அக்கட்சியிலிருந்து வைகோ விலக்கப்பட்டார்.
அதுவும், 'விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கலைஞர் கருணாநிதியைக் கொலை செய்ய திட்டம்' என்று வீண் பழி சுமத்தி வெளியேற்றப்பட்டார். அப்படித்தான், தி.மு.க.விலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதாவின் தலைமையை பிடிக்காமல் 'நால்வர் அணி' உருவானது.
'எம்.ஜி.ஆர் கழகம்' உருவானது. 'மக்கள் தி.மு.க.' உருவானது. 'எம்.ஜி.ஆர் அ.தி.மு.க' உதயமானது. இப்படி திராவிட இயக்கத்தின் சார்பில் புதுப் புதுக் கட்சிகள் உருவானாலும், இப்போது களத்தில் நிற்கும் இரு முக்கியக் கட்சிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். இந்த இரு கட்சிகளுமே தேர்தல் அரசியலில் தங்கள் கொள்கை கோட்பாடுகளை கைவிட்டு மற்றக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தன.
பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அக்கட்சியுடன் கூட்டணி வைத்து, ஆட்சியிலும் பங்கேற்றது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை 'எங்களுக்கு இயற்கையான கூட்டணிக் கட்சி' என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானியே கூறும் அளவுக்கு, அ.தி.மு.க.வை தங்கள் கொள்கைகளோடு இணங்கிப் போகின்ற கட்சி என்று பா.ஜ.க. கருதியது.
இந்த சூழ்நிலையில் திராவிட இயக்கத்துக்கு சரியாக அந்த இயக்கம் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப் போகின்ற நேரத்தில், கடுமையான போட்டி உருவாகியிருக்கிறது. 'அசல் திராவிட இயக்கம் நாங்கள்தான்' என்று கூறிக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்த கட்ட தலைமுறைக்குச் செல்லும் பயணத்தில் திக்கு முக்காடி நிற்கிறது.
சில தினங்களுக்கு முன்பு புகழ் பெற்ற லயோலாக கல்லூரி மாணவர்கள் ஓர் ஆய்வு நடத்தி அதை வெளியிட்டார்கள். அதில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. ஒன்றரை சதவீத வாக்குகள்தான் அதிகம் பெற்றிருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைச் சொன்னார்கள். முதல்வர் வேட்பாளர்களில் முதலில் ஜெயலலிதாவும், அடுத்து மு.க.ஸ்டாலினும், மூன்றாவதாக கருணாநிதியும் இருப்பதாக அந்த ஆய்வு வெளியானது.
இது தி.மு.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 'அடுத்த முதல்வர் ஸ்டாலின்' என்று எப்படி இப்படியொரு ஆய்வை வெளியிடலாம் என்று மதுரையில் இருந்து மு.க. அழகிரி குரல் கொடுக்க, ஸ்டாலினோ, 'நான் என்றைக்கும் என்னை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக் கொண்டதில்லையே' என்று மறுப்பறிக்கை விட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் இப்போது பிரச்சினை கட்சி நிர்வாகிகளால் அல்ல. குடும்பத்தில் உள்ளவர்கள் மத்தியிலேயே குடுமிபிடி சண்டை நடக்கிறது என்ற தோற்றத்தை இந்த 'அறிக்கைப் போர்' மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த 'தலைமைப் பதவிக்கு' போட்டி என்ற பனிப்போரில் இன்னும் ஸ்டாலின் தந்தையை வெல்ல முடியவில்லை என்பதே இன்றைக்கு தி.மு.க.வுக்குள் உள்ள 'கலவரமான' நிலவரம். அதனால்தான் வலுவான இயக்கமாக, எந்த சோதனை வந்தாலும் தாங்கும் இயக்கமாகத் திகழ்ந்த தி.மு.க. இன்றைக்கு மத்திய அரசைப் பார்த்தும் மாநில அரசைப் பார்த்தும் ஏன் தமிழகத்தில் உள்ள சின்னஞ்சிறு கட்சிகளைப் பார்த்துக் கூட பயந்து நிற்கிறது.
கூட்டணி நிலைப்பாடுகள், அடுத்து வரும் தேர்தலில் யாருக்கு எத்தனை சீட் கொடுக்கப்படும், யாருடன் எல்லாம் கூட்டணி என்று தி.மு.க.வின் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருக்கும் டி.கே. எஸ். இளங்கோவன் கொடுத்த பேட்டியை எட்டு மணி நேரத்துக்குள் மறுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் தள்ளாத வயது, மு.க. ஸ்டாலினை கட்சி ஏற்றுக் கொண்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை எல்லாம் தி.மு.க.வின் சக்தியை சரணாகதி அடைய வைத்துள்ளது.
இந்த திராவிட இயக்கத்தின் நிலைமை இப்படியென்றால் அ.தி.மு.க. பற்றி வேறு விதமான பிரச்சினைகள். அக்கட்சியின் தலைமை இப்போதைக்கு எந்த சவாலும் இல்லை. 'இது திராவிட இயக்கம்' என்று அக்கட்சியில் உள்ளவர்கள் அழுத்திப் பேசவில்லை என்றாலும், இப்போதைக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகமுள்ள கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. திராவிட இயக்கம் என்று வெளியில் காட்டிக் கொள்ளாத விதத்தில் அக்கட்சி ஜெயலலிதாவின் தலைமையில் செயற்பட்டு வருகிறது.
அதனால்தான் தி.மு.க.வுக்கு எப்படி காங்கிரஸ் கட்சி மத்தியில் இயற்கையான கூட்டணியாக இருக்கிறதோ அதே மாதிரி அ.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா தலைமைக்குப் பின்னர் பா.ஜ.க. இயற்கையான கூட்டாளியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சேதாரத்தில்தான் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முடியும் என்பது தேர்தல் பார்வையாளர்களின் கணிப்பு.
ஏனென்றால், தி.மு.க. வாக்கு வங்கி பெரிதாக பா.ஜ.க.வுக்கு வராது. ஆனால், இணக்கமான கொள்கையுள்ள அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பா.ஜ.க.வுக்கு வந்து சேரும் என்பது அவர்கள் எண்ணம். அதனால்தான் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு அக்கட்சி தலை மீது தொங்கும் கத்தி போல் இருக்கிறது. அந்த வழக்கில் வரும் தீர்ப்பின் அடிப்படையில் இன்னொரு திராவிட இயக்கமான அ.தி.மு.க.வின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.
இப்படி திராவிட இயக்கம் தொடங்கி நூறு வருடங்களை எட்டப் போகின்ற நேரத்தில், அந்த இயக்கத்தின் பிள்ளைகளாக இருக்கும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இப்படியொரு சோதனை வரும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இச்சூழலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பா.ஜ.க. 'திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக கூட்டணி' என்று குரல் எழுப்புகிறது. 'அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மாற்று நாம்தான்.
நம் தலைமையில் கூட்டணி அமையும்' என்று தே.மு.தி.க. தலைமை அறிவிக்கிறது. 'திராவிட இயக்கங்கள் என்ன சாதித்தது. தமிழகத்தை அழிவுப் பாதைக்குத்தான் கொண்டு போய் விட்டது' என்று கூறி, பாட்டாளி மக்கள் கட்சி தனி அணியாக 'நாங்கள்தான் மாற்று சக்தி' என்று முழக்கம் போடுகிறது. இவர்களையெல்லாம் விட, 'தமிழ்நாட்டில் மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்குமே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான் காரணம்' என்று கூறி, இடது சாரி கட்சிகள் ஐவர் கூட்டணி ஒன்றை அமைத்து தனி ஆவர்த்தனம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள வாக்கு இடைவெளியைப் பயன்படுத்தி, சின்னஞ்சிறு கட்சிகள் எல்லாம் திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று புறப்பட்டுள்ளன.
திராவிட இயக்கம் தோன்றி, ஆட்சியைப் பிடித்த பிறகு திராவிட இயக்கங்களுக்கு இதுமாதிரி அச்சுறுத்தல் மூன்று முறை வந்திருக்கிறது. முதல் முறை 1977ல் வந்தது. அப்போது கருணாநிதி, எம்.ஜி.ஆர், காமராஜர், பா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் களத்தில் இருந்தார்கள். அந்த முயற்சி தோற்றது. வலுவிலந்திருந்த தி.மு.க.வை வலுவான திராவிட இயக்கத்தின் பிரதிநிதியாக அ.தி.மு.க. சார்பில் நின்ற எம்.ஜி.ஆர் வென்றார்.
அடுத்து 1989ல் இதே மாதிரி அச்சுறுத்தல் வந்தது. அப்போது ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு 13 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், அன்றைக்கு ஜெயலலிதா தலைமையில் பிளவுபட்டு நின்றது அ.தி.மு.க. என்றாலும், வலுவாக இருந்த தி.மு.க.வின் திராவிட இயக்கப் பிரநிதியாக இருந்த கருணாநிதி வெற்றி வாகை சூடினார். இந்த முறை அதே மாதிரி 2016ல் அப்படியொரு அச்சுறுத்தல் திராவிட இயக்கத்துக்கு வருகிறது.
இதை வெல்லும் நிலையில் தி.மு.க. இருக்க வேண்டும். ஆனால், அக்கட்சி தலைமைப் பொறுப்பு, முதல்வர் பதவி ஆகியவற்றில் உள்ள குழப்பத்தால் முடங்கிப் போய் நிற்கிறது. இந்நிலையில் இப்போது ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சியைப் பிடித்து, நூறாண்டு விழா கொண்டாடும் திராவிட இயக்கத்துக்கு வந்துள்ள சோதனையை தீர்க்குமா அல்லது உள்கட்சி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு தி.மு.க.வே வலுவாக களத்தில் நின்று திராவிட இயக்கத்தை காப்பாற்றுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் அதன் எதிர்காலம் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் கையில் போய் நிற்கிறது. யார் வெல்லுவார்கள் என்பதை 2016 தேர்தல் களம் முடிவு எடுக்கும்.!
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago